விருந்தினர் பதிவு : சீனத்துக் காதல்

’பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம்’ என்ற பாடலை எல்லாரும் கேட்டிருப்பீர்கள். வைரமுத்து எழுதி, ஏ. ஆர். ரஹ்மான் இசையில் உன்னி கிருஷ்ணன், சுஜாதா பாடிய சூப்பர் ஹிட் பாட்டு.

அந்தப் பாடலின் தொடக்கத்தில், சீனப் பெருஞ்சுவரில் நாயகனும் நாயகியும் ஆடுவதுபோன்ற காட்சி அமைப்பு இருக்கும். அப்போது பின்னணியில் ஒரு கோரஸ் கேட்கும், ‘Wo Ai Ni… Wo Ai Ni…’ என்று திரும்பத் திரும்ப வரும், கவனித்துப்பாருங்கள்.

இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

’அடப் போங்க சார், விட்டா ஒமாகஸீயாவுக்கெல்லாம் அர்த்தம் கேட்பீங்கபோல!’ என்று கோபிக்கவேண்டாம். நிஜமாகவே இந்தக் கோரஸ் வரிகள் சும்மா உல்லுலாக்காட்டிக்குப் போட்டவை அல்ல, அதற்கு அர்த்தம் உண்டு.

தமிழில் அல்ல, சீன மொழியில்.

ஆமாம், சீனர்கள் பேசும் மாண்ட்ரின் பாஷையில் ‘Wo Ai Ni’ என்றால், ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று அர்த்தமாம்.

சீனப் பெருஞ்சுவர்ப் பின்னணியில் இந்தக் காட்சி படமாக்கப்படப்போகிறது என்று தெரிந்து இந்தக் கோரஸை இங்கே பொருத்தமாகப் பயன்படுத்தியது யார்? இசையமைப்பாளரா? கவிஞரா? அல்லது, இயக்குநரா?

யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஒரு வந்தனம்!

சுதர்ஷன்

https://twitter.com/SSudha_