சொட்டு நீலம் டோய்..

சில நாட்களுக்கு முன்  நண்பர் சிபாரிசில் சென்னையில் இருக்கும் டோபி கானா எனப்படும் வண்ணாந்துறை பற்றி ஒரு டாகுமெண்டரி படம் பார்த்தேன். இதில் வந்த ‘வெயிலை நம்பி ஈரத்தில் வாழும்’ என்ற ஒரு வரி சட்டென்று புத்தியில் ஒட்டிக்கொண்டது வரிசையாக தொட்டிகளையும் கல்லையும் பார்த்தவுடன் பழைய பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது.

திருவருட்செல்வர் படத்தில் அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான திருக்குறிப்புத் தொண்டர் பற்றிய காட்சி. கண்ணதாசன் எழுதிய ஆத்து வெள்ளம் காத்திருக்கு என்ற சலவைத் தொழிலாளிகள் அனைவரும் சேர்ந்து பாடுவது போல் அமைந்தப்பாடல்.(இசை கே.வி.மஹாதேவன், பாடியவர்கள்  எஸ்.ஜி. கிருஷ்ணன் குழுவினருடன் டி.எம். சௌந்தரராஜன்)  https://www.youtube.com/watch?v=mYZSNEn4EJg

ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு

போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா – நல்லா

புழிஞ்சு கரையில் காயவச்சா வெள்ளையப்பா

என்று matter of fact ஆரம்பம். அடுத்த வரியில் கவிஞர் சொல்லும்  Comparison ரொம்ப சுவாரசியம்

மனசு போல வெளுத்து வச்சி

உறவைப் போல அடுக்கி வச்சு

வரவைப் போல மூட்டை கட்டி வெள்ளையப்பா நாம

வரவு வைக்கும் நாணயந்தான் வெள்ளையப்பா

மெதுவாக ரன்வேயில் ஊர்ந்து செல்லும் விமானம் சட்டென்று வேகம் பிடித்து வானில் உயர்வது போல கடைசி சரணத்தில் ஒரு take off. மனிதர்களை அழுக்குத் துணியுடன் ஒப்பிட்டு, எப்படி அதை வெளுக்கலாம் என்று வழி சொல்லும் வரிகள்

கந்தையிலே அழுக்கிருந்தா கசக்கி எடுத்துவிடு வெள்ளையப்பா – உன்

சிந்தையிலே அழுக்கிருந்தா சிவனடியை நாடிவிடு வெள்ளையப்பா

உயிரே அழுக்குத் துணி உவர்மண்ணே நம் பிறப்பு

பூவுலக வாழ்க்கை எனும் பொல்லாத கல்லினிலே

மோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே

ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே

அழுக்கெல்லாம் வெளூக்குதடா வெள்ளையப்பா – அவன்

அருள் எனனும் நிழல்தனிலே வெள்ளையப்பா – இந்த

உயிரெல்லாம் வாழுதடா வெள்ளையப்பா

பாரதியாரும் இந்த அழுக்கு மூட்டை பற்றி குள்ளச்சாமியிடம் தாம் பெற்ற உபதேசத்தை சொல்கிறார்.

மற்றொரு நாள் பழங்கந்தை அழுக்கு மூட்டை

வளமுறவே கட்டியவன் முதுகின் மீது

கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்

கருணைமுனி சுமந்து கொண்டு என்னெதிரே வந்தான்.

“தம்பிரானே; இந்த தகைமை என்னே ?

முற்றுமிது பித்தருடைய செய்கையன்றோ

மூட்டை சுமந்திடுவதென்னே ? மொழிவாய் ” என்றேன்

புன்னகை பூத்த ஆரியனும் புகலுகின்றான்:

“புறத்தே நான் சுமக்கின்றேன்; அகத்தினுள்ளே

இன்னொதொரு பழங்குப்பை சுமக்கிறாய் நீ”

என்றுரைத்து விரைந்தவனும் ஏகிவிட்டான்.

மனமென்னும் அழுக்கு மூட்டையை நீரில் சலவை செய்யலாமா? முடியாது என்கிறார் வாலி மகாநதி படத்தில் (இசை இளையராஜா பாடியவர் கமல்ஹாசன்) வரும் வரிகள் அபாரம்

http://www.youtube.com/watch?v=xPcCRNDq9_Q

நான் கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது

அட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது

சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது

இந்த முட்டாள்தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது

பின் எப்படி இந்தக்கறை போகும்? சிந்தையிலே அழுக்கிருந்தா சிவனடியை நாடிவிடு என்று  கண்ணதாசன் சொல்வதுதான் சரியான வழி.  இவ்வளவு அழுக்கும் போக சொட்டு நீலம் போதாது. நீலகண்டன் வேண்டும்

மோகனகிருஷ்ணன்

220/365