வெத்தல போட்ட ஷோக்குல!

ஒவ்வொரு நடிகர்களுக்கும் தான் எழுதியதில் பிடித்த பாடலைச் சொல்லும் போது வைரமுத்து அவர்கள் சரத்குமாருக்கு எழுதியதில் “கொட்டப்பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும்” பாட்டைக் குறிப்பிட்டாராம்.

வெற்றிலை என்றதும் உடனே நினைவுக்கு வரும் அடுத்த பாடல் கண்ணதாசன் எழுதியது. “வெத்தலையப் போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி” என்று பில்லா படத்துக்காக எழுதினார்.

கங்கை அமரனும் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்துக்காக “வெத்தலை வெத்தலை வெத்தலையோ கொழுந்து வெத்தலையோ” என்று எழுதினார்.

வெத்தலை போடுவது” என்பது நாள் கிழமை திருவிழா திருமணம் என்று கூடினால் கட்டாயம் செய்ய வேண்டிய கடமை.

முன்பெல்லாம் “வெத்தலை போடுவது” தினப்படி பழக்கமாகவே பலருக்கு இருந்தது. ஊர்ப்பக்கத்து பெரியவர்கள் பல்லெல்லாம் விழுந்த பிறகும் வெற்றிலையை பாக்கோடும் சுண்ணாம்போடும் உரலில் இடித்து மென்று தின்பதைக் காணலாம்.

வெற்றிலை மடிப்பது என்பதே ஒரு கலை. அப்படி மடிப்பதற்குச் சரியான வெற்றிலையைத் தேர்ந்தெடுப்பது இன்னொரு கலை. தென்னாட்டில் கருவெத்தலை நிறைய கிடைக்கும். கொங்கு நாட்டிலும் சோழமண்டலத்திலும் வெள்ளவெத்தலை நிறைய விளையும்.

கருவெத்தலையில் காரம் அதிகம். புதிதாக வெத்திலை போடுகின்றவர்களுக்கு வெள்ளவெத்திலைதான் சரி. சொகுசு வெத்திலை என்பார்கள்… செல்லப்பெட்டியில் (வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு வைத்துக் கொள்ளும் பெட்டி) வெள்ளவெத்திலையும் சீவலும் வாசனைச் சுண்ணாம்பும் வைத்துக் கொண்டு மென்று கொண்டேயிருக்கும் சொகுசாளிகளையும் உலகம் நிறையவே கண்டிருக்கிறது. தில்லானா மோகனாம்பாள் கதையில் வரும் சவடால் வைத்தியும் அந்த வகைதான்.

ஆனால் சொகுசு வெத்திலை உழைக்கும் மக்களுக்கு போதாது. காரமாக இருக்க வேண்டும். அவர்கள் பெரும்பாலும் விரும்புவது காரவெத்திலையைத்தான்.

பாக்கிலும் பலவகை உண்டு. கொட்டைப்பாக்கு, களிப்பாக்கு, வெட்டுப்பாக்கு, பாக்குத்தூள், வாசனைப் பாக்குத்தூள், சீவல் என்று அடுக்கலாம். கொட்டைப் பாக்கு உருண்டையாகவும் கடிப்பதற்கு கடுக்கென்றும் இருக்கும். களிப்பாக்கு மெல்வதற்கு எளிதானது. வெட்டுப்பாக்கு என்பது கொட்டைப் பாக்கை அரைவட்டமாக ஆரஞ்சுச் சுளை வடிவில் வெட்டி வைத்திருப்பது. பாக்குத்தூளைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. இப்போது அதுதான் கடைகளில் கிடைக்கிறது. பாக்கை மெல்லிசாக சீவியெடுத்தால் சீவல் கிடைக்கும்.

வெற்றிலையின் காம்பைக் கிள்ளி.. நடுநரம்பை உரித்து… வெற்றிலையின் பின்பக்கத்தில் சுண்ணாம்பை ஆட்காட்டி விரலில் தொட்டு குழந்தைக்கு திருநீறு பூசுவது போல அளவாகப் பூச வேண்டும். பாக்குத்தூளை தேவைக்கு வைத்து மடித்துக் கொடுப்பது எல்லாருக்கும் எளிதில் கைவந்து விடாது.

