எனதும் தனதும்

  • படம்: தேன் நிலவு
  • பாடல்: ஓஹோ எந்தன் பேபி
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: ஏ. எம். ராஜா
  • பாடியவர்கள்: ஏ. எம். ராஜா, எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=CFqy0ltmYuU

ஓஹோ, எந்தன் பேபி, நீ

வாராய், எந்தன் பேபி,

கலை மேவும், வர்ண ஜாலம்

கொண்ட கோலம் காணலாம்!

எந்தன், உந்தன் என்ற சொற்களை நாம் தினசரிப் பேச்சில் பயன்படுத்துவதில்லை. ஆனால் கவிதைகளில், உரைநடையில், மேடைப் பேச்சில் நிறைய பயன்படுத்துகிறோம்.

பிரபலமாகிவிட்ட இந்த இரு வார்த்தைகளும், இலக்கணப்படி பார்த்தால் சரியா?

எந்தன், உந்தன் என்ற சொற்கள் என் + தன், உன் + தன், அதாவது என்னுடைய, எனக்குச் சொந்தமான, உன்னுடைய, உனக்குச் சொந்தமான என்ற பொருளில் வருகின்றன.

‘ன, ல முன் ற, ன ஆகும் த, நக்கள்’ என்பது நன்னூல் சூத்திரம்.

அதாவது, ஒரு சொல்லின் தொடக்கத்தில் ’த’ அல்லது ‘ந’ என்ற எழுத்து இருந்து, அதன் முந்தைய சொல்லின் நிறைவில் ’ன்’ அல்லது ’ல்’ இருந்தால், அந்த ‘த’ என்ற எழுத்து ‘ற’ என மாறும், ‘ந’ என்ற எழுத்து ‘ன’ என மாறும்.

இந்தச் சூத்திரத்தின்படி, என் + தன் ஆகியவை சேரும்போது, ’ன்’ என்ற எழுத்து முதல் சொல்லின் நிறைவில் உள்ளதால், இரண்டாவது சொல்லின் தொடக்கத்தில் உள்ள ‘த’ என்ற எழுத்து, ‘ற’வாக மாறி, அது ’என்றன்’ என ஆகும், இதேபோல் உன் + தன் = உன்றன்.

பிறகு ஏன் கண்ணதாசன் (ஓஹோ, எந்தன் பேபி), வாலி (எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா), வைரமுத்து (இது கம்பன் பாடாத சிந்தனை, உந்தன் காதோடு யார் சொன்னது?) என்று எல்லாரும் எந்தன், உந்தன் என்று எழுதுகிறார்கள்?

இதற்கு மூன்று விளக்கங்கள் சொல்லலாம்.

#1 வலிய நீட்டிச் சொல்லும் விளக்கம்

’என்’ என்று ஒருமையில் சொன்னால், என் + தன் = என்றன். அதையே கொஞ்சம் மாற்றி ‘எம்’ என்று பன்மையில் சொன்னால், எம் + தன் = எந்தன்.

ஒருமை எப்படிப் பன்மை ஆகும்?

பாடுவது காதலர்கள் அல்லவா? அவன் என்றாலே அதில் அவளும் சேர்ந்துவிடுகிறாள், அதனால் பன்மை. அம்புடுதேன் 😉

#2 கவித்துவ விளக்கம்

இவையெல்லாம் காதல் பாட்டுகள். ‘மெல்லினங்கள் பாடு கண்ணே, வல்லினங்கள் வாய் வலிக்கும்’ என்று வைரமுத்து எழுதியதுபோல, ‘என்றன்’, ‘உன்றன்’ என்றால் பாடும் காதலர்களுக்கு வாய் வலிக்குமே, அதனால் வல்லின எழுத்தாகிய ‘ற’கரத்தை நீக்கி, மென்மையாக ‘எந்தன்’, ‘உந்தன்’ என்று மாற்றிவிடுகிறார்களோ என்னவோ!

#3 கிளுகிளு விளக்கம்

காதலர்கள் மத்தியில், யாரோ வகுத்த புணர்ச்சி விதிகளுக்கெல்லாம் மரியாதையில்லை 😉

***

என். சொக்கன் …

23 07 2013

234/365