’பொடி’ப் பயலே!

மக்களின் பழக்க வழக்கங்கள் காலங்காலமாக மாறிக் கொண்டே வருகின்றன. பழைய புத்தகங்களைப் படிக்கும் போதும் பழைய பாடல்களைக் கேட்கும் போதும் பழைய திரைப்பட்டங்களைப் பார்க்கும் போதும் அதைத் தெரிந்து கொள்ளலாம்.

மிகமிகப் பிரபலமாக இருந்த வழக்கம் பின்னாளில் முற்றிலும் இல்லாமலும் போகலாம். அப்படி வழக்கொழிந்த பழக்கம்தான் பொடி போடுவது.

பொடி போடுவதென்றால் இட்டிலிக்கும் தோசைக்கும் தொட்டுக் கொள்ள மிளகாய்ப் பொடி போடுவதல்ல. நான் சொல்வது மூக்குப்பொடி பற்றி. கட்டை விரலாலும் ஆள்காட்டி விரலாலும் சிறிது கிள்ளியெடுத்து மூக்கில் பொடி போடும் பெருசுகள் இப்போது மிகமிகக் குறைந்து போய் விட்டார்கள்.

ஒரு காலத்தில் இது மிகப்பிரபலமான பழக்கமாக இருந்திருக்கிறது. ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படத்தில் சந்தைக்குப் போகும் செம்பட்டையிடம் ஆப்பக்கடை பாட்டி பட்டியல் சொல்லும் போது அதில் மூக்குப்பொடி டப்பியும் இருக்கும். கங்கையமரன் அதைப் பாடல் வரிகளிலும் கொண்டு வந்திருப்பார்.

வெத்தல வெத்தல வெத்தலையோ
……………………………..
பாட்டியும் ஏலக்கா வேணும்னு கேட்டாங்க
பத்தமட பாயி வேணும்னு கேட்டாங்க
சின்ன கருப்பட்டி மூக்கு பொடி டப்பி வேணும்னு கேட்டாங்க
பாடல் வரிகள் – கங்கை அமரன்
பாடியவர் – மலேசியா வாசுதேவன்
இசை – இளையராஜா
படம் – ரோசாப்பூ ரவிக்கைக்காரி
பாடலின் சுட்டி – http://youtu.be/0VQ_2UaAmqA

இவ்வளவு பிரபலமாக இருந்த மூக்குப்பொடி எதிலிருந்து செய்யப்படுகிறது? புகையிலையைக் காய வைத்து அதைச் சுண்ணாம்போடு போட்டு இடிப்பார்கள். நன்கு மைய இடிக்க இடிக்க அதில் கார நெடி கிளம்பும். அதை அப்படியே பயன்படுத்தினால் மூக்கு அறுந்துவிடும் என்பதால் நெய்யும் சேர்த்து இடிப்பார்கள்.

இப்படி மைய இடித்த பொடிதான் மூக்குப்பொடி. அடர்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இந்தப் புகையிலைப் பொடி மூக்கு வழியாகச் சென்று மூளைக்கு ஒரு மந்தமான பரவச நிலையைக் கொடுக்குமாம். சிலர் பல்வலிக்கு மூக்குப்பொடி நல்ல மருந்தென்று சொல்வார்கள். மூக்குப்பொடியை எடுத்து வலிக்கின்ற பல்லில் வைத்தால் சற்று மரத்துப் போகும். அதைத்தான் மூக்குப் பொடி பல்வலியை நீக்குகிறது என்று தவறாக நினைக்கிறார்கள்.

பல்லில் வைக்கப்படும் மூக்குப் பொடி வாய் வழியாக உமிழ்நீரில் கலந்து வயிற்றுக்கும் செல்லும். இது கண்டிப்பாக கெடுதல்தான். மூக்குப்பொடியை எப்படிப் பயன்படுத்தினாலும் கெடுதல்தான். புற்றுநோயை உண்டாக்குவதில் மூக்குப்பொடியும் ஒரு முக்கிய காரணி என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பொதுவாகவே மூக்குப்பொடி வாங்குகின்றவர்கள் நிறைய வாங்க மாட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவார்கள். நிறைய வாங்கினால் நாட்பட நாட்பட அதில் காரலும் நெடியும் குறைந்து போய்விடுவாம். அதனால்தான் வேண்டிய போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிக் கொள்வார்கள்.

