அணுவிலும் உளது

காதல் இருக்கிறதே காதல். அது உடம்பில் எங்கு இருக்கும்? காதல் ஆசை உடம்பின் எந்தப் புள்ளியில் உண்டாகிறது? காதல் எங்கே எங்கே என்ற இந்தக் கேள்விக்கு ஒரு விடை சொன்னார் கவிஞர் வைரமுத்து.

காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலக்ட்ரான் உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால் திசுக்கள் தோறும் ஆசைச் சிந்தனை
படம் – எந்திரன்
பாடல் – கவிஞர் வைரமுத்து
பாடியவர்கள் – விஜய் பிரகாஷ், ஷ்ரேயா கோஷல்
இசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
பாடலின் சுட்டி – http://youtu.be/J468i3eg87o

காதல் எங்கு இருக்கும்? அங்கங்கள் எங்கெங்கும் காதல் இருக்குமென்று வைரமுத்து சொல்கிறார். அதனால்தால் காதலால் உண்டாகும் ஆசைச்சிந்தனைகள் உடம்பின் ஒவ்வொரு திசுவிலும் உண்டாகிறது என்கிறார்.

எங்கே இருக்கும் என்ற கேள்விக்கு எங்கும் இருக்கும் என்பதே விடை.

அதனால்தான் காதலால் கண்ணீர் கசிந்து புன்னகை பெருகி அறிவு மயங்கி இதயம் படபடத்து மேனி சிலிர்க்கிறது.

உலகமெங்கும் கடவுள் இருப்பது போல உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் காதல் உணர்வு இருக்கிறது.

காதலைப் பற்றி வைரமுத்து சொன்னார். கடவுளைப் பற்றி பரஞ்சோதி முனிவர் சொன்னார்.

பரஞ்சோதி முனிவர் யார் தெரியுமா? அவர் தான் திருவிளையாடற் புராணம் எழுதியவர்.

அந்த திருவிளையாடற் புராண நூலின் தொடக்கத்தில் விரிசடைக் கடவுளையும் பராசக்தியையும் முருகக் கடவுளையும் சமயக்குரவர்களையும் போற்றி வாழ்த்துகள் பாடியிருக்கிறார்.

அப்படிப் பாடும் போது ஒரு பாட்டை இப்படிப் பாடியிருக்கிறார்.

அண்டங்கள் எல்லாம் அணுவாக அணுக்களெல்லாம்
அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்
அண்டங்கள் உள்ளும் புறம்பும் கரியாயினானும்
அண்டங்கள் ஈன்றாள் துணையென்பர் அறிந்த நல்லோர்

இங்கும் அணுக்களைப் பற்றிதான் பேச்சு. உடம்பில் இருக்கும் அணுக்கள் மட்டுமல்ல. உலகம் முழுவதும் இருக்கும் எல்லா அணுக்களையும் பற்றிய பேச்சு.

அண்டம் என்பது மிகப் பெரியது. அந்த மிகப் பெரிய அண்டங்கள் எல்லாம் அணுவளவுக்கும் சிறியது என்று எண்ணும்படியாக பெரிய உருவெடுத்து நின்றார் சிவபெருமான்.

அணுக்கள் மிகச்சிறியவை. வெற்றுக் கண்கொண்டு காண முடியாதவை. அந்த அணுக்களெல்லாம் அண்டங்கள் என்று பெரிதாகத் தோன்றும் படிக்குச் சிறியதாகவும் தோன்ற வல்லார் விழிநுதலார்.

அதாவது இறைவன் பெரியவைகளுக்கெல்லாம் பெரியவன் சின்னவைகளுக்கெல்லாம் சின்னவன் என்று சொல்கின்றார்.

ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்? அண்டங்களுக்குள் அடங்கியும் அண்டங்களுக்கு வெளியிலும் விரிந்தவன் இறைவன் என்கிறார் பரஞ்சோதி முனிவர்.

அண்டங்கள் அணுக்களால் ஆனவை. ஆகையால் இறைவன் அணுக்களுக்குள் அடங்க வேண்டுமானால் அணுவை விடச் சிறியவனாக இருக்க வேண்டும். அம்மாதிரியே அண்டங்கள் எல்லாம் அவனுக்குள் அடக்கமென்றால் அவன் அண்டங்களையெல்லாம் பெரிதாக இருக்க வேண்டும்.

இப்படி அனைத்தையும் கடந்தும் அனைத்திற்கும் உள்ளும் இருப்பதால்தான் இறைவனைக் கடவுள் என்று தமிழ் போற்றுகிறது.

இத்தகைய பண்பு நலன்களைக் கொண்ட ஈசனுக்குத் துணை யார் தெரியுமா? அண்டங்களை எல்லாம் ஈன்ற பராசக்தி. ஆக உலகத்தின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்திருக்கும் இறைவனின் ஒவ்வொரு அணுவிலும் இறைவி என்னும் காதல் நீக்கமற நிறைந்திருக்கிறது.

இதே கருத்தைத்தானே வைரமுத்து “திசுக்கள் தோறும் ஆசைச் சிந்தனை” என்றார்.

அன்புடன்,
ஜிரா

230/365