அறிந்தும் அறியாமலும்

உடல் நலம் பாதிக்கப்பட்ட 94 வயதான ஒருவரை சமீபத்தில் சந்தித்தேன். அவர் முதலில்  சொன்ன வார்த்தைகள் ‘ போன ஜன்மத்தில் என்ன பாவம் செய்தேனோ இப்படி கஷ்டப்பட வேண்டியிருக்கிறது’. இந்த போன ஜன்ம புண்ணியம் / பாவம் என்பது நாம் எல்லாரும் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள்.

எல்லா முற்பிறப்புகளிலும் நாம் செய்த, செய்ய நினைத்த, செய்ய விரும்பிய செயல்களின் பலன்கள்தான் ஊழ்வினை என்பது இந்து மத நம்பிக்கை. இதை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். பிரமனால் நெற்றியில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் தலைவிதி என்பது இதுதான். ‘விதியின் பிழை நீ இதற்கு என் கொல் வெகுண்டது’ என்று இராமன் இலக்குவனுக்குச்சொல்வதாக கம்பன் சொல்வது இந்த ஊழ்வினையைத்தான். வள்ளுவர் சொல்லும் ‘ஊழிற்பெருவலி யாவுள’ இவ்வினையைத்தான்.

பொன்னகரம் என்ற படத்தில் பொன்னடியான் எழுதிய ‘வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள்’ என்ற பாடலில் (இசை சங்கர் கணேஷ் பாடியவர் கே ஜே ஜேசுதாஸ்) சொல்லும் வரிகள் http://www.inbaminge.com/t/p/Ponnagaram/Vazhukinra%20Makkalukku.eng.html

வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி

பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளை சேருமடி

சேர்த்து வைத்த புண்ணியம் தான் சந்ததியை காக்குமடி

அந்த வகையில் இந்த நிலையில் எனக்கோர் காவல் ஏதடி

கொங்கு வேளாள இன மக்களிடயே பிரபலமாக இருக்கும் நாட்டுப்புற பாடலான  ‘அண்ணான்மார் சுவாமி கதையில்  இந்தப் பிறவியில் கஷ்டப்படும் ஒரு பெண்ணின் ஆதங்கம் சொல்லும் வரிகள்

கூலி குறைத்தோமோ குறை மரக்கால் அளந்தோமோ

பிச்சைக்கு வந்தவனை பின்னே வரச்சொன்னோமோ

அன்னமென்று வந்தவரை அடித்துத் துரத்தினோமோ

ஆண்டியை அடித்தோமா அநியாயம் செய்தோமா

பார்ப்பாரை அடித்தோமா  பால் பசுவை கொன்றோமா

பங்காளி வயல்பரப்பை பாதி வெட்டிப் போட்டோமா

அறிந்தும் அறியாமலும் நாம் செய்யும் எல்லா செயல்களையும் பட்டியலிடும் வரிகள்.

நம் செயல்களின் பலன் நம் சந்ததியை காக்கும் அல்லது பாதிக்கும் என்ற எண்ணம் மனிதனை நல்வழிப்படுத்தும் என்ற நம்பிக்கை சரி என்றே தோன்றுகிறது.

மோகனகிருஷ்ணன்

247/365