அவன் பேர் கேட்டேன்!

அழகி ஒருத்தி தெருவில் நடந்தது சென்றாள். பெண்களிலெல்லாம் அழகான பெண் அவள். பெண்மைக்கு இலக்கணம் சொல்ல வேண்டும் என்றால் அவளைச் சொல்லி விடலாம்.

அவள் பருவம் வந்த உருவம் கொண்டவள். ஆனால் பருவம் தேடும் மஞ்சத்தின் ஆசை இன்னும் வராத நெஞ்சம் கொண்டவள்.

தெருக்களில் நடக்கையில் அவளை ஆயிரம் பேர் பார்த்தார்கள். ஆனால் அவள் யாரையும் பார்க்கவில்லை.

ஆண்குரல் எதுவும் அவள் காதில் ஏறவில்லை. பெண்களின் பேச்சு மட்டுமே அவள் காதில் விழுந்தது. எல்லாப் பெண்களின் குரலிலும் கேட்டது ஒரே பெயர்தான். அது ஒரு ஆணின் பெயர்.

அத்தனை பெண்களும் ஒரே பெயரையா உச்சரிப்பார்கள்! அவள் வியந்தாள். அந்தப் பெயரை நயந்தாள்.

பெண்கள் அவனுடைய பெயரை மட்டும் சொல்லவில்லை. அவன் அழகையும் சொன்னார்கள். விரிந்த தோளையும் பரந்த மார்பையும் எடுப்பு மூக்கையும் விடுப்பின்றி சொன்னார்கள். கண்ணைக் கண்டு காதல் கொண்ட நிலையைச் சொன்னார்கள். சிவந்த செவிகளைப் பற்றி செப்பினார்கள். அரையின் உடை எழிலின் நடை என்று வாய் வலிக்காமல் பேசினார்கள்.

அவனுடைய விவரங்களைக் கேட்கக் கேட்க அவள் உள்ளத்தின் அவன் மேல் ஆர்வம் எழுந்தது. இப்படிப்பட்ட ஆண்மையின் இலக்கணம் எந்த ஊரோ என்று உள்ளத்தில் எண்ணி ஏங்கினாள். உடனே தெரிந்தது.

அவனுடைய ஊர் திருவாரூர். பேரையும் ஊரையும் கேட்டு அவன் மேல் அவளுக்கு காதல் பிறந்தது. காதல் பெருகப் பெருக அவள் பிச்சியானாள்.

தாயை மறந்தாள். தந்தையை மறந்தாள். குடும்பத்தை மறத்தாள். வாழ்க்கை முறையை மறந்தாள். உணவை மறந்தாள். உயிரை மறந்தாள். தன்னை மறந்தாள். தன்னிலை மறந்தாள்.

ஆரூருக்கு அவள் கால்கள் நடந்தன. கால்களை முந்தி அவள் மனம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் உயிரோ எப்போதோ ஆரூருக்குப் போய் காத்திருந்தது. அவனோடு எப்படியாவது சேர்ந்து வாழ தலைப்பட்டாள் நங்கை.

இந்தக் காட்சியை திருநாவுக்கரசர் பார்க்கிறார். அவளுடைய நிலையை அழகிய தேவாரப் பாடலாக எழுதுகிறார்.

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே

இந்தத் தேவாரப் பாடலை கவியரசர் கண்ணதாசன் படித்து உள்ளத்துக்குள் பொதித்து வைத்திருந்திருக்கிறார். அந்தப் பொதியலை திரைப்படத்தில் எடுத்து விட ஒரு வாய்ப்பு வந்தது.

குடும்பத்தலைவன் படத்தில் காதலனை நினைத்து காதலி பாடுவது போல காட்சி. அந்தக் காட்சிக்குப் பொருத்தமாக அப்பரின் தேவாரத்தை எளிய தமிழில் எழுதினார்.

அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்
இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன் – அவன்
என்னைத் தேடி வரும்வரைக்கும் விடவும் மாட்டேன்

கே.வி.மகாதேவன் இசையில் பி.சுசீலா பாடிய இந்த இனிய பாடல் மிகவும் பிரபலமானது. இப்படி தேவாரத்திலிருந்து மலரெடுத்து காதல் மாலை தொடுக்கவும் முடியும் என்பதை ஆயிரத்தோராவது முறையாக கண்ணதாசன் நிரூபித்திருக்கிறார்.

பாடலின் சுட்டி – http://youtu.be/OW7AKCDphaU

அன்புடன்,
ஜிரா

257/365