ஞாயிறு என்பது…

ஒரு நண்பர் வீட்டில் Solar power இன்வெர்ட்டர் வாங்கியிருக்கிறார். அவரிடம் கொஞ்ச நேரம் பேசியதில் எப்படி தேர்ந்தெடுப்பது, என்ன செலவு, என்ன நன்மைகள் என்று நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன். இவ்வளவு சுலபமாகக் கிடைக்கும் ஒளியையும் சக்தியையும் ஏன் நாம் இன்னும் முழுமையாக உபயோகிக்கவில்லை?

சூரியன் என்ற மாபெரும் சக்தி உலகத்தையே இயக்கும் வலிமை கொண்டது. சூரியன் இல்லாவிட்டால், உலகில் எதுவுமே நடைபெறாது. சூரியன் இருளை அகற்றுகிறது. மேகங்களை உருவாக்கி மழையைப் பொழிகிறது, Photosynthesis, நமக்கு வைட்டமின் D தருகிறது என்றெல்லாம் பள்ளியில் படித்ததுதான்

இந்தியா சூரியனை வழிபடும் தேசம். சூரியனை முன்னிறுத்தி நிறைய கோவில்கள் உண்டு..மிகவும் பழமை வாய்ந்த ரிக்வேதம் “ஒன்றானது, மெய்யானது, பேதமற்றது, அளவிட முடியாதது” என்றெல்லாம் சொல்லப்படும் பரப்பிரும்மத்தை சூரியனோடு ஒப்பிட்டு புகழ் பாடுகிறது. ஆனால் கவிஞர்கள் நிலவைப் பாடிய அளவு சூரியன் பற்றி பாடவில்லையோ?

கர்ணன் படத்தில் கண்ணதாசன் எழுதிய ஆயிரம் கரங்கள் நீட்டி பாடல் ஒரு அபூர்வ முத்து.(இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர்கள் சீர்காழி கோவிந்தராஜன், டி எம் எஸ்,)

http://www.youtube.com/watch?v=xsCtzX-9TiU

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!

அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி!

தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!

தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!

தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!

தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!

ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!

நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!

எட்டே வரியில் அந்த கதிரவன் பெருமையெல்லாம் சொல்லும் சாகசம். ஆயிரம் கரம் என்று  ஒரு வர்ணனை. தாயினும் பரிந்து எல்லாரையும் அரவணைக்கும் குணம் சொல்லி, இருள் நீக்கம் தரும் ஒளியை சொல்லி , அனைத்து உயிர்களும் தழைக்க உதவும் பெருமை சொல்லி அந்த கொதிக்கும் நெருப்பை தூயவர் இதயம் போல் என்று கோடிட்டு காட்டி ஆனாலும் நெருப்பை தள்ளி வைத்து அதன் சாரம் மட்டும் தரும் அமைப்பை போற்றி – அற்புதமான பாடல் வரிகள்.

ராவணனோடு யுத்தம்  செய்தபோது சற்று அயர்ச்சியும் சோர்வும் கொண்ட ஸ்ரீராமனுக்கு, ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் வகையில் அவருக்கு முனிவர் அகத்தியர் உபதேசித்த  அற்புத ஸ்லோகம் ஆதித்ய ஹ்ருதயம். அதன் சாரத்தை திரைப்பாடலில் தந்தவர் கண்ணதாசன்.

கம்ப ராமாயணத்தில் அகத்தியர் போதிக்கும் இந்த நிகழ்ச்சி இல்லை என்று படித்தேன். தெரிந்தவர்கள் விளக்கவும்

மோகனகிருஷ்ணன்

241/365