கேள்வியும் பதிலும்

ஒரு கேள்வி என்று இருந்தால் அதற்கான பதில் தக்க பதிலாக இருந்தால்தான் சுவையாக இருக்கும். அதென்ன தக்க பதில்?

ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். நண்பர் ஒருவரோடு உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது பழந்தமிழர் குங்குமம் வைத்தார்களா என்று பேச்சு வார்த்தை. அதற்கு நான் இப்படிச் சொன்னேன்.

சங்ககாலத்தில் பெண்கள் நெற்றிக்குச் சாந்து இட்டுக் கொண்டார்கள். ஆனால் சங்க இலக்கியத்தில் குங்குமம் கிடையாது.

நண்பரோ குறும்பர். அவரும் விடாமல், “அப்படியானால் சங்க இலக்கியத்தில் ஆனந்த விகடன், குமுதம், நக்கீரன் எல்லாம் இருக்கிறதா?” என்று கேட்டார்.

நான் சொன்ன குங்குமத்தோடு சேர்த்து நண்பர் சொல்வதெல்லாம் வாரயிதழ்களின் பெயர்கள். இந்தக் கேள்விக்கு நான் சிரித்து மழுப்பியிருக்கலாம். ஆனால் அது சுவையாக இருந்திருக்காது. நானும் ஒரு பதிலைச் சொன்னேன்.

சங்க இலக்கியத்தில் ஆனந்த விகடன் கிடையாது. ஆனால் குமுதமும் நக்கீரனும் உண்டு

இதை நண்பர்கள் ரசித்தார்கள். ஏன்? சங்க இலக்கியத்தில் குமுத மலர்களும் பெரும் புலவர் நக்கீரரும் உண்டே. இப்படி விடை சொல்வதுதான் தக்க விடை சொல்வது என்பார்கள்.

அப்படி ஒரு பாடலை கேள்வியாக எடுத்துக் கொண்டு இன்னொரு பாடலை அதற்குத் தக்க விடையாகப் பொருத்த முடிந்தால் எப்படியிருக்கும் என்று தோன்றியது. ஒரு முயற்சிதான். செய்து பார்ப்போமே! கண்ணதாசன் இருக்க கவலை ஏன்!

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

கவியரசர் எழுதிய இந்த வரிகளில் இருக்கும் கேள்வியைத்தான் இன்று பலரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிம்மதி எங்கே இருக்கிறது? அது தெரிந்தால் உலகம் அமைதியாகி விடுமே!
அது தெரியாமல் மக்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள்?

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாதடி ஞானத்தங்கமே

நிம்மதி எங்கு இருக்கிறது என்று புரிந்து அந்த இடத்தில் தேடாமல், எங்கெங்கோ அலைந்து எதிலெதிலோ தேடிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். அவர்கள் எதுவும் அறியாதவர்கள். புரியாதவர்கள். இதுவும் கவியரசர் எழுதிய பாடல்தான்.

அறிவில்லாத மக்கள் என்னதான் செய்வது? அவர்களுக்கு வழியே இல்லையா?

இந்தக் கேள்விக்கும் ஒரு கண்ணதாசன் பாடலே உண்டு. முழுப்பாடலே இந்தக் கேள்விக்குத் தக்க பதில்தான்.

முதலில் மனிதனின் இன்றைய நிலையை எடுத்துச் சொல்கிறார் கவிஞர். தீர்வைச் சொல்வதற்கு முன் பிரச்சனையைத் தெளிவாகப் புரியவைப்பதற்காக…

ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
மனித இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

அடுத்தடுத்த வரிகளில் தீர்வை முன்வைக்கிறார் கவியரசர். அதிலும் முதலாக கடமையை நினைவுறுத்துகிறார்.

எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்
எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு
அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று

நம்முடைய கருமத்தை நாம்தான் துடைக்க வேண்டும். நம்முடைய கடமையை நாம் தான் செய்ய வேண்டும் என்று சொன்ன கண்ணதாசன், அந்தக் கடமையைச் செய்வதற்குத் துணிவை அடுத்தடுத்த வரிகளில் தருகிறார்.

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் – அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

கடமை புரிந்து விட்டது. அதற்கான ஊக்கமும் கிடைத்து விட்டது. ஆனால் எந்த நம்பிக்கையில் அதைத் தொடர்ந்து செய்வது?

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவன் உண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்ள
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல!

இதைவிட நிம்மதி இழந்து அது எங்கே எங்கே என்று இல்லாத இடமெல்லாம் தேடியலையும் மனிதர்களை எப்படி அறிவுரை சொல்லித் திருத்துவது!

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
இசை – மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் – இராமமூர்த்தி
படம் – புதிய பறவை
பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=G3oWKwrbVlg

இருக்கும் இடத்தை விட்டு
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர் – சீர்காழி கோவிந்தராஜன்
இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்
படம் – திருவருட் செல்வர்
பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=pbte64aTKPA

ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல்
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர் – வாணி ஜெயராம்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – அபூர்வ இராகங்கள்
பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=51YPPoBKllg

அன்புடன்,
ஜிரா

242/365