அன்னமிட்ட கைகளுக்கு

நடிகர் சந்தானம் உரத்த குரலில் ‘நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில் உள்ள நாய்க்குதான் கிடைக்கும் என்று இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது’ என்று டிவியில் தீயாய் வேலை செய்து கொண்டிருந்தார்.  முதலில் ஒரு involuntary சிரிப்பு வந்தாலும் கொஞ்சம் யோசிக்க வைத்த  வரிகள்.

இது சூப்பர் ஸ்டார் பிரபலப்படுத்திய ‘ஆண்டவன் கொடுக்க நினைத்ததை யாரும் தடுக்க முடியாது’ என்ற கருத்தின் இன்னொரு வடிவம். நாகூர் என்ற சொல் ஒரு clue போல் தோன்ற, அந்த நூல் பிடித்து சென்றால் திருக்குர்ஆன் வாசகம் பற்றி வாலி எனக்குள் MGR என்ற தொடரில் எழுதிய செய்தி ஒன்று கிடைத்தது

‘அவரவர்க்கான அரிசியில் அவரவர் பெயர் எழுதப்பட்டிருக்கிறது!’ என்கிறது திருக்குர்ஆன்.  நீ – வாயைத் திறந்து வைத்துக் கிடந்தாலும் உனக்கல்லாத உணவு உன் வாய்க்கு வாய்க்காது; நீ – வாயை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்தாலும், உனக்கான அரிசியை ஆண்டவன் உன் வாயை வலியத் திறந்து ஊட்டி விடுவான். இந்த மறைவாசகத்தை நாம் மறுதலிப்பதற்கில்லை!’

வாலி இதை ஒரு கொடியில் இரு மலர்கள் என்ற படத்தில் ‘உப்பைத் தின்னவன் தண்ணி குடிப்பான்’ என்ற பாடலில் (இசையமைத்து பாடியவர் எம்‌எஸ்‌வி)  http://www.youtube.com/watch?v=T6743o-yK7U

அரிசியின் மேலே அவனவன் பேரை

ஆண்டவன் எழுதி வைப்பான் – அதை

அடுத்தவன் யாரும் கெடுப்பதற்கில்லை

அவனவன் தின்று தீர்ப்பான்

எவரெவருக்கு என்னென்ன தேவை

இறைவன் கொடுக்கின்றான் – அதை

அவசர மனிதன் ஆத்திரப்பட்டு

அதற்குள் எடுக்கின்றான்

என்று பதிவு செய்கிறார். படத்தில் MSV கைதிகளிடம் பேசுவது போல் காட்சி.  ‘உங்களுக்காக கவிஞர் வாலி ஒரு அற்புதமான பாடலை எழுதியிருக்கிறார்’ என்று பாராட்டிவிட்டு பாடுவார்.

நல்ல வரிகள் தான். ஆனாலும் கொஞ்சம் நெருடல். ஒவ்வொரு தானிய மணியிலும் அதை உண்ணப் போகிறவரின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? கோடிக்கணக்கானவர்கள் உணவு கிடைக்காமல் பட்டினி இருப்பது நமக்கு தெரியும். அவர்கள் பெயர் இருக்கும் உணவு  எங்கே ? அவர்கள் பெயர்கள் எல்லாம் விட்டுப்போக இது என்ன வாக்காளர் பட்டியலா?

எல்லாருக்கும் உணவு கிடைக்கும்படி செய்துவிட்டு அதன் பிறகு அவரவர் பேர் எழுதிய அரிசியை க்யூவில் வந்து ஆதார் கார்ட் காட்டி வாங்க வைக்கலாம் . பல பேர் பட்டினி கிடைக்கும்போது இந்த வரிகள்  சரியா? அல்லது இதற்கு வேறு அர்த்தமா? மதங்களும் இறைவன் மொழியும் உணர்த்தும் பொருள் என்ன?

  • இவ்வுலகத்தில் எவ்வளவு மனிதர்கள் தோன்றினாலும் அவர்களுக்கான உணவு இறைவனிடத் திலிருந்து கிடைக்கும் என்று சிலர் இந்த திருக்குர்ஆன் வரியை  பகிர்ந்து உண்ணுதல் என்ற பொருளில் விளக்குவர்.

  • பைபிள் காட்சி ஒன்று – இயேசுவின் போதனைகள் நடக்கும் இடத்தில சுமார் 5000 பேர் கூடுகின்றனர். இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து உணவை பகிர்ந்து  அதை மக்களுக்கு கொடுக்குமாறு கூறினார். எல்லா மக்களும் திருப்தியாக உண்டனர். சாப்பிட்டது போக மீதியும் இருந்தது. அதை பன்னிரண்டு கூடைகள் நிரப்பினர். (லூக் 9: 10-17)

  • சிவன் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியில் அன்னாபிஷேகம் செய்து அந்த அன்னம், தயிர் கலந்து மக்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதில் ஒரு பாகம், அருகிலுள்ள  குளத்தில் கரைக்கப்படும். ஏன் அப்படி?

பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு

பல்லுயிர்க் குங் கல்லிடைப் பட்டதேரைக்கும்

அன்றுற் பவித்திடும் கருப் பையுறு சிவனுக்கும்

மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத

வானவர் குழாத்தினுக்கும் மற்றுமொரு மூவருக்கும்

யாவருக்கும்

என்ற அபிராமி பட்டர்  பாடல் வரிகளுக்கு ஏற்ப, இறைவனது பிரசாதம் எறும்பில் தொடங்கி நீர்வாழ் உயிரிகள், மனிதர்கள் என சகல ஜீவராசிகளுக்கும் இதன் மூலம் சென்றடைகிறது

வள்ளுவர் ஈகை பற்றி சொல்லும்போது பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை என்று குறிப்பிடுகிறார்.பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுக்கும்போது அவனது அரிசியில் பெயர் எழுதும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என்று தோன்றுகிறது.

மோகனகிருஷ்ணன்

211/365