’இச்’சுவை

ஒரு இளம் டாக்டர் இருந்தார். எச்சில் பண்டங்களை விலக்கினாலே பாதி நோய் போய் விடும் என்று ஊருக்கெல்லாம் உபதேசித்துக் கொண்டிருந்தார்.

அவருக்கும் காதல் வந்தது. காதல் வந்ததால் டாக்டரும் கவிஞரானார். காதலியிடம் சொல்வதற்காக ஒரு கவிதை எழுதினார்.

எச்சில் பண்டம் விலக்கு
அதில் முத்தம் மட்டும் விலக்கு

எச்சில் பண்டங்களையெல்லாம் விலக்கச் சொன்ன அந்த டாக்டரே முத்தம் என்னும் எச்சில் பண்டத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கிறார். அதுதான் முத்தத்தின் வலிமை.

அன்பை வெளிப்படுத்தும் எளிய முறைதான் முத்தம். முத்தமிடாத காதலர்கள் காதலின் சாபங்கள்.

திரைப்படத்தில் முத்தக் காட்சிகளுக்காகவே பெயர் போன கமலஹாசன் எழுதி சங்கர் மகாதேவன் இசையமைத்த அந்தப் பாடல் விஸ்வரூபம் திரைப்படத்தில் இடம் பெற்றது.

ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம் ,
ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்து இருந்தேன்
எதிர்பாராமலே அவன்………..
எதிர்பாராமலே அவன்……. ஓ
பின் இருந்து வந்து என்னை
பம்பரமாய் சுழற்றி விட்டு
உலகுண்ட பெருவாயன் – எந்தன்
வாயோடு வாய் பதித்தான்

உலகத்தையே படைத்தவனும் அந்த உலகத்தையே தன் வாயில் காட்டியவனும் ஆன ஆண்டவனுக்கே முத்தத்தை விலக்க முடியவில்லை. சாதாரண மானிடர்கள் என்ன செய்வார்கள்?!

ஆண்களுக்கு மட்டும் தான் முத்தம் பிடிக்குமென்று யார் சொன்னது?

கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ,
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ

இப்படி கவிதையாய்க் கதறி அழுததும் ஒரு பெண் தான். கிருஷ்ணனின் செங்கனியிதழின் சுவையை சுவைக்க விரும்புகிறாள். ஆனால் வாய்ப்புதான் கிடைக்கவில்லை. ஆண்டவர்களும் ஆள்பவர்களும் சாமானியர்களுக்காக இறங்கி வருவதில்லை என்பது ஆண்டாளுக்கே புரியவில்லை.

வெண்ணை உண்டவன் வாய்ச்சுவை எப்படியிருக்கும்? அதில் கற்பூரம் மணக்குமோ? (அதென்ன சர்க்கரைப் பொங்கலா?) அல்லது தாமரை மலரின் மணம் வருமோ? (தாமரைக்குத்தான் மணமே கிடையாதே!) இல்லை தித்திப்பாகத்தான் இருக்குமோ? (பாயசம் குடித்த வேளையில் இந்த ஆயாச எண்ணம் தோன்றியிருக்குமோ!)

ஆண்டாளாலால் முடிவுக்கு வர முடியவில்லை. முத்தச் சுவை எப்படியிருக்கும் என்று யாரைக் கேட்க முடியும்? கேட்டால் செருப்பால் அடிக்குமே சமூகம். அந்தக் கேசவனின் சங்கைக் கேட்கலாம் என்று முடிவுக்கு வருகிறாள்.

அந்தச் சங்கை தானே வைகுந்தன் வாய் வைத்து ஊதுகிறான். அப்படியானால் அந்தச் சங்குக்கு பீதாம்பரனின் வாய்ச்சுவை தெரிந்திருக்க வேண்டுமல்லவா! அதனால்தான் சங்கிடம் கேட்கிறாள்.

மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமே
விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண்சங்கே!

இன்றைய கவிஞர்களில் முத்தத்தைப் பாடாத கவிஞர்களே இல்லை. எடுத்துப் பட்டியல் இட்டால் படத்துக்கொரு முத்தம் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பாடலின் சுட்டி – http://youtu.be/XuOgG2QWAgQ

அன்புடன்,
ஜிரா

260/365