புல்லினுள் சுழலும் இசை
- படம்: காதலர் தினம்
- பாடல்: ரோஜா ரோஜா
- எழுதியவர்: வாலி
- இசை: ஏ. ஆர். ரஹ்மான்
- பாடியவர்: உன்னி கிருஷ்ணன்
- Link: http://www.youtube.com/watch?v=QwCEXv1TXqo
இளையவளின் இடை ஒரு நூலகம், படித்திடவா பனி விழும் இரவுகள் ஆயிரம்!
இடைவெளி எதற்கு, சொல் நமக்கு, உன் நாணம் ஒருமுறை விடுமுறை எடுத்தால் என்ன?
’என்னைத் தீண்டக் கூடாது’ என வானோடு சொல்லாது வங்கக்கடல்,
’என்னை ஏந்தக் கூடாது’ என கையோடு சொல்லாது புல்லாங்குழல்!
தமிழில் ‘குழல்’ என்ற பெயர்ச்சொல், ‘குழலுதல்’ என்கிற வினைச்சொல்லில் இருந்து வந்தது. இதன் அர்த்தங்கள், சுருள்தல், வளைதல் போன்றவை.
கம்ப ராமாயணத்தில் சீதையைச் சந்திக்கும் அனுமன், அவளுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக ராமனைப்பற்றி நிறைய பேசுகிறான், அவரது தோற்றத்தை வர்ணிக்கிறான். அதில் ஒரு பாடல், ராமனின் தலைமுடியைப்பற்றியது, ‘நீண்டு, குழன்று, நெய்த்து, இருண்டு…’ என்று தொடங்கும்.
அதாவது, ராமனின் தலைமுடி நீண்டது, சுருண்டது, நெய் பூசியதுபோல் பளபளப்பானது, இருண்டது (கருமையானது)… இப்படித் தொடங்கி இன்னும் நிறைய வர்ணிக்கிறான் அனுமன்.
இங்கே நமக்கு முக்கியம், ‘குழன்று’ என்ற வார்த்தை, ‘சுழன்று’ அல்ல, ‘குழன்று’, அதாவது, சுருண்டு, அல்லது வளைந்து!
இப்படிக் குழன்று வருவதால்தான், தலைமுடிக்கே ‘குழல்’ என்று பெயர் வந்தது. ‘கட்டோடு குழலாட ஆட’ போன்ற பல பாடல்களில் இதைப் பார்த்திருக்கிறோம்.
அது சரி, ஆனால் அதே பெயரை இசைக்கருவியாகிய குழலுக்கும் வைத்தது ஏன்?
ஒன்றல்ல, இரண்டு காரணங்கள் சொல்லலாம்:
முதல் காரணம், வடிவ அமைப்பில் பார்த்தால், குழல் / குழாய் என்பது, ஒரு நீண்ட பட்டை சுருண்டு சுருண்டு அமைந்ததுபோல்தான் தெரியும், சின்ன வயதில் பென்சிலின்மீது நீளப் பட்டைக் காகிதத்தைச் சுற்றி விளையாடியவர்களுக்கும், ஒரு குழலின்மீது உட்கார்ந்திருக்கும் இருவண்ண ஜவ்வு மிட்டாயை இழுத்து வாங்கித் தின்றவர்களுக்கும் இது நன்றாகத் தெரியும்!
இன்னொரு காரணம், குழலின் ஒரு முனையில் ஊதப்படும் காற்று, உள்ளே வளைந்து ஓடி (அதாவது, குழன்று) வெவ்வேறு துளைகளின் வழியே வெளிவந்து இனிமையான இசையாகக் கேட்கிறது, ‘வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே’ என்று பழநிபாரதி எழுதினாற்போல!
‘குழல்’ சரி, அதென்ன ’புல்லாங்குழல்’?
இந்தச் சொல்லை நாம் புல் ஆம் குழல் என்று பிரியும். அதாவது, புல்லால் ஆன குழல் என்று பொருள்.
என்னது? புல்லா? அது மூங்கிலால் ஆனதல்லவா?
உண்மைதான். ஆனால், தாவரவியல்ரீதியில் பார்த்தால், மூங்கில் என்பதே மரம் அல்ல, ஒருவகைப் புல்தான், என்ன, கொஞ்சம் தடிமனான புல்!
அப்படியானால், குழல்போல இனிமையாகக் கூவும் குயிலைப் ‘புள்ளாங்குழல்’ என்றுகூட நாம் அழைக்கலாமோ?
***
என். சொக்கன் …
08 08 2013
219/365
சிவா கிருஷ்ணமூர்த்தி 3:04 pm on July 8, 2013 Permalink |
//குழல்போல இனிமையாகக் கூவும் குயிலைப் ‘புள்ளாங்குழல்’//
கண்டிப்பாய்!
rajinirams 10:36 am on July 9, 2013 Permalink |
புல் ஆம் குழல் -அருமையான விளக்கம். வாலியின் அருமையான வரிகளை எடுத்து காட்டியதோடு “வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே”என்ற பழனிபாரதியின் வரிகளையும் இணைத்தது சூப்பர்.
amas32 5:41 pm on July 10, 2013 Permalink |
இப்பொழுதெல்லாம் கூந்தலைக் குழல வைக்க (hair curling) ஓர் ஐயாயிரமோ பத்தாயிரமோ (Rs) தேவைப் படுகிறது 🙂 பிறகு அதை நீட்டிவிட (hair straightening) அதே amount! நேசுரலாகவே அப்படி இருந்தால் பெற்றோர்களுக்கு பணம் மிச்சம் 🙂
amas32