தளிரே!

  • படம்: கலைக் கோவில்
  • பாடல்: தங்க ரதம் வந்தது
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
  • பாடியவர்: பாலமுரளி கிருஷ்ணா, பி. சுசீலா
  • Link: http://www.youtube.com/watch?v=2wWdF_kZhjA

தங்க ரதம் வந்தது வீதியிலே, ஒரு

தளிர் மேனி வந்தது தேரினிலே!

மரகதத் தோரணம் அசைந்தாட, நல்ல

மாணிக்க மாலைகள் கவி பாட!

துளிர் தெரியும், அதென்ன தளிர்?

தமிழ்க் கவிஞர்களுக்கு, குறிப்பாகக் காதல் பாடல் எழுதுகிறவர்களுக்கு மிகவும் பிடித்த வார்த்தை இது. ‘தளிர்மேனி’ என்று வர்ணிப்பார்கள், ‘இளந்தளிரே’ என்று புகழ்வார்கள், ‘மாந்தளிரே’ என்று வகை குறிப்பிட்டுச் சொல்வதும் உண்டு.

’தளிர்’ என்றால் இலை என்பது எல்லாருக்கும் தெரியும், அதற்கு ‘இலை’ என்ற வார்த்தையையே பயன்படுத்திவிட்டுப் போகலாமே. ஏன் ‘தளிர்’ என்று சொல்லவேண்டும்?

இலை என்றால், அது இப்போதுதான் முளைத்ததாகவும் இருக்கலாம், காய்ந்து கரடுமுரடானதாகவும் இருக்கலாம், ஏன், பழுத்துப்போய் உதிர்ந்து கீழே கிடக்கும் சருகுகூட இலைதானே?

ஆனால் தளிர் என்பது அப்படி இல்லை. அது இலையின் ஒரு குறிப்பிட்ட நிலையைச் சொல்கிறது, முளைத்துச் சிறிதளவுமட்டும் வளர்ந்த (தளிர்த்த) மென்மையான, அழகான இலை.

திருவள்ளுவர் இந்தச் சொல்லை எப்படிப் பயன்படுத்துகிறார் என்று பாருங்கள்:

உறுதொறு உயிர் தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு

அமிழ்தின் இயன்றன தோள்

ஒரு காதலன் காதலியைப் பார்த்துக் கேட்கிறான், ‘அடியே, உன் தோள்களை எலும்பால, சதையால செஞ்சாங்களா, இல்லை அமுதத்தால செஞ்சாங்களா?’

‘ஏன்ய்யா உனக்கு இந்தச் சந்தேகம்?’

‘பின்னே? உன்னைப் பிரிஞ்சு வாடின என் உயிர், நீ தொட்டதும் சட்டுன்னு தளிர்க்குதேடி!’

அதாவது, புதிய இலை அல்ல, ஏற்கெனவே இருந்த உயிர்தான், அவள் தொட்டதும், Refresh ஆகிறது, இளமையாகிறது, என்றும் பதினாறாகிறது!

அதான் தளிர். காதல் பாடல்களுக்கு மிகப் பொருத்தமான வார்த்தை, காதல்வயப்பட்ட இளம் மேனியை வர்ணிக்கவும்!

***

என். சொக்கன் …

258/365