கொஞ்சம் மிருகம் நிறைய கடவுள்
ஏதோ ஒரு சானலில் நடிகர் விவேக் ‘எனக்குள் தூங்கிக்கிட்டிருக்கிற மிருகத்தை தட்டி எழுப்பாதே’ என்று தேவர் மகன் spoof ல் பேசுவதைக் கேட்டேன். இது நாம் அடிக்கடி கேட்கும் வசனம்தான்.. ‘கோபம் வந்தால் நான் மனுஷனாவே இருக்கமாட்டேன்’ என்று சிலர் சொல்வதுண்டு. அதே அர்த்தம். வார்த்தைகள் முன்னே பின்னே மாறி வரலாம்.
அதென்ன மிருகம்? கண்ணதாசனைக் கேட்கலாம். சித்தி படத்தில் ஒரு பாடலில் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் ஏ எல் ராகவன் குழுவினர்) கொஞ்சம் definition கிடைக்கிறது. ttp://www.youtube.com/watch?v=jelFpEUGkuc
இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி
மனிதன் ஆனதடா – அதிலே
உள்ளம் பாதி கள்ளம் பாதி
உருவம் ஆனதடா
என்று ஆரம்பித்து ‘தந்திரத்தில் நரி தன்னலத்தில் புலி, அலைவதில் கழுதை’ போன்ற மனிதனை வனத்திலே விட்டு விட்டால் மிருகம் எல்லாம் வரவேற்கும் என்று நக்கல் செய்கிறார்.
ஆண்டவன் கட்டளை என்ற படத்தில் ஆறு கட்டளை சொல்லும் ஆறு மனமே ஆறு பாடலில் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் டி எம் எஸ்) இன்னொரு பாதியையும் சேர்த்து விளக்குகிறார் http://www.youtube.com/watch?v=G97Q6mVk4yc
ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்
இதில் மிருகம் என்பது கள்ள மனம்,
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
எல்லாரிடமும் தெய்வமும் மிருகமும் இருக்கும், பொதுவாக வெளியில் தெரியும் முகம் எது என்பதை வைத்தே சமுதாயம் ஒரு மனிதனின் தன்மையை எடை போடும். எப்போதும் பெருமாள் முகம் காட்ட ஆசைப்பட்டாலும் அவ்வப்போது சிங்க முகம் வெளியில் தெரியும். இதுவே நடைமுறை நிஜம். ஆளவந்தான் படத்தில் வைரமுத்து எழுதிய ‘கடவுள் பாதி மிருகம் பாதி’ என்ற பாடலில் மிருகமே ஜெயிக்கிறது என்று சொல்கிறார் http://www.youtube.com/watch?v=Gz_BunTylIM
கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே மிருகம் உள்ளே கடவுள்
விளங்க முடியாக் கவிதை நான்
மிருகம் கொன்று மிருகம் கொன்று
கடவுள் வளர்க்க பார்க்கின்றேன்
ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று
மிருகம் மட்டும் வளர்கிறதே
கண்ணதாசன் ஆலயமணி படத்தில் சட்டி சுட்டதடா என்ற பாடலில் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் டி எம் எஸ்) இதே போராட்டம் பற்றி வேறு கோணம் சொல்கிறார். இறுதியில் தெய்வம் வெல்லும் என்கிறார். http://www.youtube.com/watch?v=DkIfGXXDP3g
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா
உள்ளே ஒரு பெரும் போராட்டம். அதில் வெல்லப்போவது யார்? எப்போதும் தெய்வம் வெற்றி பெறுவது போல ஏதாவது match fixing பண்ண முடியுமா?
மோகனகிருஷ்ணன்
232/365
amas32 6:38 pm on July 24, 2013 Permalink |
புராண காலத்தில் அசுரன் தேவன் என்றுத் தனித் தனியாகப் பிரித்து இரு குலமாக வாழ்ந்தனர். கலி காலத்தில் ஒரு மனிதனுக்குள்ளேயே அரக்கத்தனமும் தெய்வ குணமும் ஒருசேரக் குடியிருக்கிறது. அதனால் அவனின் அந்த நேர இயல்புக்கேற்ப அவன் அசுரனா தேவனா என்று கணித்துக் கொள்ள வேண்டியுள்ளது.
துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்று ஒரு பழமொழி உள்ளது. ஆனால் சமயத்தில் அவருள்ளும் நல்ல குணம் தலைத்தூக்கும் பொழுது போற்றத்தான் வேண்டியுள்ளது!
amas32