கங்கை தலையினில் மங்கை இடையினில்
நண்பர் @nchokkan னுடன் பேசிக்கொண்டிருந்தபோது ‘ஜனனி ஜனனி ஜகம் நீ’ பாடல் வரிகள் பற்றி அவருடைய நண்பர் கேட்டதாக ஒரு கேள்வி எழுப்பினார். சிவன் அக்னி வடிவம். அடிமுடி காணாத ஜோதிஸ்வரூபம். ஆனால் கவிஞர் வாலி பாடலின் முதல் சரணத்தில் http://www.youtube.com/watch?v=PFPX9OgqEG4
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே..
நின்ற நாயகியே இட பாகத்திலே..
என்ற வரிகளில் ஏன் குளிர் தேகத்திலே என்று சொல்கிறார்?
சிவபெருமான் உஷ்ணமான திருமேனியை உடையவர். அந்த நெருப்பின் கடுமை குறையவே குளிர்ச்சியான திருக்கயிலையை இருப்பிடமாகக் கொண்டிருக்கிறார். மேலும் தேவலோகத்திலிருந்து கங்கை பூமிக்கு வரும் பொழுது எழும் பிரவாகத்தினை கட்டுப்படுத்தி தன் சடாமுடியில் தாங்கி பூமி தாங்கும் அளவில் மட்டும் வெளிவிட்டார். இருப்பது கயிலையில், கங்கையின் பிரவாகம் தலையில் என்னும்போது குளிர் தேகம் என்பது சரிதானே?
விஷ்ணு அலங்காரப் பிரியர். அனுமன் ஸ்தோத்திரப் பிரியர். சிவ பெருமான் அபிஷேகப் பிரியர். தன்னைத் துதித்துச் செய்யப்படும் அபிஷேக ஆராதனைகளால் மனம் மகிழ்ந்து வேண்டியதை தருபவன். சிவபெருமானுக்கு என்னென்ன பொருட்களால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதை அண்ணாமலைச் சதகம் என்ற நூல் சொல்கிறது. பேரொளி மயமான அவன் திருமேனி குளிர்ந்தால், அண்ட சராசரங்களும் குளிர்ந்து, காலம் தவறாமல் மழை பொழிந்து, பயிர்கள் நல்ல முறையில் விளைந்து உலகை வாழ்விக்கும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து அபிஷேகங்கள் என்னும்போது குளிர் தேகம் என்பது சரிதானே?
நீரும் நெருப்பும் மட்டுமல்லாமல் ‘இருநிலனாய்த் தீயாகி நீருமாகி’ என்ற தேவாரப் பாடல் பரமசிவனின் எட்டு வடிவங்கள் சொல்லும். பஞ்சபூதங்களுக்கும் உரிய தலங்களில் அமைந்துள்ள சிவாலயங்களில், மூலவர் பஞ்ச பூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகிறார். இதில் திருவானைக்கா நீர்த்தலம் ஆகும். மூலஸ்தான லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
Phosphorus என்ற பொருள் பற்றி நாம் படித்திருக்கிறோம். இது நீரில் கரைவதில்லை. காற்றில் தானாக எரியும் தன்மை உடையது. எரிவதற்கான தாழ்ந்த வெப்ப நிலை ஏறக்குறைய அறை வெப்ப நிலையாக இருப்பதால் இதை நீரில் இட்டு வைத்திருப்பார்கள். சிவனும் எப்போதும் ஒரு அபிஷேக mode ல் இருப்பதால் குளிர் தேகம் என்பது சரிதானே?
இருக்கும் இடத்தையும் தன் மேனியையும் குளிர்விக்க எல்லா ஏற்பாடுகளும் செய்த பிறகே உமையவளுக்கு இட பாகத்தை அளிக்கிறான். அட!
மோகனகிருஷ்ணன்
268/365
amas32 4:59 pm on August 27, 2013 Permalink |
கர்நாடகாவில் பல கோவில்களில் மேலிருந்து சொட்டு சொட்டாக நீர் லிங்கத்தின் மேல் படும்படியாக ஒரு சொம்பில் துளையிட்டு மேலே கட்டி வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். சிவபெருமானை சதா குளிர்விக்க நல்ல ஒரு வழி. திருமாலோ பாற்கடலில் பள்ளிக் கொண்டிருப்பவன். சிவன் சுடும் மயானத்தில் மகிழ்ச்சியாக இருப்பவன். அதனால் வெளி உபகரணங்களால் தான் அவனை குளிர்விக்க வேண்டும்.
amas32
rajinirams 2:52 pm on August 29, 2013 Permalink |
குளிர் தேகத்திலே என்ற வார்த்தைக்கான தங்களின் விரிவாக்கம் அருமை. amas32 அவர்கள் கூறியதை போல இங்கு எல்லா கோவில்களிலுமே இறைவனை குளிர்விக்கிரார்கள்.கவிஞர் வாலியின் இந்த பாடலை ராஜா ஸ்பஷ்டமாக உச்சரித்து பாடும்போது மெய் சிலிர்க்கும் என்பது உண்மை.நன்றி.