என்ன சத்தம் இந்த நேரம்

ஒரு நண்பருடன் கொஞ்ச நேரம்  பேசிக்கொண்டிருந்தேன்  அவர் பேச்சில் ஏதோ ஒன்று என் கவனத்தை ஈர்க்க, நிதானமாக யோசித்து  ரீவைண்ட் செய்து பார்த்தேன். அவர் டமால், டங்குன்னு, வெடுக்குனு, தொபுக், லொட லொட, சல்லுனு போன்ற வார்த்தைகள் போட்டே ஒவ்வொரு வாக்கியத்தையும் தொடுக்கிறார். பத்து நிமிடம் பேசினாலே அவரின் இந்த ஸ்டைல் தனியாகத் தெரியும்.

தமிழ்நாட்டில் தினத்தந்தி பிரபலப்படுத்திய ‘சதக் சதக் என்று குத்தினான் குபுக்கென்று ரத்தம் வந்தது’ எல்லாரும் அறிந்தது. இது சித்திரக்கதைகளைப் படிப்பவர்களுக்கு பரிச்சயமான விஷயம். ஒரு பலூனில் Boom, whack, vroom போன்ற வார்த்தைகள் இருக்கும். இவை ஒலிக்குறிப்புச் சொற்கள். ஆங்கிலத்தில்  onomatopoeia. இது வார்த்தைகளோடு ஒலியையும் உணர்த்தும் ஒரு முறை. வார்த்தைகளே ஒலி போல் நடிக்கும்.

திரைப்பாடல் எழுதும் கவிஞர்களுக்கு இந்த ஒலிக்குறிப்புச் சொற்கள் மேல் ஒரு அபார மோகம். கண்ணதாசன் பாசம் படத்தில் எழுதிய பாடல் ஒன்று (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் எஸ் ஜானகி)

http://www.inbaminge.com/t/p/Paasam/Jal%20Jal%20Enum%20Salangai.eng.html

ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சல வென சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே

ஈரமான ரோஜாவே படத்தில் பிறைசூடன் எழுதிய ஒரு அருமையான பாடல் (இசை இளையராஜா பாடியவர்கள் மனோ எஸ் ஜானகி)

http://www.youtube.com/watch?v=Eq9nsMZyyT8

கலகலக்கும் மணியோசை

சலசலக்கும் குயிலோசை

மனதினில் பல கனவுகள் மலரும்

இது போல் நிறைய பாடல்கள் உண்டு. ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களில் வரும் ஒமக சீயா இந்த வகையில் வராது.

எனக்கொரு சந்தேகம். கண்ணதாசன் புதிய வார்ப்புகள் படத்தில் வான் மேகங்களே பாடலில் (இசை இளையராஜா பாடியவர்கள் மலேசியா வாசுதேவன் எஸ் ஜானகி)

http://www.youtube.com/watch?v=Q8MPSbmZjy4

பள்ளியில் பாடம் சொல்லி கேட்க நான் ஆசை கொண்டேன்

பாவையின் கோவில் மணி ஓசை நீ கண்ணே

டான் டான் டான் டான்

சங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ ..

சங்கின் ஒலிக்கு ஏன் டான் டான் டான்? இது ஏதோ பில்லா போல் டானா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

மோகனகிருஷ்ணன்

256/365