குழலன்

அன்றொருநாள் நண்பர்களுக்கு இடையே ஒரு பேச்சு வந்தது. அதாவது மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் இசையமைத்த பாடல்கள் எவை? இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்கள் எவை?

பொதுவாகவே மெல்லிசை மன்னர் மெட்டுகளை அமைத்தார் என்பதும் இசைஞானி இசைக்கோர்ப்பு செய்தார் என்பதும் கருத்து. ஆனால் ”குழலூதும் கண்ணனுக்கு” என்ற பாடலுக்கு மெட்டமைத்தது இளையராஜா என்று மெல்லிசை மன்னர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

மிக அருமையான பாடல் அது. வாலி எழுதிய சித்ரா பாடிய அட்டகாசமான பாடல்.

குழலூதும் கண்ணனுக்கு
குயில் பாடும் பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ

கண்ணனைச் சொல்லும் போதெல்லாம் குழலைச் சொல்வது வழக்கமாக திரைப்பாடல்களில் இருக்கிறது. வாலி எழுதிய இன்னொரு பாடலும் நினைவுக்கு வருகிறது.

காற்றினிலே வரும் கீதம்
கண்ணனவன் குழல் நாதம்
நேற்றிரவு கேட்டேனே
பால் நிலவாய் ஆனேனே

ரசிகன் ஒரு ரசிகை படத்தில் ரவீந்திரன் இசையில் வாணி ஜெயராம் பாடிய கர்நாடக பாணி மேடைப் பாடல்.

குழல் என்றால் கண்ணன். கண்ணன் என்றால் குழல் என்று இன்று அமைந்து விட்டது. இரண்டையும் எளிதில் பிரித்துப் பார்க்க முடிவதில்லை.

ஆனால் தமிழ் இலக்கியங்களின் படிப் பார்த்தால் நம் கருத்தை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கும்.

கண்ணன் ஒரு குறிப்பிட்ட யுகத்தில் தோன்றிய அவதாரம் என்றும் முருகன் யுகங்களுக்கு முன்னால் இருந்த கடவுள் என்றும் சொல்லும் புராணங்களை நம்பினாலும் தமிழ் இலக்கியம் படித்தால் குழல் எந்தக் கடவுளுக்குரியது என்ற எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.

சரி. எது எப்படியும் இருக்கட்டும். தமிழ் இலக்கியம் சொல்லும் கருத்து என்ன என்பதைப் பார்க்கலாம். ஏனென்றால் குழலையும் தாண்டி சில வியப்பான தகவல்களைப் பார்க்கப் போகிறோம்.

சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் முதலாவதாக வைக்கப்பட்ட நூல் திருமுருகாற்றுப்படை. தமிழில் இன்றிருக்கும் சமய இலக்கியங்களுக்கு எல்லாம் முந்தியது. மூத்தது. முத்தமிழ் முதல்வனான முருகனைப் பாடுவது.

முருகக் கடவுள் குன்றுதோறும் ஆடும் இயல்பைப் பாடும் பொழுது முருகனுக்கும் குழலுக்கும் உள்ள தொடர்பை நக்கீரர் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

குழலன், கோட்டன், குறும் பல்லியத்தன்,
தகரன், மஞ்ஞையன், புகர் இல் சேவல்அம்
கொடியன், நெடியன், தொடி அணி தோளன்
நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு,
குறும் பொறிக் கொண்ட நறுந் தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன்,
முழவு உறழ் தடக் கையின் இயல ஏந்தி,
மென் தோள் பல் பிணை தழீஇ, தலைத்தந்து,
குன்றுதோறு ஆடலும் நின்ற தன் பண்பே. அதாஅன்று

மேலே குறிப்பிட்ட வரிகளை பக்தி நெறியோடும் புரிந்து கொள்ளலாம். தகவல் அறியும் ஆர்வத்தோடும் அணுகலாம். நாம் பக்தியை சற்று ஒதுக்கி வைத்து விட்டு வியத்தகு தகவல்களில் ஆழலாம்.

அறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடாக நக்கீரர் குறிப்பிட்டிருப்பது குன்றுதோறாடல். இன்றைக்கு திருத்தணி ஐந்தாம்படை வீடாகக் குறிப்பிடப் பட்டாலும் உலகில் இருக்கும் குன்றுகளையெல்லாம் ஐந்தாம்படை வீடாகக் குறிப்பிடுகிறார் நக்கீரர்.

