உறவுகள் தொடர்கதை
நண்பரின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் கலந்துகொண்டேன். எளிய நிகழ்ச்சி.. அவர்கள் குடும்ப வழக்கப்படி அவரின் தந்தையின் பெயரையே தேர்வு செய்திருந்தார். தாத்தா, பாட்டி பெயரை பேரக் குழந்தைகளுக்கு வைக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் உண்டு என்பது தெரிந்த விஷயம்தான். மூத்தவர்கள் பெயரை வைத்துக் கூப்பிட இயலாததால் கூப்பிடுவதற்கு என்று இன்னொரு வீட்டுப் பெயரும் கூட வைத்துக் கொள்வார்கள்.
ஆனால் இப்போது மாடர்ன் பெயர்களை வைக்கும் ட்ரெண்டிலிருந்து மாறுபட்டு, பழமையான ஒரு பெயரை அவர் தேர்வு செய்தது எனக்கு கொஞ்சம் ஆச்சரியம். ஏன் என்று கேட்டபோது அவர் இது பல தலைமுறைகளாக வரும் வழக்கம் என்றும் அந்த சங்கிலியை உடைக்க மனமில்லையென்றும் சொன்னார்.
சங்கிலி என்ற வார்த்தை சொல்லும் செய்தி முக்கியம் .சொந்தங்கள் எல்லா பிறவிகளிலும் தொடர்கிறது என்பது நம்பிக்கை. நம்மைவிட்டுப் பிரிந்த முன்னோர்கள் மீண்டும் நம் வீட்டில் பிறக்கிறார்கள் என்ற நம்பிக்கை.
கண்ணதாசன் பிராப்தம் படத்தில் சொன்ன சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் என்ற நம்பிக்கை. (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் டிஎம்எஸ், பி சுசீலா)
http://www.inbaminge.com/t/p/Praptham/Sonthom%20Yepothum.eng.html
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்
எழுதும் புதுக்கதை இது
இறைவன் எழுதும் முடிவே இல்லாத தொடர்கதை என்ற வரி அருமை. அதே படத்தில் வரும் இன்னொரு பாடல் நேத்து பறிச்ச ரோஜா. (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் டிஎம்எஸ், பி சுசீலா ) இதிலும் அதே போல் வரிகள்
http://www.inbaminge.com/t/p/Praptham/Nethu%20Paricha.eng.html
எந்தக் கோலம் கொண்டால் என்ன
சொந்தம் சொந்தம் தான்
எந்தப் பிறவி வந்தால் என்ன
பந்தம் பந்தம் தான்
எல்லா கவிஞர்களும் இந்த ‘ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம்’ பற்றி பாடியிருக்கிறார்கள். இது இன்னார்க்கு இன்னாரென்ற காதல் உறவுகளுக்கு மட்டுமா? இல்லை. வாலியின் ‘அம்மா என்றெழைக்காத’ என்ற பாடலில் (இசை இளையராஜா பாடியவர் கே ஜே ஜேசுதாஸ்)
http://www.inbaminge.com/t/m/Mannan/Amma%20Amma.eng.html
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
என்று வேண்டிக்கொள்கிறார். கண்ணதாசன் ஒரு படி மேலே சென்று எல்லா உறவுகளும் தொடர வேண்டும் என்று வேண்டுகிறார். அடுக்கு மல்லி படத்தில் (இசை சங்கர் கணேஷ் பாடியவர் வாணி ஜெயராம்)
ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள்
பூமியில் பிறந்திட வேண்டுகிறேன்
அத்தனை பிறப்பிலும், இத்தனை உறவும்
அருகினில் இருந்திட வேண்டுகிறேன்
அற்புதமான வேண்டுகோள். இத்தனை உறவும் அருகினில் இருந்திட என்று தான் வேண்டுகிறார். உறவாகவோ நட்பாகவோ அருகினில் இருந்திட வேண்டுகிறார். உறவு என்பது உணர்வுதானே? ‘பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா’ என்பதுதானே நிஜம்?
மோகனகிருஷ்ணன்
250/365
Uma Chelvan 2:50 am on August 9, 2013 Permalink |
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது……….this is the knot for all relationships!
rajinirams 1:04 pm on August 9, 2013 Permalink |
அருமை.பாசமிகு உறவுகளின் எண்ணம் தான் பந்தம் தொடரவேண்டும் என்பது. சில கவிஞர்கள் சூழல் அமையும் போது அதை அழகாக வெளிப்படுத்தி விடுகிறார்கள். சந்திப்பு பட பாடல்-ஆனந்தம் விளையாடும் வீடு-எடுத்தாலும் என்ன ஏழேழு பிறவி நீ தானே கண்ணே எனக்கேற்ற துனைவி. பூவே பூ சூடவா-மீண்டும் ஜென்மங்கள் மாறும் போது நீ என் மகளாக வேண்டும். ஊரெல்லாம் உன் பாட்டு-இந்த பிறப்பிலும் எந்த பிறப்பிலும் எந்தன் உயிர் உனைச்சேரும். என்னென்பதோ ஏதென்பதோ பாடலில் என்றும் நீ இங்கு என் அண்ணன் என்றால் கோடி ஜென்மங்கள் குருடாக பிறப்பேன்.மனைவியின் சிறப்பை வாலி-எந்த கடனிலும் மிகப்பெரிது நல்ல மனைவியின் சேவை அதை அடைத்திட எண்ணும் போது பல பிறவிகள் தேவை என்று கலக்கியிருப்பார். நன்றி
GiRa ஜிரா 3:43 pm on August 10, 2013 Permalink |
பைலட் பிரேம்நான் படத்தில் எனக்குப் பிடித்த வரிகள் (இலங்கையின் இளம்குயில் என்னோடு பாடலில்)
என்றும் இந்த பூமியிலே
உனக்காக நான் பிறப்பேன்
நீதான் துணைவன் என்றால்
நூறு ஜென்மம் நானெடுப்பேன்
கடல் வானம் உள்ளவரை
நடந்தேறும் காதல் கதை
தமிழ் போலும் ஆயிரம் காலம்
திகட்டாத மோகன ராகம்
amas32 6:23 pm on August 14, 2013 Permalink |
உறவுகள் தொடர்கதை தான்! எத்தனையோ இல்லங்களில் பாட்டனார் இறந்தவுடன் அது நாள் வரை குழந்தை பேறு இல்லாத தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும். பல உண்மை கதைகளில் உனக்கே மகனாகப் பிறப்பேன் என்று சொல்லி உயிர் விட்ட உறவினர்கள் வந்து பிறப்பதையும் பார்த்திருக்கிறேன். அதாவது இறந்தவர் முக சாயல், குணாதிசயங்களைக் கொண்டு பிறந்திருக்கும் குழந்தை. அதை என்னவென்று சொல்லி விளக்குவது?
மறு பிறவியில் நம்பிக்கை இருந்தால் பல நிகழ்சிகள் உண்மையாக்கத் தோன்றும்!
amas32