ராஜா என்பார் மந்திரி என்பார்
பிரபல செஸ் வீரர் காரி காஸ்பரொவ் எழுதிய How Life Imitates Chess படித்துக் கொண்டிருக்கிறேன். சீராக யோசித்தல், முடிவெடுக்கும் திறமை, வியூகம் அமைத்தல், என்று சதுரங்கம் தரும் பாடங்கள் பலவற்றை வணிக நிறுவன நிர்வாகத்தில் செயல்படுத்த முடியும் என்கிறார். செஸ் விளையாட்டு ஞாபக சக்தியையும் உள்ளுணர்வையும் மேம்படுத்தும் என்கிறார்.
இந்த சதுரங்க விளையாட்டு பற்றி படித்தவுடன் கெளரவம் படத்தில் இரண்டு சிவாஜிகளும் ஆடிய life size செஸ் நினைவுக்கு வந்தது. கண்ணதாசன் எழுதிய ‘கண்ணா நீயும் நானுமா’ என்ற பிரபல பாடலில் (இசை எம் எஸ் விஸ்வநாதன், பாடியவர் டி எம் எஸ்) இருவருக்கும் இடையில் நடக்கும் வழக்கை சதுரங்க விளையாட்டுடன் ஒப்பிடுவார்
https://www.youtube.com/watch?v=EjEa_j9kRbE
மன்னனின் கெளரவம் சதுரங்க நடுவிலே
மறிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே
ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே
இந்த Board Games எனப்படும் சிறுபாடு விளையாட்டுகள் நமக்கு பல முக்கியமான வாழ்வியல் பாடங்கள் கற்றுத்தருகின்றன. சதுரங்க விளையாட்டில் ராஜா காப்பாற்றப்படவேண்டும். ஆனால் இதில் ராஜாவுக்கு பெரிய அதிகாரமோ சக்தியோ கிடையாது. கிட்டத்தட்ட ஒரு பார்வையாளன்தான். ராஜாவின் பக்கம் இருக்கும் ராணியும், மந்திரிகளும் ரத கஜ துரக பதாதிகளும் தான் காக்கவேண்டும்.
வாழ்க்கையை ஆடு புலி ஆட்டம் என்று விவரித்து சபதம் என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்
ஆட்டத்தை ஆடு புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இங்கு ஆடுகள் மோதட்டும் புலியோடு
வாலி இதில் வேறு கருத்து சொல்கிறார் வெள்ளி விழா படத்தில் கை நிறைய சோழி என்ற பாடலில் (இசை வி குமார் பாடியவர்கள் பி சுசீலா எல் ஆர் ஈஸ்வரி) ஒரு பக்கம் சதுரங்கம் இன்னொரு பக்கம் தாயக்கட்டம் என்று காட்சி. இரண்டு விளையாட்டையும் குறிக்கும் வார்த்தைகளை வைத்து வாலி ஆடும் ஆட்டம்! https://www.youtube.com/watch?v=AGM0KqoK3lY
விதி என்று விளையாட்டை நினைப்பதும் ஏனோ
பந்தயத்தை வாழ்க்கை என்று எண்ணி விடலாமோ!
எனக்கென்னவோ இந்த விளையாட்டுகளை வடிவமைத்தவர்கள் இதன் மூலம் பாடம் சொல்ல நினைத்தார்கள் என்றே தோன்றுகிறது. நாம் செய்யும் நல்ல காரியங்களை ஏணியாகவும் தீய செயல்களை பாம்பாகவும் கற்பனை செய்த பரம பதம், புலிகளை எதிர்கொள்ளும் ஆடுகளை கொண்ட ஆடு புலி ஆட்டம், சரியான முறையில் காய் நகர்த்தினால் ஊர் போய்ச்சேரலாம் என்று சொல்லித்தரும் தாயக்கட்டம், என்று எல்லா விளையாட்டுகளும் நமக்கு ஏதோ பாடம் சொல்லுவதுபோல் இருக்கிறது.
மோகனகிருஷ்ணன்
253/365
rajinirams 2:45 pm on August 12, 2013 Permalink |
வித்தியாசமான விளையாட்டு பதிவு-அதற்கேற்ற அருமையான பாடல்கள். இரு கோடுகள் படத்தில் மியூசிகல் சேர் விளையாட்டில் இரு நாயகிகளை வைத்து வாலியின் வார்த்தை விளையாட்டு-அன்று போல இன்று கூட போட்டி போட இருவருண்டு,கண்ணகியா மாதவியா வெல்வது-என்ற கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வது.இதய மலரில் கண்ணதாசன்-என்றும் இந்த இதயம் ஒருவருக்கென்று கூறட்டும் விரைவினில் சென்று-என செண்டு மல்லி பூ போல் அழகிய பந்தை சொல்வதும் அருமையாக இருக்கும்.நன்றி.
amas32 5:41 pm on August 14, 2013 Permalink |
வாழ்க்கையை ஒரு விளையாட்டோடு ஒப்பிடுவது இந்த பாடல் வரிகளில் இருந்து தெரிகிறது. வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் நாமும் சதுரங்க ஆட்டத்தில் விளையாடுவது போல சரியான மூவ்களை செய்ய வேண்டியுள்ளது. வாழ்க்கையின் வெற்றியே அதில் தான் அடங்கியுள்ளது. பேக்கு மாதிரி இருந்தால் இளிச்சவாயன் என்ற பட்டத்தைக் கொடுத்து ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள். அதனால் புலியிடம் இருந்துக் காத்துக் கொள்ளவும், ஏணியில் ஏறவும் கற்கவேண்டும்!
amas32