ரொம்பம்பம்

  • படம்: ஆசை
  • பாடல்: கொஞ்ச நாள் பொறு தலைவா
  • எழுதியவர்: வாலி
  • இசை: தேவா
  • பாடியவர்: ஹரிஹரன்
  • Link: http://www.youtube.com/watch?v=gNmNT8RNIBM

என்னுடைய காதலியை ரொம்ப ரொம்ப பத்திரமா

எண்ணம் எங்கும் ஒட்டிவெச்சேன் வண்ண வண்ணச் சித்திரமா,

வேறொருத்தி வந்து தங்க என் மனசு சத்திரமா?

எனக்கு ‘ரொம்ப’ப் பிடிச்ச பாட்டு இது. உங்களுக்கும் பிடிக்கும் என்று ‘ரொம்ப’ நம்பிக்கையாகச் சொல்வேன்.

அது சரி, ‘ரொம்ப’ன்னா என்ன?

ரகரக் குடும்பத்தைச் சேர்ந்த எந்த எழுத்தும் தமிழ்ச் சொற்களின் தொடக்கத்தில் வராது. அதனாலேயே, ‘ரத்தம்’ என்பதுபோன்ற வடமொழிச் சொற்களை ‘இரத்தம்’ என்று எழுதுவார்கள்.

ஆக, ‘ரொம்ப’ என்பது தமிழ்ச் சொல்லாக இருக்க வாய்ப்பில்லை. வேறு எப்படி வந்திருக்கும்?

குழாயடிகளில் தண்ணீர் பிடிக்கிறவர்கள், ‘குடம் ரொம்பிடிச்சு’ என்பார்கள். அதன் அர்த்தம், குடம் நிறைந்துவிட்டது, இன்னும் சரியாகச் சொல்வதென்றால், குடம் நிரம்பிவிட்டது.

‘நிரம்ப’ என்ற இந்த அழகிய சொல்லைதான் நாம் கொஞ்சம் கொஞ்சமாக ‘ரொம்ப’ என்று மாற்றிக்கொண்டுவிட்டோம். இதன் பொருள், நிறைந்தல், முழுமையாகுதல்.

ஆக, ‘ரொம்ப ஆசை’ என்றால், என் நெஞ்சமெல்லாம் நிரம்பிக் கிடைக்கும் ஆசை என்று பொருள். ‘ரொம்ப அழகு’ என்றால், அழகின் உச்சம், பூரண அழகு அவள் என்று அர்த்தம்.

’ரொம்ப’ச் சுவாரஸ்யமான சேதி, இல்லையா?

***

என். சொக்கன் …

04 08 2013

246/365