கத்துக்கணும்!

ஆபீசில் புதிதாக சேர்ந்தவர்களுக்காக Orientation ப்ரோக்ராம் ஒன்றில் பேச அழைத்தார்கள். கல்லூரி படிப்பு முடித்து அவர்களது முதல் வேலைக்கு வந்திருக்கும் யுவன் யுவதிகளிடம் கம்பெனியின் வீர தீர பராக்கிரமங்கள், வரலாறு, பூகோளம் எல்லாம் சொல்லி ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை ஜிகினா பேப்பர் ஒட்டி அவர்கள் கண் முன் விரிக்கும் முயற்சி. கல்லூரி என்ற கனாக் காணும் காலத்திலிருந்தவர்களுக்கு நிஜ உலகுடன் ஒரு அறிமுகம் கொடுக்கும் சம்பிரதாயம்.

டெக்னாலஜி சார்ந்த அறிவுரைகளை விடுங்கள். அதன் பின் வரும் Abstract விஷயங்கள் கொஞ்சம் அதிகம்தான். அடித்து துவைத்துப்போட்ட கருத்துகள். ‘ஏட்டில் படித்தது கொஞ்சம்தான். இந்த வேலையில் உங்கள் அறிவு திறமை, நடத்தை, மனப்பான்மை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து உழைத்தால் உயர்வு’ என்ற செய்தியை மறுபடி மறுபடி வலியுறுத்தும் பேச்சு.

“உங்கள் Comfort zone ஐ விட்டு வெளியே வாருங்கள், நிறைய இடையூறுகள் இருக்கும், உங்கள் பாஸ் வழிகாட்டுவார், டீம் வொர்க் முக்கியம், மற்றவர்களின் நிலை புரிந்துகொள்ள வேண்டும், அறிவு, திறமை தவிர நல்ல மனப்பான்மை, நேர்வழி, integrity எல்லாம் வேண்டும்”

என்பதை ஒலியும் ஒளியும் சேர்த்து திணற திணற அடித்து…

சட்டென்று ஒரு பழைய பாடல் நினைவுக்கு வந்தது. அன்புக்கரங்கள் படத்தில் வாலி எழுதிய ஒண்ணா இருக்க கத்துக்கணும் என்ற பாடல் (இசை ஆர் சுதர்சனம் பாடியவர் டி.எம். சௌந்தரராஜன்)

http://www.youtube.com/watch?v=4fL5GLsmtSk

ஒண்ணா இருக்க கத்துக்கணும்

இந்த உண்மையை சொன்னால் ஒத்துக்கணும்

காக்கா கூட்டத்தை பாருங்க

அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க

என்று டீம் வொர்க் பற்றி சொல்லி பாடல் ஆரம்பம். அதன் பின் நிஜ உலகுக்கு வருவது, நமக்கு மேல் இருக்கும் தலைவன் என்று தொடர்கிறார்

வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம்

அந்த நாலும் தெரிஞ்சி நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்

உன்னைக்கேட்டு என்னைக்கேட்டு எதுவும் நடக்குமா

அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா

அடுத்து empathy, compassion என்ற கருத்தை, அடுத்தவரை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அழகாக சொல்லும் வரிகள்

தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே

அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே

பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை

இதை புரிந்து கொண்ட ஒருவனை போல் மனிதன் வேறில்லை

முடிவாக நாம் சந்திக்கும் இடயூறுகள், அவற்றை வெல்லும் வழி சொல்லும் எளிமையான வரிகள்.

கொஞ்ச நேரம் காத்தடித்து ஓய்ந்துபோகலாம்

வானில் கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்

நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்

நாம் நேர் வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம்

நேர்மை தான் வெற்றியின் ரகசியமே. அவ்வளவுதானே மேட்டர் ? இனிமேல் இந்த onboarding, induction, orientation என்று எதுவாக இருந்தாலும் இந்த பாடலை ஒலிக்க விட்டு, பின் நேராக கேள்வி நேரம் நடத்தலாம் என்று ஒரு யோசனை.

மோகனகிருஷ்ணன்