பார்வை ஒன்றே போதுமே!

  • படம்: கற்பகம்
  • பாடல்: பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்
  • எழுதியவர்: வாலி
  • இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
  • பாடியவர்: பி. சுசீலா
  • Link: http://www.youtube.com/watch?v=0tjaE1I7h7A

மனசுக்குள்ளே தேரோட்ட,

மை விழியில் வடம் புடிச்சான்!

தரையில் நடந்து சென்ற ராமனும், கன்னிமாடத்தில் நின்ற சீதையும் ஒருவரை ஒருவர் முதன்முறை பார்க்கிறார்கள். அந்தக் காட்சியில் கம்பனின் அட்டகாசமான பாடல் இது:

பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து

ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால்,

வரி சிலை அண்ணலும், வாள் கண் நங்கையும்

இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர்!

சுருக்கமாகச் சொன்னால், ராமன், சீதை இருவரும் ஒருவர் இதயத்தில் மற்றவர் மாறிப் புகுந்தார்கள்!

அதெப்படி சாத்தியம்? இவன் கீழே இருக்கிறான், அவள் உயரத்தில் இருக்கிறாளே!

அதனால் என்ன? கண் சிமிட்டாமல் ஒருவரை ஒருவர் விழுங்குவதுபோல் பார்த்துக்கொண்டிருக்கிறார்களல்லவா? அந்த ஆசைப் பார்வையையே கயிறாக வர்ணித்துவிடுகிறார் கம்பர்.

மேலேயிருந்து சீதையின் பார்வை எனும் கயிறு கீழே வருகிறது, அதில் ஏறி ராமனின் இதயம் அங்கே செல்கிறது, அதேபோல், ராமனின் பார்வை எனும் கயிறில் இறங்கிச் சீதையின் இதயம் இங்கே வருகிறது. கையில் வில் ஏந்திய ராமனும், கண்ணில் வாள் ஏந்திய சீதையும் ஈருடல், ஓருயிர் என்றாகிவிடுகிறார்கள்.

காதல் பார்வையைக் கயிறாக வர்ணிக்கும் இந்த அருமையான உவமைக்குத் தலை வாரிப் பூச்சூட்டி மிக அழகாக இந்தத் திரைப்பாடலில் பயன்படுத்துகிறார் வாலி, அவளுடைய மை விழிப் பார்வையையே வடமாகக் கொண்டு, அவள் மனத்துக்குள் இவன் தேரோட்டுகிறானாம்!

அருமையான இந்த வரியைக் கேட்டு மகிழ்ந்துபோனார் கண்ணதாசன், ஒரு மேடையில் ‘வாலியை என் வாரிசு என்பேன்’ என்று பகிரங்கமாக அறிவித்தார்.

திரைப்பாடல்கள் எழுதுவதில் தனக்குப் போட்டியாக வளர்ந்துவரும் ஒரு கவிஞரை, இப்படி வெளிப்படையாகப் பாராட்டுவதற்கு ஒரு மனம் வேண்டுமல்லவா!

On a different context, பாரதியார் சொன்னதுதான் நினைவு வருகிறது, ‘திறமான புலமை எனில், வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்!’

***

என். சொக்கன் …

02 07 2013

213/365