விருந்தினர் பதிவு : கொக்கும் மீனும்

முற்காலத்து பாவலர்கள் அவதான அரசர்(சி) போலும். அக்காலத்தில் அவர்களைத் திசைதிருப்ப தொலைக்காட்சி பெட்டி, செல்ஃபோன் அல்லது மோட்டார் வாகனமோ இல்லை. எங்கும் பயணம் செய்ய வேண்டுமாயின் கட்டைவண்டி கட்ட வேண்டும் அல்லாவிடின் “நடைராசா” தான். நடந்து திரிவதால் இயற்கையை அவதானிக்க அவர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் உண்டு. ஆற்றங்கரை, நீர் நிலைகள், மலைச்சாரல்கள்  போன்ற இயற்கையான இடங்களில் நன்றாக நேரம் செலவிட்டு முதலை, கொக்கு, கூகை, காக்கை, போன்ற உயிரினங்களை நன்றாக நோட்டம் விட்டு அவைகளின் நடத்தைகளை பாடல்களில் பதித்தனர்.

அவதானிப்பில் திருவள்ளுவர் சார்ல்ஸ் டார்வினுக்கு முன்னோடி. முன்னவர் இலக்கியமுறையில் வர்ணனை இளையவர் விஞ்ஞானத்திற்கு ஆய்வு. இவர்களுக்கு முன் கிரேக்க ஈசாப்பின் கதைகளில் கூட (Aesoph’s fables) மிருகங்களும் பறவைகளும் தான் கதாநயகர்கள்.

இந்த வரிசையில் நீதி நூல்களில் வரும் கொக்கு- மீன் உறவு பற்றி பார்ப்போம்:

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து.  (அதிகாரம்: காலம் அறிதல் – திருக்குறள் 490)

 

காலம் கை கூடும் வரையில் நீர்க்கரையில் உள்ள கொக்கு போல் ஒதுங்கி இருந்து சந்தர்ப்பம் வாய்க்கும்போது குறி தவறாமல் தாக்கி வெல்ல வேண்டும் என்பது திருவள்ளுவரின் அறிவுரை.

அடக்க முடையார் அறிவிலரென் றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்ட- மடைத்தலையில்

ஓடுமீன் ஓட உருமீன் வருமளவும்

வாடியிருக்குமாம் கொக்கு  (மூதுரை 16)

 

அமைதியாக, பணிவடக்கமாக இருப்பவர்களை அறிவில்லாதவர்கள் என்று மட்டும் நினக்காதீர்கள். அவர்கள் நீரோடையில் பெரிய மீன் வரும் வரையும் வாடியிருக்கும் கொக்குபோல் இருப்பவர்கள் என எச்சரிக்கிறார் ஔவைப் பிராட்டியார்.

திரைப்பட பாடலாசிரியர்கள் காட்சிக்கு தகுந்தது மாதிரி பாடல் எழுதும்போது தமிழ் இலக்கியத்தோடு தமது கற்பனை கைச்சரக்குகளையும் கலப்பது சகஜம். அந்த வகையில் – இந்த கொக்கையும் மீனையும் வைத்து எப்படி பந்தாடியுள்ளார்கள் என்று பார்ப்போம்.

 

1.     கவிஞர் கண்ணதாசன்:

1.1    விரக்தியை பிரதிபலிக்க எழுதிய பாடல்

“குளத்திலே தண்ணியில்லே, கொக்குமில்லே மீனுமில்லே

              பெட்டியிலே பணமில்லே, பெத்தபிள்ளை சொந்தமில்லே”

 

பாடல் : யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க..

திரைப்படம்: எங்க ஊரு ராஜா (1968)

இசை: M.S. விஸ்வநாதன்

பாடியவர்:T.M. சவுந்தரராஜன்

பாடல் சுட்டி: http://www.youtube.com/watch?v=vdU9LdY4wGY

 

 

1.2          வந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பயன்படுத்த: 

             

              “கொக்கை பார்த்து கற்றுக் கொள்ளு வாழ்வு என்ன என்பதை,

              கொத்தும்போது கொத்திக் கொண்டு போக வேண்டும் நல்லதை”

 

              பாடல்: அடி என்னடி உலகம் இது எத்தனை…

திரைப்படம்: அவள் ஒரு தொடர் கதை (1972)

இசை: மெல்லிசை மன்னர் MS .விஸ்வநாதன்

பாடியவர்: L.R. ஈஸ்வரி

பாடல் சுட்டி: http://www.youtube.com/watch?v=JMoH_zRU0r0

            

1.3    மகனுக்கு அறிவுரை கூறும்காட்சியில் :

“ கொள்ளும் கொள்கையில் குரங்காக

கொடுமையைக் கண்டால் புலியாக

              குறி வைத்துப் பார்ப்பதில் கொக்காக”

              குணத்தில் யானையின் வடிவாக…”

 

பாடல்: கேளாய் மகனே கேளொரு வார்த்தை

திரைப்படம்: உத்தமன் (1976)

இசை: திரை இசை திலகம் K.V. மகாதேவன் (உதவி: புகழேந்தி)

பாடியவர்:T.M. சவுந்தரராஜன்

பாடல் சுட்டி:  http://www.youtube.com/watch?v=hF98K5ToYUU

 

2.     கவிப் பேரரசு வைரமுத்துவின் பாணி:

எதிர்மாறாக கேள்வி கேட்பது போல் வம்புக்கு இழுக்கும் பாடல்:

“அறுகம் புல்லுக்கு அறுக்கத் தெரியுமா?

வளர்ந்த குமரி நான் ஆமா

அயிரை மீனுதான் கொக்கை முழுங்குமா? அடுக்குமா?…“

 

பாடல்: அழகான ராட்சசியே

திரைப்படம்: முதல்வன் (1998)

பாடலாசிரியர்: வைரமுத்து

இசை: A.R.ரகுமான்

பாடியவர்:SP பாலசுப்ரமணியம், ஹரிணி, GV பிரகாஷ்

பாடல் சுட்டி:  http://www.youtube.com/watch?v=5sp3EgcJXbo

 

பிற்பதிவு: வேறு கொக்கு-மீன் வரிகள் பாடல்களில் தெரிந்தால் தயவு செய்து நீங்களும் பினோட்டத்தில் குறிப்பிடுங்கள்.

நன்றியுடன்

சபா- தம்பி

சபா-தம்பி பிறந்து வளர்ந்தது இலங்கையில். கால் நூற்றாண்டு காலத்துக்குமுன்னால் ஆஸ்திரேலியாவில் குடியேறியவர், தற்போது பெர்த் நகரத்தில் வசிக்கிறார். தமிழார்வம் ஏராளம், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆங்கிலத்தில்மட்டுமே எழுதிவந்திருக்கிறார், கண்ணதாசனும் #4VariNoteம் தந்த ஊக்கத்தில் தமிழிலும் எழுதத் தொடங்கியுள்ளார்.

Twitter: @SabaThambi