தீக்கனவும் நற்கனவும்

ஆணை விட பெண்ணுக்கு உள்ளுணர்வு அதிகம் என்று பெண்கள் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். ஆம்.

“ஒங்க நண்பரோட முழியே சரியில்ல. அவரோட பழகாதிங்க” என்று சொல்லி சண்டையைக் கிளப்பும் மனைவியரும் உண்டு. பெரும்பாலும் அவர்கள் சொல்வது உண்மையாக இருந்துவிடும். அதற்குப் பிறகு “அன்னைக்கே சொன்னேன்ல” என்று இன்னொரு சண்டை கிளம்பும்.

உப்பை சிந்தி விட்டாலோ கண்ணாடிப் பாத்திரத்தை உடைத்து விட்டாலோ தயிர் உறையாவிட்டாலோ பதறிப் போவதென்னவோ பெண்கள்தான். அதீத பயம் என்று எளிதாக அந்தப் பதட்டத்தைப் புறந்தள்ள முடியாது. ஏனென்றால் அந்தப் பதட்டங்களுக்குப் பின்னால் இருப்பது குடும்ப அக்கறை.

இதையெல்லாம் விட கனவுகள் அவர்களைப் பாடாய்ப் படுத்திவிடும். கனவு நல்லவிதமாக இல்லாவிட்டால் அடுத்து ஒரு செயலைச் செய்யவே அச்சப்படுவார்கள்.

இந்த அச்சத்தை வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் ஒரு பாடலாக கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியன் கொடுத்திருந்தார்.

கட்டபொம்மனை அழிக்க வேண்டுமென்று வெள்ளைக்காரன் படையெடுத்து வருகிறான். போர் முரசு கொட்டி விட்டார்கள். பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் எல்லாம் போருக்குப் புறப்படுகிறார்கள். வெள்ளையத்தேவனும் புறப்படுகிறான். அவனுடைய மனைவி வெள்ளையம்மான் அவனைப் போகவிடாமல் தடுக்கிறாள். ஏனென்றால் அவள் கண்டது பொல்லாத சொப்பனம்.

போகாதே போகாதே என் கணவா
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்
கூந்தல் அவிழ்ந்து விழவும் கண்டேன் – அய்யோ
கொண்டையில் பூவும் கருகிடக் கண்டேன்
கொண்டையில் பூவும் கருகிடக் கண்டேன்
ஆந்தை இருந்து அலறக் கண்டேன்
யானையும் மண்ணிலே சாயக் கண்டேன் – பட்டத்து
யானையும் மண்ணிலே சாயக்கண்டேன்

இப்படி வரிசையாகச் சொல்கிறாள் வெள்ளையம்மாள். கண்ணீர் விட்டுத் தடுக்கிறாள். ஆனாலும் கேட்காமல் போகிறான் வெள்ளையத்தேவன். போரின் முடிவு தமிழ் மண்ணுக்கு எதிராகவே அமைந்து விடுகிறது. வெள்ளையத்தேவன் வீரசுவர்க்கம் போகிறான். அவன் வழியே வெள்ளையம்மாளும் போய்விடுகிறாள்.

தமிழ் பெண்கள் இன்று நேற்றல்ல… ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே கனவு கண்டுகொண்டுதான் இருக்கிறார்கள். அதையும் ஒரு சங்கப் பாடல் சொல்லும். சங்க காலத்தில் அமங்கலங்களாகக் கருதப்பட்ட கனவுகள் எவையெவை என்று பார்க்கலாமா?

திசையிரு நான்கு முற்க முற்கவும்
பெருமரத், திலையி னெடுங்கோடு வற்றல் பற்றவும்
வெங்கதிர்க் கனலி துற்றவும் பிறவும்
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குர லியம்பவும்
எயிறுநிலத்து வீழவு மெண்ணெ யாடவும்
களிறுமேல் கொள்ளவுங் காழக நீப்பவும்
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்
திணை – வஞ்சி; துறை – கொற்றவள்ளை.
பாடல் – காலனுங் காலம் பார்க்கும்
நூல் – புறனானூறு
பாடியவர் – கோவூர்கிழார் பாடியது

பாட்டின் ஆழமான பொருளுக்குப் போகாமல் பாட்டில் தீய கனவுகளாக சொல்லப்படுகின்றவைகளை இங்கு விவரிக்கிறேன்.

திசை இரு நான்கு முற்க முற்கவும் – இரு நான்கு என்பது எட்டு. எட்டுத் திசைகளிலும் கொள்ளி விழுந்து பற்றியதாம்
பெருமரத்திலையின் நெடுங்கோடு வற்றல் பற்றவும் – ஓங்கி வளர்ந்து இலைகளை உதிர்த்து விட்டு வற்றலாய் நிற்கும் மரம் தீப்பற்றி எரிந்தது
வெங்கதிர்க் கனலி துற்றவும் – பகலவன் சுடர் விட்டு நெருப்பாய்க் கொளுத்தியது
பிறவும் அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரலியம்பவும் – மற்றும் அஞ்சுகின்ற பறவைகள் அந்த அச்சத்தை வெளிப்படுத்தி ஓலியெழுப்பின
எயிறு நிலத்து வீழவும் – பல் உடைந்து நிலத்தில் வீழ்ந்தது
எண்ணெய் ஆடவும் – கனவில் தலையை விரித்து எண்ணெய் தேய்த்து தலை முழுகுவது போலவும்
களிறுமேல் கொள்ளவும் – பன்றி சிங்கத்தைப் புணரவும்
காழக நீப்பவும் – ஆடைகள் அவிழ்த்து அம்மணமாய் இருப்பதும்
வெள்ளி நோன்படை கட்டிலொரு கவிழவும் – சிறந்த படைக்கலன்கள் அவைகள் அடுக்கப்பட்டிருந்த கட்டிலோடு (அலமாரி) கவிழ்ந்து விழுந்தது.

மேலே உள்ளவை அந்தக் காலத்தில் தீய கனவுகளாகக் கருதப்பட்டன. இப்படி பழந்தமிழரின் நம்பிக்கைகளை தெரிந்து கொள்வதும் சுவையாகத்தான் இருக்கிறது.

பதிவில் இடம் பெற்ற பாடல்
பாடல் – போகாதே போகாதே என் கணவா
வரிகள் – கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம்
பாடியவர் – ரத்னமாலா
இசை – ஜி.இராமநாதன்
படம் – வீரபாண்டிய கட்டபொம்மன்
பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=a861UAQfX0w

அன்புடன்,
ஜிரா

269/365