விளக்கு வைத்தேன்

  • படம்: திருமலை தென்குமரி
  • பாடல்: திருப்பதி மலை வாழும்
  • எழுதியவர்: தென்காஞ்சி பாரதிசாமி
  • இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
  • பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
  • Link: http://www.youtube.com/watch?v=MR0l_ja1qUA

அன்பெனும் அகல் விளக்கை ஏற்றிவைத்தேன், அதில்

ஆசையென்னும் நெய்யை ஊற்றிவைத்தேன்,

என் மனம் உருகிடவே, பாடி வந்தேன், உன்

ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்!

பிரபலமான இந்தப் பாடலை எழுதியவர் பெயர் தென்காஞ்சி பாரதிசாமி என்று நேற்றுதான் தெரிந்துகொண்டேன். எளிய மொழியில் மிகவும் அழகான பக்திப் பாடல்!

குறிப்பாக, இந்த நான்கு வரிகள், ஆழ்வாரின் இன்பத் தமிழ்.

நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார் அருளிச் செயலில் பூதத்தாழ்வார் எழுதிய முதல் வெண்பா. அதில், திருமாலுக்கு இப்படி ஒரு விளக்கை ஏற்றிவைக்கிறார்:

அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக,

இன்பு உருகு சிந்தை இடுதிரியா, நன்புருகி

ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்.

நாராயணா,

என்னுடைய அன்புதான் விளக்கு,

நான் உன்மேல் கொண்டடிருக்கிறஆர்வம்தான் நெய்,

எந்நேரமும் உன்னையே நினைக்கின்ற அந்தச் சிந்தனைதான் திரி…

இவற்றைக் கொண்டு ஞானத் தமிழின் துணையால் நான் உனக்கு ஒரு விளக்கு ஏற்றிவைத்தேன்!

எளிமையான பாடல்தான். இல்லையா?

இப்போது சினிமாப் பாட்டு வரிகளை ஒருமுறை படித்துப்பாருங்கள். அழகான பாசுரத்தை இன்னும் கொஞ்சம் எளிமையாக்கி எத்துணை பேர்க்குக் கொண்டு சேர்த்துவிட்டது இந்தப் பாடல்!

***

என். சொக்கன் …

19 08 2013

261/365