நடந்தாய் வாழி

போன வாரம் சென்னை கம்பன் கவிமன்றம் சந்திப்பில் நண்பர் @RagavanG காப்பிய இலக்கணம் என்ன என்பதை விளக்கினார்.   தொடர்ந்து பல விஷயங்களை பேசும்போது, கம்பன் சரயூ நதியை விவரிக்கும் அழகை குறிப்பிட்டார்.  காப்பிய இலக்கணம் பற்றி மேலே படிக்கலாம் என்று தேடியபோது தண்டியலங்காரம் கண்ணில் பட்டது.

பெருங்காப் பியநிலை பேசுங் காலை

வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன்று

ஏற்புடைத் தாகி முன்வர வியன்று

நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்

தன்னிகர் இல்லாத் தலைவனை யுடைத்தாய்

மலைகடல் நாடு, வளநகர் பருவம்

இருசுடர்த் தோற்றமென்று இனையன புனைந்து

என்று தொடங்கி தெளிவான இலக்கணம் வகுக்கிறது. அப்புறம் லேசாக மனமிறங்கி ‘கூறிய உறுப்பிற் சிலகுறைந் தியலினும்’ என்று ஒரு விதிவிலக்கு அளிக்கிறது. இந்த விதியில்

தன்னிகர் இல்லாத தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

மலை, கடல், நாடு, நகர், ஆறு பருவங்கள், கதிரவன் தோற்றம், சந்திரனின் தோற்றம் ஆகியவற்றைப் பற்றிய வருணனைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

என்ற விளக்கம் படித்தவுடன் ஏனோ எனக்கு சம்பந்தமேயில்லாமல் இதயக்கனி படத்தில் புலமைப்பித்தன் எழுதிய நீங்க நல்லாயிருக்கோணும் என்ற பாடல் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் சீர்காழி கோவிந்தராஜன் எஸ் ஜானகி டி எம் எஸ்’) நினைவுக்கு வந்தது. http://www.youtube.com/watch?v=Fi_I4UgfOAA  இதுவும் ராமச்சந்திரன் என்ற நாயகன் பற்றிய பாடல்தான்.  இதிலும் மலை, ஆறு , நாடு, நகர் என்று ஒரு Reference இருக்கிறது.  பாடலின் துவக்கத்தில் வரும் வரிகள்

தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்

கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி

தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி

ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர

நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்

வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட

கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று

அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து

கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்

தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்

தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்

காவிரியை வர்ணிக்கும் விதம் அருமை. இந்த நதியைப்போல்  எங்கள் வாழ்வை வளமாக்கும் தலைவா நீங்க நல்லாயிருக்கோணும் என்று பாடும் பாடல்

செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி

கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்

பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே

வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி

எங்கள் இதயக் கனி இதயக் கனி

நீங்க நல்லாயிருக்கோணும்

ஒருவேளை புலமைப்பித்தன் எம்ஜிஆர் என்ற ஜானகி மணாளனைப் பற்றி காப்பியம் எழுதலாம் என்று ஆரம்பித்தாரோ? தெரியவில்லை

மோகனகிருஷ்ணன்

262/365