வெற்றிலை மடிக்கும் போது ஏதாவது ஒன்றின் அளவு கூடினாலோ குறைந்தாலோ வெற்றிலை போட்ட வாய் சிவக்காது. சுண்ணாம்பின் அளவு கூடினால் வாய் வெந்து போகும். பாசத்தோடு மடிக்கும் போதுதான் எல்லா அளவுகளும் சரியாக இருக்கும்.

வெற்றிலை போடுவது பற்றி ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில் இரண்டு பாடல்கள் உள்ளன.

கைசெய்து கமழு நூறுங் காழ்க்கும்வெள் ளிலையுங்
காம மெய்தநன் குணர்ந்த நீரா ரின்முக வாச மூட்டிப்
பெய்தபொற் செப்பு மாலைப் பெருமணிச் செப்புஞ் சுண்ணந்
தொய்யறப் பெய்த தூநீர்த் தொடுகடற் பவளச் செப்பும்

மேலே சொன்ன பாடலின் முதல் வரியில் வெற்றிலையும் சுண்ணாம்பும் வருகிறது.

கை செய்து கமுழும் நூறும் – இங்கே நூறு என்பது சுண்ணாம்பைக் குறிக்கும். நூறுதல் என்றால் அரைத்தல். சுண்ணாம்புக்கட்டிகளை அரைத்து மென்மையாக்கி வெற்றிலைக்கு ஏற்க செய்வதால் அதற்கு நூறு என்றே பெயர். (அந்தக்காலத்தில் கட்டிடங்களைக் கட்டுவதற்கும் சுண்ணாம்பு அரைப்பார்கள்)

காழ்க்கும் வெள்ளிலையும் – வெள்ளிலை என்பது வெற்றிலையைக் குறிக்கும் பழைய பெயர். காழ்ப்புச் சுவையுடையது என்பதால் காழ்க்கும் வெள்ளிலை எனப்படுகிறது.

இன்னொரு பாட்டைப் பார்க்கலாம்.

கூந்த லேந்திய கமுகங் காய்க்குலை
யாய்ந்த மெல்லிலை பளித மாதியா
மாந்தர் கொள்ளைகொண் டுண்ண மாநில
மேந்த லாம்படித் தன்றி யீட்டுவார்

கூந்தலேந்திய கமுகங்காய்குலை” என்பது பாக்குமரத்தில் தொங்கும் பாக்குக்குலைகளைக் குறிக்கும். அந்த பாக்கோடு “ஆய்ந்த மெல்லிலை”… அதாவது வெற்றிலையையும் வாசனைப் பொருட்களையும் கலந்து மாந்தர்கள் உண்டார்களாம். அப்போதே சுண்ணாம்புக்கும் பாக்குக்கும் வாசனையேற்றும் வேலை நடந்திருக்கிறது.

அந்த அளவுக்குப் பிரபலமாக இருந்த வெற்றிலைப் பழக்கம் இன்று கல்யாண வீடுகளிலும் ஓட்டல் வாசல் பான்பீடா கடைகளிலும் குறுகி விட்டது என்பது உண்மைதான். எது எப்படியோ.. கண்டதையும் வெற்றிலையில் கலந்து குதப்பி எல்லா இடங்களிலும் துப்பாமல் இருந்தாலே போதும்.

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்தலையும் (நாட்டாமை, சிற்பி, எஸ்.ஜானகி, மனோ)
வெத்தலைய போட்டேண்டி (பில்லா, எம்.எஸ்.விசுவநாதன், மலேசியா வாசுதேவன்)
வெத்தல வெத்தல (ரோசாப்பூ ரவிக்கைக்காரி, இளையராஜா, மலேசியா வாசுதேவன்)

அன்புடன்,
ஜிரா

251/365