பூவான சல்லி
- படம்: காக்கிச் சட்டை
- பாடல்: சிங்காரி சரக்கு
- எழுதியவர்: வாலி
- இசை: இளையராஜா
- பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
- Link: http://www.youtube.com/watch?v=nHL-VDUyPy4
சிங்காரி சரக்கு, நல்ல சரக்கு, சும்மா
கும்முன்னு ஏறுது, கிக்கு எனக்கு,
நான் விட்டெறிஞ்சேன் சல்லிய, அட ஊத்திக்கிட்டேன் மில்லிய,
குதிரமேல ஏறிப்போயி வாங்கப்போறேன் டில்லிய!
பின்னால் வரப்போகும் மில்லி, டில்லிக்கு எதுகையாக சல்லியை எழுதிவிட்டார் வாலி. நாம் சாதாரணப் பேச்சில் அதிகம் பயன்படுத்தாத அந்தச் சொல்லைப்பற்றிக் கொஞ்சம் பேசுவோம்.
’சல்லி’யை நாம் சினிமாவில் நிறைய கேட்டிருப்போம். குறிப்பாக, ’நீ அவளைக் கல்யாணம் செஞ்சுகிட்டா, என் சொத்துல சல்லிக் காசு கிடைக்காது’ என்று பணக்கார அப்பாக்கள் வசனம் பேசுவர். ‘சல்லிப் பயல்’ என்று சிலரைக் கோபிக்கார்கள். ‘சல்லிக் காசு பெறாத வீடு’ என்று அலட்சியமாகப் பேசுவார்கள்.
தமிழில் ‘சல்லி’க்கு நிறைய அர்த்தங்கள் உண்டு. அவற்றில் ஒன்று, அதிக மதிப்பு இல்லாத சில்லறைக் காசு. மேற்சொன்ன வசனத்தில் ஹீரோவின் தந்தை மகனுக்குக் கொடுக்க மறுப்பதும் அதைதான், வாலியின் பாட்டில் வரும் நாயகன் பாட்டில் வாங்க விட்டெறிவதும் அதே சல்லியைதான்.
நாயன்மார்களில் ஒருவர்கூட, சல்லியை விட்டெறிந்தார். ஆனால் அவருக்குப் பாட்டில் கிடைக்கவில்லை. அந்தப் பரமசிவனே காட்சி கொடுத்து ஆட்கொண்டான்.
அவர் பெயர் சாக்கிய நாயனார். புத்த மதத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் சிவன்மீது பற்று.
ஒரே பிரச்னை, சிவனை எப்படி வழிபடுவது என்று அவருக்குத் தெரியவில்லை. பக்கத்தில் கிடந்த ஒரு சல்லியை, அதாவது, சிறிய உடைந்த ஒரு கல்லை எடுத்துச் சிவலிங்கத்தின்மீது விட்டெறிந்தார்.
சிவன் கோபிக்கவில்லை. இப்படி ஒவ்வொரு நாளும் அவர் எறிந்த சல்லிகளை மலர்களாக எண்ணி ஏற்றுக்கொண்டான். ‘புத்தன் மறவாது ஓடி எறி சல்லி புது மலர்களாக்கினான் காண்’ என்று இந்த நிகழ்ச்சியைப் பாடுவார் திருநாவுக்கரசர்!
***
என். சொக்கன் …
26 07 2013
237/365
amas32 9:16 pm on July 30, 2013 Permalink |
நம் புராணங்களில் தான் இறையன்புக்கு எவ்வளவு அழகான உதாரணகள்! இங்கே இப்போ சல்லியை (கற்கள்) ஒருவன் மேல் அடித்தால் அவன் பாராங்ககல்லையே நம் மேல் தூக்கி எறிந்துவிடுவான். ஆனால் சல்லியை (காசை)அடித்து வேண்டியதை வாங்கிக் கொள்ளும் வித்தையும் இங்குண்டு!
amas32