வாழ நினைத்தால் வாழலாம்

ஒரு அலுவலகத்தில் கொஞ்ச நேரம் காத்திருந்தபோது, அங்கே இருந்த வார இதழ்கள், செய்திதாள் எல்லாவற்றையும் படித்துக்கொண்டிருந்தேன். வரி விளம்பரங்கள் மட்டும் வெளியாகும் ஒரு Free Ads பேப்பர் சுவாரசியமாக இருந்தது. வாங்க, விற்க, கடன், கிரெடிட் கார்ட், வீடு மனை, எல்லாவற்றிற்கும் ரிப்பேர் என்று பல விளம்பரங்கள். சுய முன்னேற்ற வகுப்புகள் என்ற பகுதி ஒரு பெரிய ஆச்சரியம். மொழி, தற்காப்பு, தன்னம்பிக்கை, நினைவாற்றல், பேச்சு, கையெழுத்து, தலையெழுத்து, மன அழுத்தம் குறைக்க என்று எதையும் கற்றுத்தர ஒரு கோச்சிங் கிளாஸ்!

கவிஞர் வாலி வாய்ப்புகள் கிடைக்காமல் சோர்ந்து, விரக்தியடைந்தபோது கண்ணதாசன் பாடல் ஒன்று நம்பிக்கை அளித்தது என்று எல்லா பேட்டிகளிலும் சொல்வார். கவியரசு இந்தவகையில் நிறைய பாடல்கள் எழுதியுள்ளார். பலே பாண்டியா படத்தில் வரும் வாழ நினைத்தால் வாழலாம் என்ற பாடலில் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி, பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா) அருமையான வரிகள் http://www.youtube.com/watch?v=s0brrvQD8OU

வாழ நினைத்தால் வாழலாம்

வழியா இல்லை பூமியில்

ஆழக் கடலும் சோலையாகும்

ஆசையிருந்தால் நீந்திவா

என்ற ஆரம்பம். ‘ நினைத்தால், ஆழக்கடலும், ஆசையிருந்தால்’ மூன்று முக்கியமான வார்த்தைகள். முதல் புள்ளி நம் மனம் நினைக்கவேண்டும். சரி ஏன் ‘ஆழக்கடல்’ ? வள்ளுவன் சொன்ன பிறவிப்பெருங்கடலா ? இருக்கலாம். கடலில் வீழ்ந்தவனுக்கு வாழும் ஆசையிருந்தால் நீந்துவான் என்று சொல்கிறார். வாழும் வழியும் சொல்கிறார்

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்

பார்த்து நடந்தால் பயணம் தொடரும்

பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்

கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்

காட்சி கிடைத்தால் கவலை தீரும்

கவலை தீர்ந்தால் வாழலாம்

எளிய வரிகள். விளக்கம் சொல்ல வேண்டியதில்லைதான். ஆனால் கவிஞர் வாலி மக்கள் இந்த வார்த்தைகளை தவறாக புரிந்துகொள்ள கூடாது என்று இந்த வரிகளுக்கு உரை எழுதியுள்ளார். பணம் படைத்தவன் படத்தில் கண் போன போக்கிலே என்ற பாடலில் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி, பாடியவர் டி எம் எஸ்) http://www.youtube.com/watch?v=jHzgpI91uKc

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா

மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

பார்க்கத்தெரிந்தால் பாதை தெரியும் என்றால் கண் போன போக்கிலே கால் போகலாம் என்று அர்த்தம் இல்லை. நாம் போக நினைக்கும் பாதையை visualize செய்துகொள்ள வேண்டும் என்றே அர்த்தம். பயணம் தொடர்ந்தால் என்றால் கால் போன போக்கில் என்று அர்த்தம் இல்லை. பாதை தெரிந்த பிறகு அந்தப்பாதையில் கவனமாக நடக்கவேண்டும் என்றே அர்த்தம். தவறாக ஒரு அடி எடுத்துவைத்தாலும் இலக்கை விட்டு விலகி பாதை தவறலாம். நமக்கு முன் வாழ்ந்த நல்லவர்கள் வகுத்த பாதையை மறக்காமல் அதில் பயணம் போனால் வாழலாம்

சுய முன்னேற்றம், Motivation, தன்னம்பிக்கை பற்றி நிறைய புத்தகங்கள், வலைத்தளங்கள், கோச்சிங் தேவைப்படுவது ஆரோக்கியமானதா? தெரியவில்லை.ஆனால் அந்த Free Adsல் இருக்கும் நூற்றுக்கணக்கான விளம்பரங்கள் சொல்லும் பாசிடிவ் செய்தி ‘வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்’ என்பதுதான்.

மோகனகிருஷ்ணன்

238/365