மணக்கோலம்

பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கும் தகப்பனுடைய மனநிலை எப்படியிருக்கும்? பஞ்சுப் பொதி போல அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் கையில் வாங்கிய நாளிலிருந்து வளர்த்து ஆளாக்கி ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்கும் போது எந்தத் தகப்பனும் கோழையாகித்தான் போகிறான்.

சமீபத்தில் அபியும் நானும் என்றொரு திரைப்படம் வந்தது. அந்தப் படம் ஒற்றை மகளை வளர்த்து ஆளாக்கித் திருமணம் செய்து வைக்கும் தந்தையின் மனநிலையை அழகாகக் காட்டியது. அந்தப் படத்திற்காக வித்யாசாகர் இசையில் வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டு மதுபாலகிருஷ்ணன் பாடிய ஒரு பாடலின் வரிகளைக் கீழே தந்திருக்கிறேன்.

மூங்கில் விட்டு சென்ற பின்னே
அந்த பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன
பெற்ற மகள் பிரிகின்றாள்
அந்தப் பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன

மூங்கிலில்தான் இசை பிறக்கிறது. ஆனால் அது மூங்கிலோடு இருந்துவிடுவதில்லை. அப்படிப் பிறந்து மூங்கிலைப் பிரிந்த இசைக்கும் மூங்கிலுக்கும் என்ன தொடர்பு? ஏன் மூங்கிலுக்கு இப்படியொரு நிலை? ஆண்டவனே அறிவான். கடவுள் தகப்பனாகப் பிறக்க வேண்டும். பெண்குழந்தைக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும்.

இன்னொரு தந்தை. இவனும் மகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறான். தாயில்லாத மகளை தாய்க்குத் தாயாய் தந்தைக்குத் தந்தையாய் வளர்த்தவன். அவளுக்குப் பூச்சூட்டிச் சீராட்டி வளர்த்ததால் அவன் சோகத்தை வேறுவிதமாகச் சொல்கிறான்.

காலையில் கதம்பங்கள் அணிந்திருப்பாள்
மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள்
திங்களில் சாமந்தி வைத்திருப்பாள்
வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்
கட்டித்தங்கம் இனிமேல் அங்கெ என்ன பூவை அணிவாளோ
கட்டிக்கொண்ட கணவன் வந்து சொன்ன பூவை அணிவாளோ

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாங்கித் தந்த தகப்பனுக்கு மகள் கணவன் வீடு போனால்.. கணவன் சொன்ன பூவைத்தான் சூடிக் கொள்வாள் என்பதே பெருஞ்சோகமாகத் தாக்குகிறது. மருமகன் மேல் ஒரு பொறாமை கலந்த கோவம் உண்டாவதைத்தான் இந்த வரிகள் காட்டுகின்றன. இப்படியான அருமையான வரியை சங்கர்-கணேஷ் இசையில் வைரமுத்து அவர்கள் எழுத ஏசுதாஸ் உணர்வுப்பூர்வமாக பாடியிருப்பார்.

மேலே பாடியவர்கள் எந்தக் குறையுமில்லாத மகளைப் பெற்ற தகப்பன்கள். ஆனால் அடுத்து பார்க்கப் போகும் தகப்பன் நிலை வேறு மாதிரி. இவன் மகள் அழகுச் சிலைதான். திருமகள் அழகும் கலைமகள் அறிவும் மலைமகள் திறமையும் கொண்டவளே. ஆனால் பேச்சு வராத பதுமையாள். இப்படிப் பட்ட பெண் போகுமிடத்தில் எப்படியிருப்பாளோ என்று தகப்பனும் தாயுமாக கலங்குகிறார்கள். நீதிபதி படத்துக்காக கங்கையமரன் இசையில் வாலி எழுதிய டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் பாடிய உயர்ந்த பாடல்.

தந்தை: அன்பை உரைத்திட வாயில்லாத அழகுச் சிலை இவள்
தாய்: கொண்ட பசியையும் கூறிடாத குழந்தை போன்றவள்
உன் வசத்தில் இந்த ஊமைக்குயில்
இவள் இன்பதுன்பம் என்றும் உந்தன் கையில்
காவல் நின்று காத்திடுக கண் போலவே பொன் போலவே

மருமகனே, உன் மேல் உள்ள அன்பைச் சொல்லக் கூட வாயில்லாத அழகுச் சிலையப்பா என் மகள்” என்று தகப்பன் கதறுகிறான். அடுத்தது தாயின் முறை. தாயல்லவா. குழந்தையின் பசியை உலகில் முதலில் தீர்க்கும் தெய்வமல்லவா! அதனால்தான் “தனக்குப் பசிக்கிறது என்று கூட கூறிடாத குழந்தை போன்றவள் என் மகள். அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்கத் தெரியாது. ஐயா, மருமகனே. நீயே நாங்கள் வணங்கும் கடவுள். அவளுக்கு வேண்டியதையெல்லாம் செய்ய வேண்டியது உன் கடமை.

