நெஞ்சை அள்ளும் முன்னுரை

  • படம்: மகாநதி
  • பாடல்: ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், உமா ரமணன், ‘மகாநதி’ ஷோபனா
  • Link: http://www.youtube.com/watch?v=itZ1ESboqOk

அந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கிவைத்தனர் ஆலயம்,

அம்மாடி என்ன சொல்லுவேன், கோயில் கோபுரம் ஆயிரம்,

தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வப் பூந்தமிழ்ப் பாயிரம்

வாலியின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று இது. சொந்த ஊரைப்பற்றிய பாடல் என்பதாலோ என்னவோ, மனிதர் ரவுண்டு கட்டி விளையாடியிருப்பார். ஒவ்வொரு சொல்லும் அத்துணை அருமையாக வந்து உட்கார்ந்திருக்கும், ஒன்றை எடுத்துவிட்டு இன்னொன்றை வைப்பது சாத்தியமே இல்லை.

அச்சுப்பிச்சு தங்கிலீஷ் வரிகளுக்காக வாலிமீது குற்றம் சாட்டுபவர்கள் அவருடைய இதுபோன்ற பாடல்களை ஒருமுறையாவது நிதானமாகக் கேட்கவேண்டும். இப்படியும் எழுதக்கூடியவர்தான் அவர். பிறகு அவர் கொட்டிய குப்பைகளுக்குக் கேட்டவர்கள் பொறுப்பா, எழுதியவர் பொறுப்பா?

அது நிற்க. நாம் குறை சொல்லாமல் நல்லதைத் தேடி ரசிப்போம், இந்தப் பாடலைப்போல.

ஸ்ரீரங்கத்தில் தொடங்கினாலும், அங்கே நின்றுவிடாமல், பொதுவாகவே சோழ மண்ணின் வர்ணனையாக அமைந்த பாட்டு இது. அன்றைய ஆலயங்களின் கோபுரங்களை வர்ணித்த கையோடு, அவற்றில் நுழையும்போது கேட்கும் தேவாரம், திருவாசகம், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், திருப்புகழ் போன்ற தெய்வப் பூந்தமிழ்ப் பாடல்களைக் குறிப்பிடுகிறார் கவிஞர்.

கொஞ்சம் பொறுங்கள், அவர் பாடல்கள் என்று சொல்லவில்லை. ‘பாயிரம்’ என்கிறார். அதற்கு என்ன அர்த்தம்?

இப்போது எல்லாருக்கும் புரியும்படி சொல்லவேண்டுமானால், ‘முன்னுரை’ அல்லது ‘அறிமுக உரை’ என்று சொல்லலாம். அன்றைய கவிஞர்கள் ஒரு நூல் எழுதினால், அதற்குள் என்ன இருக்கிறது என்று விளக்கும்விதமாகப் ‘பாயிரம்’ என்கிற முன்னுரையைப் பாடல் வடிவிலேயே எழுதிச் சேர்ப்பார்கள். இந்தப் பாயிரத்தை நூலின் ஆசிரியரே எழுதலாம், அல்லது, அவருடைய நண்பரோ, சிஷ்யரோ, குருநாதரோகூட எழுதலாம். வாசகர்களுக்கு நூலைச் சரியாக அறிமுகப்படுத்தவேண்டும். அதுதான் நோக்கம். ஆர்வமுள்ளோர் இந்த இலக்கணத்தை முழுமையாகப் படிக்க இங்கே செல்லுங்கள்: http://365paa.wordpress.com/2012/05/07/306/

ஆனால் ஒன்று, ஒருவர் வெறுமனே பாயிரத்தைப் படித்தால் போதாது. நூலையும் படிக்கவேண்டும்.

நிலைமை அப்படியிருக்க, இங்கே வாலி ‘பாயிரம்’ என்ற சொல்லை எடுத்துப் பயன்படுத்தவேண்டிய அவசியம் என்ன? அது ‘ஆயிரம்’க்கு எதுகை, இயைபாக இருக்கிறது என்பதால்மட்டுமா?

இருக்கலாம். ஆனால் எனக்கு இதை எப்படிப் பார்க்கத் தோன்றுகிறது என்றால், கடவுளைப்பற்றி எத்துணை பாடல்கள் பாடப்பட்டாலும் சரி, அவையெல்லாம் வெறும் பாயிரம்தான், அறிமுகம்தான். அவற்றைப் படித்தால் முழு அனுபவம் கிடைக்காது. கோயிலுக்குள் சென்று இறைவன் முன்னே கை கூப்பி நிற்கும்போது நாம் அடையப்போகும் அந்த உணர்வுதான் நிஜமான கவிதை.

***

என். சொக்கன் …

25 08 2013

267/365