தலைவா
அலுவலகத்தின் internal செய்தி மடலில் ‘தலைமை’ பற்றி எழுத வேண்டியிருந்தது. ஏதாவது ஒரு புதிய கோணம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்து, என்னிடம் இருந்த சில புத்தகங்களையும் இணையத்தையும் அலசினேன். முதலில் வள்ளுவர்.
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு
அரசனுக்குரிய தகுதிகள் என்று அவர் சொல்வதை தலைமைக்கும் பொருத்தலாம். துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும் என்கிறார்.
இணையத்தில் ‘பைபிள் கதாபாத்திரங்கள் சொல்லித்தரும் 12 முக்கிய தலைமைப்பண்புகள்’ என்ற கட்டுரை கிடைத்தது. கொஞ்சம் சுவாரசியம். சில எம்ஜிஆர் படப் பாடல்களில் இயேசு பற்றிய குறிப்பு உண்டு என்பதும் நினைவுக்கு வந்தது. எழுதுவதை தள்ளி வைத்து கொஞ்சம் தேடல். ‘முன்பு இயேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்’ என்று ஒரு வரி. ‘புத்தன் இயேசு காந்தி பிறந்தது’ என்று இன்னொரு பாடல் வரி. இவர்கள் எல்லாம் கருணை, மன்னிப்பு, அஹிம்சை, என்று போதித்தவர்கள் தானே? ஒரு உயர்ந்த குறிக்கோளை நோக்கி பயணம் செய்தவர்கள் தானே? வள்ளுவன் சொல்லும் தகுதிகள் இவைதானே?
இதையே வாலி பெற்றால் தான் பிள்ளையா படத்தில் நல்ல நல்ல பிள்ளைகளை என்ற பாடலில் சொல்கிறார் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் டிஎம் எஸ்) http://www.youtube.com/watch?v=SNePlhFN5hw
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
மக்கள் மனதில் தன் பிம்பம் எப்படி இருக்க வேண்டும் என்று எம்ஜிஆர் நினைத்தாரோ அதற்கேற்ற வார்த்தைகள். சபாஷ் வாலி!
வாலி டாக்டர் சிவா என்ற படத்தில் நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் என்ற பாடலில் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் டிஎம்எஸ்) இதே கருத்தை மறுபடியும் சொல்கிறார். http://www.youtube.com/watch?v=hnU48bOPZZY
மலைபோல் உயர்ந்த மனமிருந்தால்
எந்த நிலையிலும் மனிதன் வாழலாம்
நல்ல பனி போல் உருகும் குணமிருந்தால்
எந்த பகைவரும் வீழ்ந்திட காணலாம்
நல்ல வரிகள். ஆனால் நாம் காணும் தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள்? கண்ணதாசன் சொன்னது போல் ‘பிடிபட்ட பின்தானே கள்வன், அது மட்டும் அவன் பேரும் தலைவன்’ என்பது தானே நிஜம்?
இயேசு ஆடுகளையும், ஆயர்பாடியில் கண்ணன் மாடுகளையும் மேய்ப்பவர்களாக இருப்பதில் ஏதேனும் செய்தி இருக்கிறதா? ஆம் என்றே தோன்றுகிறது. தலைவன் என்பவன் எப்போதும் முன்னால் நிற்க வேண்டியதில்லை. அபாயங்களை (ரிஸ்க்) அறிந்து அதற்கேற்ப வியூகம் அமைத்து செயல்பட வேண்டும் என்பதுதான் செய்தியா?
மோகனகிருஷ்ணன்
244/365
amas32 7:02 pm on August 2, 2013 Permalink |
உண்மையான தலைவன் என்பவன் தன் மக்களின் நன்மையை மட்டுமே வைத்துச் செயல் படவேண்டும். அப்படி ஒரு பெரிய பொறுப்பை அவன் சுமக்கும் பொழுது ஈகை, தியாகம், நேர்மை, திடமான மனம், கூட்டத்தை சாமர்த்தியமாக வழிநடத்தும் இலாவகம், என்று பல குணங்கள் தேவையாக இருக்கிறது. இன்று சாணக்கியத் தனமே போதுமானதாக உள்ளது. Dog eat dog world! தலைவன் தன்னைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று நினைக்கிறான். அப்படிப்பட்டவனைப் பின்பற்றவும் ஒரு ஆட்டு மனதை உள்ளது.
கருணை, பொறுமை, கடமை இவை மூன்றும் உள்ளத் தலைவனை எங்கே போய் தேடுவது?
amas32