மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ?

நீதிமன்றங்களை கடக்கும்போது அங்கே கண்ணுக்கு தெரியும் மக்கள் கூட்டம் எப்போதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அதெப்படி தினமும் இவ்வளவு பேர் வழக்காட வருகிறார்கள்? எதிராளியை பணிய வைக்க வழக்கு, அப்பீல், என்று முட்டி மோத இவ்வளவு பேர் தயாராக இருக்கிறார்களா?

இதில் வேதனையான விஷயம் – பெரும்பான்மையான வழக்குகள் உறவுகளுக்குள் தான். ஒரே குடும்பத்தில் உள்ள சொந்தங்கள், திருமண பந்தத்தால் இணைந்தவர்கள். சில தினங்களுக்கு முன் வரை இணைந்திருந்து பின் ஏதோ காரணங்களால் பிரிந்து, மனம் கசந்து வழக்காட வருகிறார்கள். நீதிமன்றம் தரும் அனுபவங்கள் அவர்களுக்கு நிம்மதியை அளிக்கிறதா?

வள்ளுவர் உட்பகை என்று ஒரு அதிகாரமே எழுதுகிறார்,அதில் ஒரு குறள்

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்

ஏதம் பலவும் தரும்

உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும் என்கிறார். மனம் நிறைய கோபமும் பகையும் பொங்கினால் என்ன ஆகும்? எல்லோரும் நல்லவரே என்ற படத்தில் பகை கொண்ட உள்ளம் (இசை வி குமார், பாடியவர் கே ஜே ஜேசுதாஸ்) என்ற பாடலில் புலமைப்பித்தன் இதை அருமையாக விளக்குகிறார். http://www.youtube.com/watch?v=YuhOzHP6Af8

பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்

தீராத கோபம் யாருக்கு லாபம்

முதல் வரியிலேயே நிம்மதி இழந்த மனம் பற்றி சொல்கிறார். தீராத கோபம் பகையை வளர்க்கும். அதனால் வேதனை அதிகரிக்கும் என்கிறார்.

வீட்டுக்கு வெளிச்சம் வருவதற்காக கூரையை எரிப்பாரோ

வேதனை தன்னை விலை தந்து யாரும் வாங்கிட நினைப்பாரோ

இதயத்தை திறந்து நியாயத்தை பேசு வழக்குகள் முடிவாகும்

இருக்கின்ற பகையை வளர்த்திட தானே வாதங்கள் துணையாகும்

பட்ட பின்னாலே வருகின்ற ஞானம் யாருக்கும் உதவாது

ஏனோ இந்த பாடலை கேட்கும்போது எனக்கு மகாபாரதத்தில் துரியோதனன் பொறாமையால் வெந்து கோபப்பட்டு பகை வளர்த்து வீழ்ந்தது நினைவுக்கு வரும்.

இதில் சரி தவறு என்பது பற்றி பேசவில்லை.இந்த பாதை சம்பந்தப்பட்டவர்களுக்கு என்ன தருகிறது? நிச்சயமாக நிம்மதியைத் தரவில்லை. மாறாக வேதனையையும் கண்ணீரையும் தருகிறது. நீதி தேவதை தன் கண்ணைக் கட்டிக்கொண்டிருப்பது இதையெல்லாம் பார்க்க வேண்டாம் என்பதற்காகவும் தானோ?

மோகனகிருஷ்ணன்

236/365