வாடகை என்ன தரவேண்டும்?

  • படம்: கள்வனின் காதலி
  • பாடல்: குடக்கூலி கொடுத்தாச்சு
  • எழுதியவர்: வாலி
  • இசை: யுவன் ஷங்கர் ராஜா
  • பாடியவர்கள்: அனுஷ்கா, ப்ரேம்ஜி அமரன்
  • Link: http://www.youtube.com/watch?v=lkTfXr-dP6U

குடக்கூலி கொடுத்தாச்சு, இதுதான் உன் வீடு!

குடியேறு, குதிச்சாடு, இனிமேல் உன் பாடு!

இந்த வரிகளில் மற்றதெல்லாம் புரிகிறது. அதென்ன ‘குடக்கூலி’?

வாடகையைதான் பேச்சு வழக்கில் குடக்கூலி என்று சொல்வார்கள். ஆனால் இந்தச் சொல் மிக மிக அபூர்வமாகவே திரைப்பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து இந்த ஒரு பாடலில்மட்டும்தான்.

’குடக்கூலி’ என்பதில் வரும் குடம், நாம் தண்ணீர் பிடிக்கும் குடம்தானா? ஒருவேளை அன்றைய தமிழகத்தில் வீட்டில் வாடகைக்கு வருகிறவர்கள் மாதாமாதம் ஒரு குடம் நிறைய அரிசி தரவேண்டும் என்பதுபோல் ஏதாவது வித்தியாசமான பண்டமாற்று அமலில் இருந்திருக்குமோ?

அதெல்லாம் ஒன்றுமில்லை. ‘குடிக்கூலி’ என்பதுதான் சரியான வார்த்தை. அதாவது, இன்னொருவருடைய வீட்டில் நாம் குடியிருப்பதற்காக வழங்கப்படும் கூலி. அது பின்னர் சிதைந்து குடக்கூலி என்று மாறிவிட்டது.

அதேபோல், ‘மணத் தக்காளி’ என்பது கொச்சை வார்த்தை என இன்றுதான் தெரிந்துகொண்டேன். அது ‘மணித் தக்காளி’ (மணிபோன்ற வடிவத்தில் இருக்கும் தக்காளி போன்ற காய்) என்பதன் மரூஉ என்று தோழி ப்ரியா கதிரவன் விளக்கினார்.

குடக்கூலி, மணத் தக்காளி இரண்டுமே தவறான சொற்களாக இருக்கலாம். ஆனால் நம்முடைய கற்பனையை நன்கு கிளறிவிடுகிற சொற்கள்!

***

என். சொக்கன் …

22 08 2013

264/365