கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
இந்த ஆடி மாதம் சென்னையில் சென்ற இடமெல்லாம் சாலையோரம் பந்தல் , சீரியல் விளக்கு அலங்காரம் எல்லாம் அமைத்து பூஜைகள் நடப்பதைப் பார்த்தேன். இதில் சில ஆட்டோ ஸ்டாண்டை ஒட்டி சின்ன இடத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி மட்டும் வைத்து கட்டப்பட்ட makeshift கோவில்கள். நம்பிக்கையுடன் பலர் கூடியிருந்தனர்.
Never question someone’s faith என்று சொல்வார்கள். ஆனால் சிவவாக்கியர் என்ற சித்தர் கேள்வி எழுப்பினார்
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ
தெய்வம் நமக்குள்ளே இருக்கும்போது ஏன் கல்லை வணங்கவேண்டும் என்கிறார். நடிகர் விவேக் ஒரு படத்தில் மைல் கல்லை வணங்கும் கூட்டத்திடம் இதே கேள்வியை எழுப்புவார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் அடிக்கடி ‘கடவுள் என் கல்லானான்’ என்ற கேள்வியை எழுப்புவது வழக்கம்.
கண்ணதாசன் இது நம்பிக்கை சார்ந்த விஷயம் என்கிறார். பார்த்தால் பசி தீரும் படத்தில் உள்ளம் என்பது ஆமை என்ற பாடலில் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் டி எம் எஸ்)
http://www.youtube.com/watch?v=Jicjjb8Co7k
தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
வாலியும் இது அவரவர் பார்வை சம்பந்தப்பட்ட விஷயம் என்கிறார். தசாவதாரம் படத்தில் (இசை ஹிமேஷ் ரெஷாம்மியா பாடியவர் ஹரிஹரன் )
http://www.youtube.com/watch?v=GiLjLX03jWY
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது,
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது..
ஹாஸ்டலில் தனியாக தங்கிப் படிக்கும் மூன்று மாணவர்கள். ஒருவன் தன் தாயின் ஞாபகம் வரும்போது புகைப்படத்தைப் பார்த்துக்கொள்வான். இன்னொருவன் தாயின் புடவையை தன் பெட்டியில் வைத்துக்கொண்டிருப்பான். மூன்றாமவன் எந்த ஒரு பொருளின் துணையும் இல்லாமல் தாயை நினைத்துக்கொள்வான். எல்லாரும் தாயை நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் கடைப்பிடிக்கும் வழி வேறு. (சோ சொன்ன விளக்கம் என் வார்த்தைகளில்)
அதே போல் கல்லாய் வந்தவன் கடவுளடா என்று வழிபடுவதும் சரிதானே?
மோகனகிருஷ்ணன்
265/365
amas32 7:20 pm on August 23, 2013 Permalink |
மகர தீபத்தைக் கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை என்று கூறுவர்!
கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்பது நாயை அடிக்கக் கல் இருக்கும்போது நாய் தென்படாது, நாய் தென்படும்போது கல் கிடைக்காது என்பது அல்ல பொருள். கற்சிற்பத்தில் நாயை மட்டும் நாம் கவனிக்கும் பொழுது கல்லை நாம் கவனிக்கமாட்டோம். கல்லாக பார்த்தால் நாய் தெரியாது.
அப்படித்தான் சிலையாக நினைத்தால் சிலை, இறைவனாக நினைத்தால் இறைவன்.
amas32
successfulsathya 10:15 am on August 24, 2013 Permalink |
சூப்பர் மச்சி
rajinirams 1:26 am on August 25, 2013 Permalink |
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே என்று குழந்தையின் புன்னகையை குறித்த வாலியின் வரிகளும் ஏழையின் சிரிப்பில் இறைவன் என்ற வாலியின்(அண்ணா)வரிகளையும் நினைவுபடுத்திய நல்ல பதிவு.