சின்னச் சின்ன தோசை

அச்சமில்லை அச்சமில்லை படத்துக்காக ஈரோடு தமிழன்பன் எழுதிய “கையில காசு வாயில தோசை” பாட்டைக் கேட்டால் எனக்குச் சிரிப்பு வரும்.

பின்னே. போயும் போயும் காசோடு தோசையை இணை வைத்து எழுதி விட்டாரே. கொட்டிக் கொடுத்தாலும் நல்ல தோசை எல்லா இடத்திலும் கிடைக்குமா?

கங்கை எப்படி விண்ணுலகத்தில் தோன்றி மண்ணுலகத்துக்கு வந்ததோ, அதே போல தோசைக்கும் கி.ரா பாணியில் ஒரு கதை உண்டு.

தோசை ஒரு தெய்விகப் பண்டம். இந்திரனோட அமராவதியில் மட்டும் முன்னொரு காலத்துல சுட்டுச் சுட்டு தின்னுக்கிட்டிருந்தாங்க.

கூட்டம் பெரிய கூட்டம். முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆச்சே… இந்தப் பயகளுக்காகவே இருபத்துநாலு மணி நேரமும் தோசையச் சுட்டு சுட்டு காமதேனுக்கும் நந்தினிக்கும் குறுக்கு விட்டுப் போச்சு.

சட்டியில மாவ ஊத்தி அரைகுறையா வெந்ததும் தோசையச் சுத்தி தெளிச்சாப்புல எண்ணெய் விடனும். அப்ப கெளம்பும் ஒரு மணம். அந்த வாசத்துக்கே பத்து தோசை உள்ள போகும். மொதல்ல இந்த வாடை இந்திரன் அரமனைக்குள்ளதான் சுத்திக்கிட்டிருந்துச்சு. தொடர்ந்து தோசையச் சுட்டுக் கிட்டேயிருந்ததால அரண்மனைக்குள்ள வாசன நெரிசல் வந்துருச்சு. கொஞ்சம் வெளிய போகட்டும்னு ஒத்த சன்னல மட்டும் தெறந்து விட்டாக.

அமராவதிக்குப் பக்கத்தூரு சத்தியலோகம். தோச வாட மொதல்ல அங்கதான் போச்சு. நாலு மூக்குலயும் தோச வாடைய இழுத்து ரசிச்சான் பிரம்மன். இப்பிடி ஒரு தின்பண்டம் செஞ்சு தந்ததில்லையேன்னு சரசுவதியோட சண்டை. அந்தம்மாவும் வாடை பிடிச்சிக்கிட்டே தேவலோகத்துக்கு வந்து தோசை ரகசியத்தை தெரிஞ்சுக்குச்சு. தோசையால பிரச்சனை வந்துறக்கூடாதேன்னு தேவேந்திரன் ஒரு ஒப்பந்தம் போட்டான்.

ஒப்பந்தப்படி தெனமும் தோசை பிரம்மலோகம் வந்துரும். ஆனா தோச ரகசியத்த மகாவிஷ்ணுவுக்கும் சிவனுக்கும் சொல்லக் கூடாது.

சொன்னபடி தெனமும் தோசையும் கெட்டிச் சட்டினியும் தவறாம வந்தது. சத்தியலோகம் முழுக்க தோச வாட. கொஞ்சம் கொஞ்சமா அது பரவி பாற்கடலுக்குப் போயிருச்சு. அங்கயும் ஒரே சண்டை. தெனமும் வெண்ணெயக் குடுத்து ஏமாத்துறியேன்னு மகாவிஷ்ணு லச்சுமிகிட்ட சடச்சாரு. அந்தம்மாளும் தோசை வாடையின் ஆதிமூலத்தைக் கண்டுபிடிக்க சத்தியலோகம் வரைக்கும் வந்துருச்சு. மருமக அப்படி என்னதான் சமைக்கிறான்னு லச்சுமிக்கு ஒரு பொறாமை. படிச்ச பொம்பளைக எங்க சமைச்சாகன்னு அந்தம்மாளுக்குப் புரியல.

தோசை ரகசியம் லச்சுமிக்கும் தெரிஞ்சு போச்சு. ஆனா தோசை சுடுறது எப்படின்னு மட்டும் கேட்டுக்கிட்டு லச்சுமிதேவியே பாற்கடல்ல தோசை சுட்டாங்க. பாற்கடல்ல வெண்ணெய் நெறைய இருக்கே. எண்ணெய்க்கு பதிலா வெண்ணெய்ய ஊத்தி புதுசா தோசை சுட்டாங்க. வெண்ண தோசைய மொதமொதக் கண்டுபிடிச்சது லச்சுமிதான்.

வெண்ண தோசையோட வாசம் கைலாசத்துக்கே போயிருச்சு. ஆறு மூக்கால ஆறுமுகன் வாட புடிச்சான். வந்த வாடையெல்லாம் தும்பிக்கையாலயே உறிஞ்சிட்டாரு பிள்ளையாரு. பிள்ளைக ரெண்டும் பார்வதியைப் படுத்தி எடுக்குதுக. பிள்ளைப் பாசத்துல பார்வதியும் தோசை சுடக் கத்துக்குறாங்க.

அப்படிச் சுடும் போது பிச்சையெடுக்கப் போயிருந்த சிவன் வந்துர்ராரு. அவரு மூக்குலயும் வாடை ஏறுது. எத்தனையோ வீடுகள்ள பிச்சை எடுத்தும் இப்பிடியொரு வாசனை வந்ததில்லையேன்னு சிவனுக்கு கோவம்.“இது வரைக்கு இந்தப் பண்டத்த ஒங்களுக்குச் சுட்டுக் கொடுத்திருப்பாளா சக்களத்தி? பிள்ளைகளுக்கு மட்டும் இம்புட்டு வாசனையா சுட்டுக்குடுக்குறா”ன்னு கங்கை சிவனோட தலைல உக்காந்துக்கிட்டு ஏத்திவிடுறா.

அந்தக் கோவத்துல சிவனாரு தாண்டவம் ஆடுறாரு. ஆடுறாரு ஆடுறாரு. ஒலகமே ஆடுற மாதிரி ஆடுறாரு. பார்வதியும் பதிலுக்கு பதில் நல்லா ஆடுது. அப்போ சுட்டு வெச்சிருந்த ஒரு தோசை கீழ விழுந்துருது. சிவனார் தன்னோட திறமையக் காட்டுறதுக்காக கால் விரலால தோசைய எடுத்து சாப்பிடுறாரு. அரோகரா அரோகரான்னு கைலாசம் முழுக்க ஒரே பரவசச் சத்தம். அந்தப் பரவசத்துல சண்டை முடிஞ்சு சமாதானம் ஆயாச்சு.

சிவனார் தாண்டவம் ஆடும் போது ரெண்டு தோசை பூமியில் விழுந்துருச்சாம். அத எடுத்துப் பாத்து தமிழ்நாட்டுப் பெண்கள் விதவிதமா தோசை சுடக் கத்துக்கிட்டாங்களாம்.

இதுதான் தோசை பூமிக்கு வந்த கதை. 🙂

பதிவில் இடம் பெற்ற பாடல்
பாடல் – கையில காசு வாயில தோச
வரிகள் – ஈரோடு தமிழன்பன்
பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை – வி.எஸ்.நரசிம்மன்
படம் – அச்சமில்லை அச்சமில்லை
பாடலின் சுட்டி – http://youtu.be/iHeAB0LHr28

அன்புடன்,
ஜிரா

239/365