ஒரே ஜீவன்

  • படம்: நாயகன்
  • பாடல்: நீ ஒரு காதல் சங்கீதம்
  • எழுதியவர்: புலமைப்பித்தன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: மனோ, கே. எஸ். சித்ரா
  • Link: http://www.youtube.com/watch?v=E2NA3TzvQsM

வானம்பாடி பறவைகள் ரெண்டு, ஊர்வலம் எங்கோ போகிறது,

’காதல்’, ‘காதல்’ எனும் ஒரு கீதம், பாடிடும் ஓசை கேட்கிறது

இசை மழை எங்கும் பொழிகிறது,

எங்களின் ஜீவன் நனைகிறது!

ஊர்வலம் சென்ற வானம்பாடிப் பறவைகள் இரண்டு, பன்மை, அப்படியானால், ‘போகின்றன’ என்றல்லவா எழுதியிருக்கவேண்டும்? ‘போகிறது’ என்பது தவறல்லவா?

’எங்களின் ஜீவன்’ என்று சொல்லும்போதே, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் (பன்மை) என்பது புரிகிறது. அப்படியானால், ‘நனைகின்றன’ என்றல்லவா எழுதியிருக்கவேண்டும்? நனைகிறது என்பது தவறல்லவா?

இந்த வரிகளை எழுதியவர் சாதாரண கவிஞர் அல்ல, புலமைப் பித்தன், அதுவும் ”புலவர்” புலமைப் பித்தன். மெட்டுக்குப் பொருந்தவேண்டும் என்பதற்காக அவர் இலக்கண சுத்தமற்ற வரிகளை எழுதியிருப்பாரா?

கவிதை இருக்கட்டும், கொஞ்சம் லோக்கலாக வருவோம். தினமும் காலை எழுந்தவுடன் பல் தேய்க்கிறோம். ஒரு பல்லா, முப்பத்திரண்டு பற்களா? ‘பற்களைத் தேய்க்கிறோம்’ என்று பன்மையில் சொல்லாமல் ஒருமையில் சொல்வது ஏன்?

‘சொந்தக் காலில் நிற்கிறேன்’ என்று சபதம் செய்கிறார் ஒருவர். ஒற்றைக் காலில் நிற்க அவர் என்ன கொக்கா? அவருக்கு இரண்டு கால்கள் உள்ளனவே, அவர் ஏன் ‘சொந்தக் கால்களில் நிற்கிறேன்’ என்று சொல்வதில்லை?

‘கண்ணால் பார்த்தேன்’ என்று சாட்சி சொல்கிறார் இன்னொருவர். ஏன் ஒருமை? ஒரு கண்ணை மூடிக்கொண்டு இன்னொரு கண்ணால் பார்த்தாரா?

தமிழில் ஒன்றாகச் செயல்படும் விஷயங்களைச் சொல்லும்போது, பன்மை அவசியமில்லை. இரண்டு கண்கள், இரண்டு கைகள், இரண்டு கால்கள், முப்பத்திரண்டு பற்கள் என்றாலும், பேசும்போதும் எழுதும்போதும் ‘கண்ணால் பார்த்தேன்’, ‘கையால் சமைத்தேன்’, ‘பல்லால் சிரித்தேன்’ என்று ஒருமையில் சொல்லலாம்.

அதுபோல, இந்தப் பாடலில் வரும் காதல் ஜோடி ஒன்றாக இணைந்துவிட்ட தருணம். ‘எங்களின் ஜீவன் நனைகிறது’ என்று ஒருமையில் சொல்லி அவர்கள் ஒன்று கலந்துவிட்டதைச் சொல்லிவிடுகிறார் புலமைப்பித்தன்.

கை(களைத்) தட்டி வரவேற்கவேண்டிய வரி இது!

***

என். சொக்கன் …

01 08 2013

243/365