பூவாயி!

  • படம்: எங்க ஊரு காவக்காரன்
  • பாடல்: அரும்பாகி மொட்டாகி
  • எழுதியவர்: கங்கை அமரன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: தீபன் சக்கரவர்த்தி, பி. சுசீலா
  • Link: http://www.youtube.com/watch?v=Y3BYARCNZLc

அரும்பாகி மொட்டாகிப் பூவாகி

பூப்போல பொன்னான பூவாயி!

’எங்க ஊரு காவக்காரன்’ என்று கிராமிய மணம் கமழும் படத் தலைப்பு, கிராமத்து மெட்டு, நடிப்பதோ கிராமத்து வேடங்களுக்கென்றே நேர்ந்துவிடப்பட்ட ராமராஜன். ஆனால் பாடல் எழுத உட்கார்ந்த கங்கை அமரன்மட்டும், திருக்குறளில் இருந்து முதல் வரியை எடுத்திருக்கிறார்!

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலரும் இந்நோய்

வள்ளுவர் ‘நோய்’ என்று சொல்வது காதலைதான். அது காலையில் அரும்பாகிறது, மாலையில் மலர்ந்துவிடுகிறது, பகலெல்லாம் போதாக இருக்கிறது.

அதென்ன போது?

மலர்வதற்குத் தயாரான பூவுக்குதான் ‘போது’ என்று பெயர். இன்றைக்கு நாம் மொத்தமாக மறந்துவிட்ட அருமையான தமிழ்ச் சொல் இது.

என்னைக்கேட்டால், இந்த மெட்டுக்குக் கங்கை அமரன் ‘அரும்பாகிப் போதாகிப் பூவாகி’ என்றே எழுதியிருக்கலாம். ’போது’ என்ற சொல் புழக்கத்தில் இல்லை என்பதால் அதை ‘மொட்டு’ என்று மாற்றிக்கொண்டிருக்கிறாரோ?

அவர் கிடக்கட்டும், இந்தத் திருவள்ளுவர் காதலை ‘நோய்’ என்று சொல்லிவிட்டாரே, ஆட்டோ வாசகங்களில் ஆடிக்குப் பின்னே ஆவணியும், தாடிக்குப் பின்னால் தாவணியும் என்பதுபோல் தாடிக்கார வள்ளுவர் காதலை வெறுத்துச் சொன்ன உவமையா இது?

அதற்கு இன்னொரு திருக்குறளில் பதில் இருக்கிறது:

இருநோக்கு இவள் உண்கண் உள்ளது, ஒருநோக்கு

நோய், நோக்கு ஒன்று அந்நோய் மருந்து

இந்தப் பெண்ணுக்கு இரண்டு பார்வை, ஒரு பார்வை நோய் தரும், இன்னொரு பார்வை அந்த நோயைத் தீர்க்கிற மருந்தாகும். டூ இன் ஒன்.

காதலும் அதேமாதிரிதான். நோய் தரும், அந்த நோய்க்கு அதுவே மருந்துமாகும்.

***

என். சொக்கன் …

29 07 2013

240/365