பட்டை(யை)க் கிளப்புதல்

பெண்ணின் சருமத்து மென்மையை பாட்டில் எழுதச் சொன்னால் பெரும்பாலான கவிஞர்கள் பட்டைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

பட்டுக் கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும் (முத்துலிங்கம், காக்கிச் சட்டை, இளையராஜா)
சீனத்துப் பட்டுமேனி இளம் சிட்டு மேனி (வாலி, தாய்மூகாம்பிகை, இளையராஜா)
பட்டுப் பூவே மெட்டுப் பாடு (முத்துலிங்கம், செம்பருத்தி, இளையராஜா)
பட்டு வண்ண ரோசாவாம் (புலமைப்பித்தன், கன்னிப் பருவத்திலே, சங்கர்-கணேஷ்)
பட்டினும் மெல்லிய பூவிது (கண்ணதாசன், ஞாயிறும் திங்களும், எம்.எஸ்.விசுவநாதன்)

இன்னும் எத்தனையெத்தனையோ பாடல்கள்.

பட்டுத் துணியின் மென்மையும் பளபளப்பும் பெண்ணின் சருமத்தோடு ஒப்பிடச் சிறந்ததுதான்.

அதனால் தானோ என்னவோ பட்டு என்றாலே பெண்களுக்கு அவ்வளவு பிடிக்கிறது. ஊருக்கு ஊர் எத்தனை பட்டுச்சேலைக் கடைகள். சென்னையை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். தியாகராய நகர் உஸ்மான் சாலை ஒன்று போதுமே தமிழ்ப் பெண்களின் பட்டு மோகத்தை எடுத்துக் எடுத்துக்காட்ட.

அதை விடுங்கள். பட்டு என்று பெண்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கமும் முன்பு இருந்திருக்கிறதே. பருத்தி கம்பளி என்றெல்லாம் பெண்களுக்கோ ஆண்களுக்கோ பெயர் வைக்கும் வழக்கமே இல்லையே! ஆங்கிலத்தில் சில்க் என்றால் தமிழர்களுக்கு நினைவுக்கு வருவது நடிகை சில்க் சுமிதா தானே! அதுதான் பட்டின் வெற்றி.

கந்தன் கருணை திரைப்படத்தில் சிவனிடம் பார்வதி சொல்வதாக “பெண்ணாகப் பிறந்து விட்டால் பட்டாடைகளும் பொன்னாபரங்களும் போதும் என்று சொல்வாளா சுவாமி” என்று ஒரு வசனம் உண்டு.

பார்வதி தேவியையே பட்டுத்துணி பற்றிப் பேச வைத்த பெருமை தமிழர்களையே சாரும். சகோதரி வழியில் சகோதரனாகிய பாற்கடல் சீனிவாசன் கட்டியிருப்பதும் பட்டுப் பீதாம்பரம் தானாம்.

பட்டுத்துணி சீனாவிலிருந்து வந்தது என்று படித்திருக்கிறோம். கேள்விப்பட்டிருக்கிறோம். பாசமலர்களான பார்வதியும் பரந்தாமனும் சீனாக்காரர்களா என்று சோதிக்க வேண்டும். பார்வதி இமவான் மகள். இமயத்தின் உச்சி இன்று சீனாவில்தான் இருக்கிறது. அதே போல பாற்கடலும் அங்குதான் இருக்க வேண்டும்.

அப்படியானால் தமிழர்களுக்கு பட்டு பற்றியெல்லாம் சமீபத்தில்தான் தெரியுமா? தமிழ் மக்கள் எவ்வளவு காலமாக பட்டுத்துணியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்? பட்டு என்ற சொல் சங்க இலக்கியங்களில் உள்ளதா? இந்த மூன்று கேள்விகள்தானே அடுத்து நமக்குத் தோன்றுகின்றன.

பட்டு பழந்தமிழர் அறிந்த துணிவகையே. சங்க இலக்கியங்களில் இதற்குக் குறிப்புகள் உள்ளன. ஆனால் பெயர்தான் வேறு.

பட்டுத்துணிக்குப் பழந்தமிழர் கொடுத்த பெயர் நூலாக் கலிங்கம். அதாவது நூற்காத துணி.

ஏன் அந்தப் பெயர்? பருத்தியிலிருந்து நூல் உண்டாக்கும் முறையும் பட்டுநூலை உண்டாக்கும் முறையும் வெவ்வேறு.

மென்மையான பஞ்சுப் பொதியைத் திரித்து மெலிதாக்கி ராட்டையின் உதவியால் நூலாக்குவார்கள். ஆனால் பட்டுநூலை அப்படித் திரிப்பதில்லை. கொதிக்கின்ற நீரில் பட்டுப்புழுக்களின் கூடுகளைப் போட்டு பட்டு இழையை அப்படியே உருவி விடுவார்கள். இணையத்தில் பட்டுநூல் உருவும் முறைக்கு நிறைய காணொளிக் காட்சிகள் உள்ளன. தேடிப் பார்த்தால் நான் சொல்வது புரியும்.

பருத்தி நூலோ கம்பளி நூலோ இந்த வகையில் செய்யப்படுவதில்லையே. ஆகையாதால் பட்டுத் துணிக்கு நூலாக் கலிங்கம் என்று பெயர்.

அன்புடன்,
ஜிரா

248/365