நரை இல!

  • படம்: பூவெல்லாம் கேட்டுப்பார்
  • பாடல்: சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே
  • எழுதியவர்: பழநிபாரதி
  • இசை: யுவன் ஷங்கர் ராஜா
  • பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்
  • Link: http://www.youtube.com/watch?v=ccmN5YvrrDI

நரை கூடும் நாட்களிலே,

என்னைக் கொஞ்சத் தோன்றுமா?

அடி போடி!

காதலிலே நரைகூட தோன்றுமா?

இந்த வரிகளைக் கேட்கும்போதெல்லாம், வாலி பாணியில் ‘தோன்றுமா’ என்ற வார்த்தையை வைத்துப் பழநிபாரதி அமைத்திருக்கும் நயமான வார்த்தை விளையாட்டை நினைத்துப் புன்முறுவல் தோன்றும். அடுத்து, ‘காதலிலே நரைகூட தோன்றுமா?’ என்கிற வரியை வியப்பேன். நேராக பாரதிதாசனின் ‘குடும்ப விளக்கு’ காவியத்தில் சென்று நிற்பேன்.

குடும்ப விளக்கின் ஐந்தாவது பாகத்தை, முதியவர் காதலை வடித்துத் தந்திருக்கிறார் பாரதிதாசன். நரையில்லாத அந்தக் காதலைக் கொஞ்சம் ருசிக்கலாம்.

முதிய கணவர் சொல்வது:

விதைத்திட்டேன் அவளின் நெஞ்சில்

….என்றனை! நேற்றோ? அல்ல!

இதற்குமுன் இளமை என்பது

….என்றைக்கோ அன்றைக் கேநான்!

கதையாகிக் கனவாய்ப் போகும்

….நிகழ்ந்தவை; எனினும் அந்த

முதியாளே வாழு கின்றாள்

….என்நெஞ்சில் மூன்று போதும்!

இன்னொரு சந்தர்ப்பத்தில், யாரோ அந்தக் கணவரிடம் கேட்கிறார்கள், ‘வயதாகிவிட்டது, உடல் தளர்ந்துவிட்டது, இன்னும் உங்களுக்குள் காதல் இருக்கிறதா?’

’ஏன் இல்லாமல்?’ என்று கேட்கும் கணவர் பதில் சொல்கிறார், இப்படி:

வாய், மூக்கு, கண், காது, மெய் வாடினாலும்

….மனைவிக்கும் என்றனுக்கும் மனம் உண்டு கண்டீர்!

தூய்மை உறும் அவ்விரண்டு மனம் கொள்ளும் இன்பம்

….துடுக்கு உடைய இளையோரும் படைத்திடுதல் இல்லை!

ஓய்வதில்லை மணிச் சிறகு! விண் ஏறி நிலாவாம்

….ஒழுகு அமிழ்து முழுது உண்டு, பழகு தமிழ் பாடிச்

சாய்வு இன்றி, சறுக்கு இன்றி ஒன்றை ஒன்று பற்றிச்

….சலிக்காது இன்பம் கொள்ளும் இரண்டு மனப் பறவை!

 

அருவி எலாம் தென் பாங்கு பாடுகின்ற பொதிகை

….அசை தென்றல், குளிர் வீசும் சந்தனச் சோலைக்குள்

திரிகின்ற சோடி மயில் யாம் இரண்டு பேரும்,

….தெவிட்டாது காதல் நுகர் செந்தேன் சிட்டுக்கள்!

பெரும் தென்னங் கீற்றினிலே இருந்து ஆடும் கிளிகள்!

….பெண் இவளோ, ஆண் நானோ என இரு வேறாய்ப்

பிரித்து உணர மாட்டாது பிசைந்த கூட்டு அமிழ்து!

….பேசினார் இவ்வாறு, கூசினாள் மூதாட்டி!

அவர் இப்படி வெளிப்படையாகச் சொல்கிறாரே என்பதற்காக அந்த மூதாட்டி வெட்கப்பட்டாலும், உள்ளுக்குள் அவருடைய காதலும் நரைத்திருக்காது என்பதுமட்டும் உறுதி!

அந்த வரியை மறுபடி மறுபடி வாசித்து ரசிக்கிறேன், ‘பெண் இவளோ, ஆண் நானோ என இரு வேறாய்ப் பிரித்து உணரமாட்டாது பிசைந்த கூட்டு அமிழ்து’, நூற்று ஐந்து வயது முதியவர் சொல்வது இது!

***

என். சொக்கன் …

20 07 2013

231/365