விளையாட வா நிலவே!

  • படம்: மின்சாரக் கனவு
  • பாடல்: வெண்ணிலவே வெண்ணிலவே
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்
  • Link: http://www.youtube.com/watch?v=0la-zpyqpkU

வெண்ணிலவே, வெண்ணிலவே,

விண்ணைத் தாண்டி வருவாயா? விளையாட ஜோடி தேவை!

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்பே உன்னை அதிகாலை அனுப்பிவைப்போம்!

குழந்தை விளையாடத் துணையாக, நிலவை அழைப்பது பிள்ளைத்தமிழின் இலக்கணம். அங்கே இதனை ‘அம்புலிப் பருவம்’ என்று அழைப்பார்கள்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம், பெரியாழ்வார் தன்னை யசோதையாகக் கற்பனை செய்துகொண்டு, குழந்தைக் கண்ணனை வர்ணிக்கும்விதமாக அமுதில் கோல் தோய்த்து எழுதிய நாலாயிரம் திவ்யப் பிரபந்தப் பாடல்கள், அவற்றுள் ஒன்றுமட்டும் இங்கே:

என் சிறுக்குட்டன், எனக்கு ஓர் இன் அமுது எம்பிரான்,

தன் சிறு கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான்,

அஞ்சன வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல்

மஞ்சில் மறையாதே, மாமதீ! மகிழ்ந்து ஓடி வா!

நிலாவே,

என் சின்னப் பிள்ளை கண்ணன், எனக்கு இனிய அமுதம் போன்றவன், அவன் தன்னுடைய சின்னக் கைகளை மேலே காட்டிக் காட்டி உன்னை விளையாட அழைக்கிறான்,

அந்தக் கார்மேக வண்ணனோடு விளையாட உனக்கு ஆசை இல்லையா? ஏன் மேகத்தில் மறைந்துகொள்கிறாய்? மகிழ்ச்சியாக இங்கே ஓடி வா!

குழந்தைக்கு விளையாட்டுத் துணையாகும் நிலவை, இங்கே வளர்ந்த இருவர் விளையாட விரும்பி அழைப்பதாகக் கொஞ்சம் வித்தியாசமாகக் கற்பனை செய்துள்ளார் வைரமுத்து.

ஏற்கெனவே இரண்டு பேர் இருக்கும்போது, மூன்றாவதாக ஒரு விளையாட்டுத் தோழன் தேவையா? உண்மையில் அவர்கள் அழைப்பது வானத்தில் உள்ள நிலவைதானா?

இந்தக் கதையின்படி, அவர்கள் இருவரும் ஒருவரை காதலிக்கிறார்கள், ஆனால் அதைச் சொல்வதற்குத் தயங்குகிறார்கள், ஆகவே, ‘விண்ணை(தடைகளை)த் தாண்டி வருவாயா?’ என அவர்கள் அழைப்பது சந்திரனை அல்ல, எதிரே உள்ளவனை(ளை)தான்!

***

என். சொக்கன் …

13 07 2013

224/365