பெற்றால்தான் பிள்ளை. வளர்த்தாலும் பிள்ளைதான். அப்படி வளர்த்த ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கிறான் ஒரு செல்வந்தன். அவன் புலம்பும் வரிகளைப் பாருங்களேன்.

நான் வளர்த்த பூங்குருவி வேறிடம் தேடி
செல்ல நினைத்தவுடன் அமைந்ததம்மா அதற்கொரு ஜோடி
நிழற்படமாய் ஓடுது என் நினைவுகள் கோடி
அந்த நினைவுகளால் வாழுகிறேன் காவியம் பாடி

மேலே வாலி எழுதிய வரிகள்தான் நிதர்சனம். மோகனப் புன்னகை திரைப்படத்துக்காக மெல்லிசை மன்னர் இசையில் டி.எம்.எஸ் அவர்கள் இந்தப் பாடலைப் பாடினார்.

எத்தனை காலங்களாக மகளைக் கட்டிக் கொடுக்கும் பெற்றோர்கள் இப்படியிருக்கிறார்கள்? சங்ககாலத்துக்கும் முன்னாடியிருந்தே இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அகனானூற்றில் ஒரு அழகான பாடல் நமக்கு விளக்கமாக கிடைத்திருக்காது.

தொடிமாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்
நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி,
————————————–
நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி,
வைகுறு மீனின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே?
பாடல் – கயமனார்
திணை – பாலை
கூற்று – செவிலித்தாயின் கூற்று
நூல் – அகனானூறு

மேலே கொடுத்துள்ள வரிகள் புரியவில்லையா? விளக்கமாகச் சொல்கிறேன். மகள் ஒருவனை விரும்பி களவு மணம் செய்து அவனோடு சென்றுவிட்டாள். அந்தச் சோகத்தை தந்தையின் சார்பாகவும் ஒரு தாய் புலம்புகிறாள்.

”என்னையும் சுற்றத்தாரையும் கொஞ்சம் கூட உள்ளத்தில் எண்ணிப் பார்க்காமல், ஊரில் புகழ் மிகுந்த தந்தையின் காவலையும் தாண்டிக் கிளம்பிச் சென்றாளே! இவள் இங்கு இருந்த வரைக்கும் தோழியரோடு பந்தாடுவதால் உண்டாகும் களைப்பைக் கூடத் தாங்க மாட்டாளே! இன்று கொதிக்கும் மலைக்காட்டில் அவனோடு கிளம்பிப் போனாளே!”

கோதை நாச்சியாரை அரங்கனுக்கு மணம் செய்து கொடுத்த பெரியாழ்வாரும் பெண்ணைப் பெற்ற பாசத்தில் “ஒரு மகள் தன்னை உடையேன் (நான்). உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன். செங்கண்மால் தான் கொண்டு போனான்” என்று புலம்புகிறார். ஆண்டவனுக்கே பெண் கொடுத்தாலும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு புலம்பல்தான் மிச்சம் போலும்.

பிள்ளையைப் பெற்றால் கண்ணீர் என்று சொல்வதும் இதனால்தான் போலும். ஆண்டாண்டு காலமானாலும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இதுதான் நிலை. தான் ஒருத்தியை இன்னொரு வீட்டிலிருந்து கொண்டு வந்ததை நினைக்காத ஆண்கள் தன் மகள் இன்னொரு வீடு போகும் போது கலங்குவது வியப்பிலும் வியப்புதான்!

இப்படிப் புலம்பிய பெரியாழ்வார் பாத்திரம் திரைப்படமாக வந்த போது அதிலும் தந்தையாக நடித்துச் சிறப்பித்தர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அதுமட்டுமல்லாமல் இந்தப் பதிவில் பார்த்த நான்கு பாடல்களில் மூன்று பாடல்கள் நடிகர் திலகம் தந்தையாக நடித்த சிறப்பு பெற்றவை.

மூங்கில் விட்டுச் சென்ற (அபியும் நானும்) – http://youtu.be/Jv2ZUsGQpWw
மரகதவல்லிக்கு மணக்கோலம்(அன்புள்ள அப்பா) – http://youtu.be/MNx6Oz7KDxc
பாசமலரே அன்பில் விளைந்த (நீதிபதி) – http://youtu.be/YKo4y7B1iWI
கல்யாணமாம் கச்சேரியாம் (மோகனப் புன்னகை) – http://youtu.be/v5MyR7lX30E

அன்புடன்,
ஜிரா

233/365