தப்புக் கணக்கு

முன்பெல்லாம் திட்டும் போது “போடா புண்ணாக்கு” என்று சொல்லித் திட்டுவார்கள். இப்போதெல்லாம் “புண்ணாக்கு” என்று யாரும் யாரையும் திட்டுவதில்லை. ஏனென்றால் புண்ணாக்கைப் பார்க்காமலேயே ஒரு தலைமுறை வளர்ந்து விட்டது.

புண்ணாக்கு என்று சொன்னவன் உடம்பைப் புண்ணாக்கு” என்று மக்கள் எகிறிக் குதித்த காலமெல்லாம் மலையேறிப் போய் விட்டது. ஏனென்றால் திட்டுவதற்கு என்னென்னவோ புதிய சொற்கள் வழக்கத்து வந்து விட்டன.

ஆனாலும் தொண்ணூறுகளில் “என் ராசாவின் மனசிலே” படத்தில் கவிஞர் பொன்னடியான் எழுதி கல்பனா பாடிய “போடா போடா புண்ணாக்கு” பாடல்தான் புண்ணாக்கின் இழந்த பெருமையை மறுபடியும் மக்களிடையே நிலைநிறுத்தியது.

அன்பே வா என்ற படத்தில் கதாநாயகி சரோஜாதேவியின் தந்தையாக நடித்தவர் நகைச்சுவை நடிவர் டி.ஆர்.ராமச்சந்திரன். அவருடைய பெயரை அவர் சொல்லத் தொடங்கும் போது சொல்லவிடாமல் சரோஜாதேவி தடுப்பார். அவரும் தட்டுத்தடுமாறி பெயரைச் சொல்லிவிட்டு “என்னது பேரச் சொன்னப்புறமா சிரிக்காம இருக்கீங்களே” என்று எம்.ஜி.ஆரைக் கேட்பார்.

ஏனென்றால் அவர் பெயர் புண்ணாக்கு புண்ணியகோடி. கதைப்படி அவர் செய்வது புண்ணாக்கு வியாபாரம். அதனால் அப்படியொரு பெயர்.

புண்ணாக்கு என்பது கொச்சையான பெயர். பிண்ணாக்கு என்பதே சரியான உச்சரிப்பு.

இந்தப் பிண்ணாக்கு எப்படி தயாரிக்கப்படுகிறது? அதை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம்?

மேலே உள்ள கேள்விகளை கேட்கும் போதே நான் என்னுடைய சிறுவயது நினைவுகளுக்குள் இறங்கிவிடுகிறேன். சின்னஞ் சிறுவனாக இருந்த போது எங்கள் அம்மாவின் ஊரில் சித்தி எள்ளுப்பிண்ணாக்கை தின்னக் கொடுத்தது நினைவுக்கு வருகிறது. அந்த நறுமணம் இன்னும் மூக்கிலேயே சுத்திக் கொண்டிருக்கிறது. ஊர்ப்பக்கங்களில் பிண்ணாக்குக் கடை வழியாகப் போனால் எள்ளுப் பிண்ணாக்கின் மனம் பிடிக்கின்றவர்களில் நானும் ஒருவன்.

பொதுவாகவே எண்ணெய் வித்துகளை செக்கில் இட்டு ஆட்டி எண்ணெய் எடுக்கும் போது கிடைக்கும் சக்கையே பிண்ணாக்கு எனப்படும்.

எள்ளுப்பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்கு, தேங்காய்ப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு என்று எதிலிருந்து எண்ணெய் எடுக்கிறோமோ அதையே பெயராக வைத்துக் கொள்ளும்.

சில பல ஓட்டல்களில் சட்டினி அரைக்கும் போது தேய்ங்காய்க்குப் பதிலாக தேங்காய்ப் பிண்ணாக்கையும் கலந்து அரைத்து விடுவார்கள். அதை வைத்து ஒரு காலத்தில் எத்தனையெத்தனையோ நகைச்சுவைத் துணுக்குகள் வெளிவந்தன. இப்போதும் கூட இது நடந்து கொண்டிருக்கலாம். ஏனென்றால் இன்னும் தேங்காயை ஆட்டித்தானே தேங்காயெண்ணெய் எடுக்கிறார்கள்.

எள்ளை ஆட்டிதான் நல்லெண்ணெய் எடுப்பார்கள். அப்படி ஆட்டும் போது செக்கில் கருப்பட்டியையும் போட்டு ஆட்டுவார்கள். செக்கு இருக்கும் இடமே மணமணக்கும். கருப்பட்டி போட்டு ஆட்டுவதால் எள்ளுப்புண்ணாக்கில் இயல்பாகவே ஒரு இனிப்புச் சுவை இருக்கும். அந்த எள்ளுப்பிண்ணாக்கை உரலில் இட்டு இன்னும் சிறிது கருப்பட்டி போட்டு இடித்தால் அருமையான உருண்டைகளாகப் பிடிக்கலாம். கொழுப்பில்லாத இனிப்புப் பண்டம். இன்றைக்கு இனிப்பு என்ற பெயரில் கொழுப்புச் சத்துள்ள பண்டங்களைத்தான் விற்கிறார்கள். அவைகளையெல்லாம் பார்க்கும் போது எள்ளுப்பிண்ணாக்கு சத்தான பண்டம்.

கடலைப் பிண்ணாக்கும் திண்பண்டமே. கால்நடைத் தீவனத்தில் கடலைப் பிண்ணாக்கு மிகவும் சிறந்தது. கடலைப் பிண்ணாக்கை ஊறவைத்து மாடுகளுக்குக் குடுப்பார்கள். பருத்திக் கொட்டையையும் பிண்ணாக்கையும் ஊற வைத்துக் கொடுத்தால் பால் நன்றாகக் கறக்கும். கடலைப் பிண்ணாக்கு ஊற வைத்த தண்ணீரை வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கும் ஊற்றலாம்.

வேப்பம்பிண்ணாக்கை விட்டுவிட முடியுமா? வேப்பெண்ணை ஆட்டி எடுத்த பிண்ணாக்குதான் வேப்பம் பிண்ணாக்கு. இது ஒரு அருமையான உரம். இயற்கை உரமாக அப்படியே நிலத்தில் இட்டும் பயன்படுத்தலாம். யூரியா போன்ற செயற்கை உரங்களோடு கலந்தும் பயன்படுத்தலாம்.

காளமேகப் புலவர் ஒரு பாட்டில் பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடை வைத்து ”பிண்ணாக்கும் உண்டு. உற்றிடும் பாம்பு எள்ளளவே ஓது” என்று எழுதினார். அதில் இரண்டுக்கும் பிண்ணாக்கு உண்டு என்று எழுதியிருக்கிறார். எள்ளை ஆட்டினால் கிடைப்பது பிண்ணாக்கு. பாம்புக்கு இருப்பதும் பிண்ணாக்கு. அதாவது பிண்ணமான நாக்கு. நாக்கு பிளவுபட்டிருக்கிறது அல்லவா!

எடுத்துச் சொல்ல ஆயிரம் பெருமைகள் பிண்ணாக்குக்கு உண்டு. அப்படியிருக்க ஒருவரைத் திட்டுவதற்கு “புண்ணாக்கு” என்ற பெயரைப் பயன்படுத்துவது சரியா?

போடா போடா புண்ணாக்கு பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=vthIjUz6oTs

அன்புடன்,
ஜிரா

254/365