அப்படி குன்று தோறும் இருக்கும் முருகனின் இயல்புகளை விளக்கும் வரிகளில் ஒளிந்திருக்கிறது தமிழர்களின் இசையறிவு.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய வரி “குழலன் கோட்டன் குறும் பல்லியத்தன்”.

குழலன் – குழல் வைத்துக் கொண்டிருப்பவன் என்று பொருள் அல்ல. குழல் ஊதுவதில் மிகச் சிறந்தவன் என்று பொருள். அழகு நிறைந்தவனை அழகன் என்பது போல குழல் ஊதுகின்றதில் சிறந்தவனைக் குழலன் என்பது வழக்கம்.

கோட்டன் – இதற்கு இரண்டு பொருள் விளக்கங்களைக் கண்டேன். கோடு என்பது கொம்பினைக் குறிக்கும். ஊதுகொம்பினை எக்காளம் என்றும் அழைப்பார்கள். அந்த இசைக்கருவியில் சிறந்தவன் முருகன். இன்னொரு பொருளாக கோட்டு வாத்தியம் என்னும் நரம்பிசைக் கருவியையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்தப் பெயர் சங்ககாலத்தில் இருந்ததா என்று தெரியவில்லை.

குறும் பல்லியத்தன் – இதுதான் மிகமிகக் கவனமாக புரிந்து கொள்ள வேண்டிய சொல்.

பல்லியம் = பல் + இயம். பலவிதமான இசைக்கருவிகளைக் கொண்டு இசை அமைப்பவன்.
அதாவது Orchestration என்று சொல்லப்படும் இசைக்கோர்ப்பு.

அதாவது முருகன் ஒரு இசையமைப்பாளன். மெல்லிசை மன்னர், இசைஞானி, இசைப்புயல் என்பதையெல்லாம் தாண்டி எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு நிற்கும் இசைக்கடவுள். இசை தொடங்குவதும் வளர்வதும் அடங்குவதும் முருகனிடத்தில். அதனால்தான் முருகனை இசைத்தெய்வமாகக் கொண்டாடியிருக்கிறது தமிழ்.

Orchestra என்ற சொல்லோ கருத்தோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேற்குலக நாடுகளில் இருந்திருக்குமா என்பதே ஐயம். அந்த நிலையில் பல்லியம் என்ற சொல் சங்கத்தமிழில் இடம் பெற்றிருப்பது தமிழிசை அந்தக் காலத்தில் செழித்திருந்ததையே காட்டுகிறது.

பல்லியத்திலும் இரண்டு வகை உண்டு. குறும் பல்லியம். நெடும் பல்லியம். இவை பல்லியத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளின் எண்ணிக்கையை வைத்துச் சொல்லப்படுகின்றவை.

சரி. இசைக்கருவிகளை வைத்து இசையமைத்து விட்டார் முருகன். அவரே பாடியும் விடுவார். ஆனால் Chorus வேண்டாமா? பின்னணியில் பலகுரல்கள் கூடியெழுந்து முன்னணியில் பாடுவதைச் செறிவாக்க வேண்டாமா?

அதற்குதான் இருக்கிறார்கள் ”நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு”. யாழ் முதலான இனிய நரம்பிசைக் கருவிகளைப் போன்ற இன்னொலி கொண்ட பாடகர்கள் முருகனோடு இருக்கிறார்கள். முருகன் இசையமைக்கும் போது அவர்களும் கூடிப் பாடுகின்றவர்கள்.

ஆக உலகின் முதல் குழலன் மட்டுமல்ல… முதல் இசையமைப்பாளரும் முருகனே!

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
பாடல் – காற்றினிலே வரும் கீதம்
பாடியவர் – வாணி ஜெயராம்
வரிகள் – வாலி
இசை – ரவீந்திரன்
படம் – ஒரு ரசிகன் ஒரு ரசிகை
பாடலின் சுட்டி – http://youtu.be/_RQY4hgiYd0

பாடல் – குழலூதும் கண்ணனுக்கு
பாடியவர் – கே.எஸ்.சித்ரா
வரிகள் – வாலி
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் – இசைஞானி இளையராஜா
படம் – மெல்லத் திறந்தது கதவு
பாடலின் சுட்டி – http://youtu.be/dfOuTx66bJU

அன்புடன்,
ஜிரா

212/365