பொடி போட்டு வைப்பதற்கென்றே விதவிதமான சொப்புகள் செய்யப்பட்டன. வெள்ளிச் சொப்பில் பொடி போட்டு வைத்திருந்த பொடிப்பிரியர்களும் உண்டு. சொப்பு என்று நான் சொன்னாலும் பொடி டப்பா என்ற பெயர்தான் மிகப்பிரபலம்.

விதவிதமாகப் பொடி டப்பா வாங்க வசதியில்லாதவர்கள் வாழை மட்டையிலும் பாக்கு மட்டையிலும் மூக்குப்பொடியை வைத்திருப்பார்கள். அந்தப் பொடி மட்டை தொலைந்து விடாமல் இருக்க வேட்டியில் மடித்து வைத்துக் கொள்வார்கள்.

ஆண்கள் மட்டுமே மூக்குப்பொடி போடும் பழக்கத்தை பழகியிருக்கவில்லை. சில வயதான பெண்களும் மூக்குப்பொடி போட்டார்களாம். எங்கள் ஊரிலேயே மூக்குப்பொடி போட்ட ஒரு பாட்டியை நான் பார்த்திருக்கிறேன்.

புதிதாகப் பொடி போடுகின்றவர்களுக்குத் தும்மல் வரும். பழகப் பழக மூக்கின் தசைகள் மரத்துப் போய் தும்மல் வராமல் போய்விடும். எத்தனையோ பழைய திரைப்படங்களில் மூக்குப் பொடியைத் தூவியதும் அங்கிருக்கும் எல்லாரும் தும்முவது போன்ற நகைச்சுவைக் காட்சிகளும் வந்திருக்கின்றன.

இப்படியெல்லாம் பிரபலமான மூக்குப்பொடியைக் கண்டுபிடித்தது இந்தியர்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லவே இல்லை. ஐரோப்பாவில் அரசல்புரலசால இருந்த பழக்கம் பிரபலமாகி உலகம் முழுவதும் பரவியது. 17ம் நூற்றாண்டை மூக்குப்பொடி நூற்றாண்டு என்றே சொல்லலாம். அந்த அளவுக்குப் பிரபலமாக இருந்திருக்கிறது.. மூக்குப்பொடி போட்டவர்களை மதத்தை விட்டு விலக்குவேன் என்று போப் சொல்லியும் கேட்காமல் மக்கள் மூக்குப்பொடியில் மூழ்கியிருந்திருக்கிறார்கள்.

18ம் நூற்றாண்டில் பொடிப்பழக்கம் பெரும்பழக்கமாக ஐரோப்பாவில் நிலை பெற்றிருந்திருக்கிறது. நெப்போலியனுக்கும் பொடி போடும் பழக்கம் இருந்ததாம். அப்போதிருந்த போப் பெனிடிக்ட் XIII க்கும் பொடி போடும் பழக்கம் இருந்திருக்கிறது. ஒரு நூற்றாண்டில்தான் எத்தனை மாற்றங்கள்! 17ம் நூற்றாண்டில் மூக்குப்பொடி போட்டால் மதவிலக்கம் செய்யப்படும் என்று வாட்டிகன் சொல்லியிருக்கிறது. அடுத்த நூற்றாண்டில் போப்பாண்டவரே பொடி போட்டிருக்கிறார். என்னே பொடியின் மகிமை!

எது எப்படியோ… இன்று இந்தப் பழக்கம் குறைந்து போயிருப்பது நல்லதுதான். பலவிதமான உடல்நலக் கேடுகளை உண்டாக்கும் இது போன்ற புகையிலைப் பழக்கங்களை நாம் விலக்கவும் எதிர்க்கவும் வேண்டும்.

அன்புடன்,
ஜிரா

214/365