தென்றல் பாதை

 • படம்: மவுனராகம்
 • பாடல்: மன்றம் வந்த தென்றலுக்கு
 • எழுதியவர்: வாலி
 • இசை: இளையராஜா
 • பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்

மன்றம் வந்த தென்றலுக்கு,

மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ!

’மன்றம்’ என்ற சொல் இப்போதும் புழக்கத்தில் உள்ள ஒன்றுதான், ஆனால் இதைப் பெரும்பாலும் நாம் தனித்துப் பயன்படுத்துவதில்லை. வேறு சொற்களோடு சேர்த்துச் சொல்கிறோம். உதாரணமாக:

 • பட்டி மன்றம்
 • நீதி மன்றம்
 • இளைஞர் மன்றம்
 • தமிழ் மன்றம்
 • ரசிகர் மன்றம்
 • நற்பணி மன்றம்

இந்தச் சொற்கள் எல்லாவற்றிலும் ‘மன்றம்’க்கு ஒரே பொருள்தான். அது என்ன என்று ஊகிக்கமுடிகிறதா?

பொதுவாக ‘மன்றம்’ என்றால் குழு (Group) என்றுதான் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ என்றால் என்ன அர்த்தம்? குழுவில் உள்ளவர்களுக்கு நடுவே புகுந்து வருகிறதா தென்றல்?

இருக்கட்டும். கொஞ்சம் பழங்கதை பேசிவிட்டு இதற்கு மீண்டும் வருவோம்.

சிலப்பதிகாரத்தை எழுதியவர் இளங்கோவடிகள். ஆனால், அவருக்குக் கோவலன், கண்ணகி கதையைச் சொன்னவர் சீத்தலைச் சாத்தனார்.

அப்படியானால், சீத்தலைச் சாத்தனாருக்கு அந்தக் கதை எப்படித் தெரிந்தது?

இதை அவர் விவரிக்கும்போது ”மன்றப் பொதியிலில் வெள்ளியம்பலத்து நள் இருள் கிடந்தேன், மதுரை மாதெய்வம் வந்து தோன்றி’ இந்தக் கதையைச் சொன்னது” என்கிறார்.

அதாவது, ஒரு மன்றத்தில் சீத்தலைச் சாத்தனார் தூங்கிக்கொண்டிருக்கும்போது, மதுரை நகரின் காவல் தெய்வம் அவர்முன்னே தோன்றுகிறது, கோவலன், கண்ணகி கதையைச் சொல்கிறது.

இந்தப் பின்னணியோடு, வாலியின் இந்த வரிகளை இன்னொரு முறை படித்துப் பாருங்கள், ’மன்றம்’ என்ற சொல்லின் பொருள் பளிச்சென்று தெரிந்துவிடும்.

‘மன்றம்’ என்றால், பொது இடம், இவருக்குதான் சொந்தம் என்று இல்லாமல், பலரும் கூடுகின்ற இடம், ஒரு வீட்டின் வரவேற்பு அறைபோல என்று சொல்லலாம்.

அதே வீட்டில் ஒரு படுக்கை அறை தனிப்பட்ட சிலரின் பயன்பாட்டுக்காகமட்டும் இருக்குமல்லவா, அதைதான் ‘மஞ்சம்’ என்கிறார் வாலி. ‘ஊரார் முன்னால் என்னைத் திருமணம் செய்துகொண்டவளுக்கு, என்னுடன் வாழ விருப்பமில்லை’ என்று கதாநாயகன் புலம்புவதாக, தென்றலை உவமையாக வைத்துப் பாடுகிறார்.

’மன்றம்’ என்ற சொல்லின் பொருளை நினைவில் வைத்துக்கொள்ள இன்னோர் எளிய உதாரணம், அதுவும் தென்றலை ஜோடி சேர்த்துக்கொண்டதுதான், ‘இந்த மன்றத்தில் ஓடி வரும், இளம் தென்றலைக் கேட்கின்றேன்!’

***

என். சொக்கன் …

05 07 2013

216/365