பகலில் வா!

சிந்தனைக் குரங்கை எவ்வளவுதான் கட்டிப்போட்டாலும் அது மரத்துக்கு மரம் தாவிக்கொண்டிருக்கிறது. இப்போதும் அப்படியே! ஏ.ஆர்.ரகுமான் இசையில் மரியான் திரைப்படத்துக்காக யுவன்ஷங்கர் ராஜா பாடிய ”கடல் ராசா நான்” பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான்… கடல் ராசா நான்..

இந்தப் பாட்டை தனுஷ் எழுதினார் என்று கேள்விப்பட்டு நான் சற்று ஆச்சரியப்பட்டுதான் போனேன்.

பாட்டில் பெரிய கவித்துவம் எதுவுமில்லை என்றாலும் ஏன் ஆச்சரியப்பட்டேன் என்று நினைக்கிறீர்களா?

அதற்குக் காரணம் “கொம்பன் சுறா” என்ற பேரைப் பயன்படுத்தியிருப்பதுதான்.

சுறா மீன் எல்லாருக்கும் தெரியும். அதைக் கொம்பன் சுறா என்று இப்போது பொதுவாகச் சொல்வதில்லை. ஆனால் சங்க காலத்தில் சுறாமீனுக்கு பேர் கொடுத்ததே அதன் கொம்புதான் (திமில்).

சுறாமீனுக்கு சங்ககாலத்தில் கோட்டுமீன் என்று பெயர்.

கோடு என்றால் கொம்பு. யானைத்தந்தத்தைக் கூட கோடு என்றுதான் சொல்வார்கள்.

கோடு என்பது கொம்பானால் சுறாவை கொம்பன் சுறா என்று சொல்வது பொருத்தம் தானே! அதனால்தான் ஆச்சரியப்பட்டேன்.

சுறா மீன் வரும் ஒரு சிறிய சங்ககாலத்துக் காதலைப் பற்றிச் சொல்லப் போகிறேன். எல்லாரும் ஒரே நொடியில் இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி தாவிக்குதித்து விடுங்கள்.

கடலும் கடல் சார்ந்ததுமான நெய்தல் நிலம்.

வெண்ணிற மணற்பரப்பில் பொன்னிறத்தில் மீன்கள் உலர்ந்திருக்கும் ஊரில் இருக்கிறாள் தலைவி.

அவள் பருவமோ பார்வைக்குப் பதம். உருவமோ கண்களுக்கு இதம்.

மூடி வைத்த பாலுக்கும் பூனை தேடி வரும். பூட்டி வைத்த பெண்மைக்கும் எங்கிருந்தோ ஒரு திருடன் தேடி வருவான். இவளோ கடலின் அலையோடு அலையாக விளையாடியவள். முத்தோடு முத்தாக உறவாடியவள். அவளுக்காகவே சங்குகள் சங்கீதம் பாடும். கடற்பறவைகளின் இறகுகள் சாமரம் வீசும்.

வலையில் மீன் பிடிப்பது பரதவர் வழக்கம். ஆனால் அவள் கண்ணென்னும் மீனுக்கு ஒருவன் வலை வீசினான்.

அவனுக்கு அவளைப் பிடித்தது. அவனுக்குப் பிடித்தது அவளுக்கும் பிடித்தது.

பிடித்தவர்கள் ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டார்கள். படித்தால் அறிவு வரும். பிடித்தால் உறவு வரும். அவர்களுக்குள் உறவு வந்தது.

முதலில் இரவு வரும். அடுத்து அவன் வருவான். காதலுக்குத் துணை இருட்டுதானே. பக்கத்துத் தீவிலிருந்து வர வேண்டுமல்லவா. நீந்தி வருவான். வளைந்த கால்களை உடைய முதலையும் சுறாவும் நிறைந்த கடல் என்பதைக் கூட நினைக்காமல் அச்சமின்றி வருவான்.

காமாதுரானாம் நா பயம் நா லஜ்ஜா” என்று வடமொழியில் சொல்வார்கள். காமத்தில் விழுந்தவர்களுக்கு அச்சமும் நாணமும் ஏது!

அப்படி அச்சமின்றி வந்தவனிடம் உள்ளத்தில் இருந்ததை மிச்சமின்றி சொன்னாள்!

இரவில் வருகின்ற தலைவனே! பகலில் வா! தேர் பூட்டி வா! அதிலும் ஒரே இனமாகிய குதிரைகளைப் பூட்டி இசையெழுப்பும் மணிகளைக் கட்டிய தேரை ஓட்டிவா!

நீ வரும் வழியெங்கும் பூக்காடுகள். வரிசையான புன்னை மரங்களில் தொங்கும் கொடிகள் உன்னுடைய தேரில் சிக்கிக் கொண்டு பூக்களை உன் மீதும் உன் தேர் மீதும் உதிர்க்கும். அந்த மலர்களில் உள்ள மகரந்தத்தாதுகள் சிந்திச் சிதறி உன்னுடைய மரத்தேர் பொற்றேராக மின்னும்.

இத்தனை திறமாக பட்டப் பகலில் என் தந்தை உன்னை அறிந்து கொள்ளும் வண்ணம் எங்கள் ஊருக்கு வா! முறைப்படி என்னை உரிமையாக்கிக் கொள். அதுதான் காதலுக்கு மரியாதை.”

அவள் சொன்னாள். அவன் செய்தான். அவர்கள் இனிது வாழ்ந்தார்கள்.

இப்படி ஒரு அழகான கதையை அகனானூற்றுப் பாடலாகச் சொன்னவர் மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார். நெய்தல் திணையில் அமைந்த இந்தப் பாடலில் சுறா மீன் வரும் வரிகளை மட்டும் கீழே கொடுத்திருக்கிறேன்.

கொடுந்தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும்
இருங்கழி யிட்டுச்சரம் நீந்தி யிரவின் வந்தோய்
(வளைந்த கால் முதலையோடு கொம்புடைய சுறாவும் வழங்கும்
உப்பங்கழிகள் வழியாக நீந்தி இரவில் வந்தவனே)

ஒன்று மட்டும் புரிகிறது. காதல் வந்துவிட்டால் உலகில் எல்லாமே துச்சமாகப் போய்விடுகிறது. உயிர் உட்பட. அதனால்தான் முதலையும் சுறாவும் கடிக்கும் என்று தெரிந்தும் உயிரை மதிக்காமல் அவளைத் தேடி வந்திருக்கிறான்.

அன்புடன்,
ஜிரா

235/365