நரை எழுதும் சுயசரிதம்

நண்பர் @nchokkan ட்விட்டரில் ‘35க்கப்புறம் 95கூட முக்கால் கிழம்தான்’ என்று எனக்கு சமாதானம் சொன்னார். விவாதம் முடிந்தாலும் அந்த முக்கால் கிழம் என்ற நிலை பற்றி அமைதியாக யோசித்தபோது கொஞ்சம் கவலை வந்தது. தொடர்ந்து சில தினங்கள் அதே யோசனை.

முதுமை என்பது ஒரு பயம். உடலும் மனமும் தளர்ந்து, கை நடுங்கிக் கண் மறைந்து,  காதோரம் எட்டிப்பார்க்கும் நரை என்று முதுமை தரும் மாற்றங்கள் பல. நினைவு மங்கி எல்லாவற்றையும் மறக்க நேரிடலாம். இந்த நிலை சாபமா என்று தெரியவில்லை ஆனால் நிச்சயமாக வரம் இல்லை.

ஆராதனை படத்தில் வைரமுத்து எழுதிய ஒரு குங்குமச் செங்கமலம் என்ற பாடலில் (இசை இளையராஜா பாடியவர்கள் எஸ் பி பாலசுப்ரமணியன் எஸ் ஜானகி)

http://www.youtube.com/watch?v=Nx3opO-h8gg

முதுமை ஒருநாள் நம்மை வந்து தீண்டும்

மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்

முடியை பார்த்தால் முழு வெள்ளை

என்று முதுமையின் அடையாளங்கள் சொல்கிறார்.

ஒரு மெகா சைஸ் Hour glass ல் மேலிருந்து கீழே சரியும் மணலாக கண்ணுக்குத்தெரியாமல் நகரும் வருடங்கள் நம்மை மெதுவாக முதுமை நோக்கி செலுத்தும்.  கண்ணதாசன் போலீஸ்காரன் மகள் படத்தில் வரும் பாடலில்  (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் P B ஸ்ரீநிவாஸ் எஸ் ஜானகி) சொல்வது இதுதான்

http://www.youtube.com/watch?v=H-V8ZciCTR4

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்

அதற்கு முன்னாலே வா..வா..வா…

அழகுடன் இளமை தொடர்ந்து வராது

இருக்கின்ற போதே வா..வா..வா..

இளமை இருக்கும்போது செய்ய வேண்டியவை என்று ஒரு Bucket List போடுகிறார்.

நரை, தள்ளாட்டம் என்ற உடல் சார்ந்த அடையாளங்களைத் தாண்டி முதுமைக்கு வேறு ஒரு முக்கிய அடையாளம் உண்டு. அது தனிமை. கூட்டத்திலும் தனிமையாக உணரும் ஒரு மனோநிலை. வெள்ளிவிழா என்ற படத்தில் வாலி எழுதிய ஒரு பாடல் (இசை வி குமார் பாடியவர் எம் எஸ் விஸ்வநாதன்) வரிகள் இதோ

https://www.youtube.com/watch?v=vvfLzYCmfug

உனக்கென்ன குறைச்சல் – நீயொரு ராஜா..

வந்தால் வரட்டும் முதுமை!

தனக்குத்தானே துணையென நினைத்தால்

உலகத்தில் ஏது தனிமை?

கடந்த காலமோ திரும்புவதில்லை..

நிகழ்காலமோ விரும்புவதில்லை..

எதிர்காலமோ அரும்புவதில்லை..

இதுதானே அறுபதின் நிலை..

அந்த நாளில் அறுபதின் நிலை என்று பாடிவிட்டார். இப்போது வாழ்நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து 60ளில் தொடங்கி எண்பதுகளை கடந்து வாழும் பலர் மனதளவில் தனியாகவே உணர்கிறார்கள்.

முதுமையை  எதிர்கொள்ள நாம் தயாராவதில்லை என்பதே உண்மை. காலத்தை நில் என்று சொல்ல முடிந்தால் , வயதாவதை நிறுத்த முடிந்தால் எப்படி இருக்கும்?

மோகனகிருஷ்ணன்

229/365