நானே எனக்கு என்றும் நிகரானவன்!

  • படம்: முரட்டுக் காளை
  • பாடல்: பொதுவாக என் மனசு தங்கம்
  • எழுதியவர்: பஞ்சு அருணாசலம்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: மலேசியா வாசுதேவன்
  • Link: http://www.youtube.com/watch?v=dJeW9LKQhMQ

பொதுவாக என் மனசு தங்கம், ஒரு

போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்!

உண்மையே சொல்வேன், நல்லதே செய்வேன்,

வெற்றி மேல் வெற்றி வரும்!

அன்றுமுதல் இன்றுவரை பல ஹீரோக்களுக்கு இதுபோன்ற “மாஸ் ஓபனிங்” பாடல்களைக் கேட்டிருக்கிறோம். அதில் கதாநாயகர் தன்னுடைய புகழைத் தானே பலவிதமாகப் பாடிக்கொள்வார். சுற்றியிருக்கிறவர்கள் கோரஸ் குரலில் அதற்கு “ஆமாம் சார்” போடுவார்கள்.

இது ஏதோ புதுப்பழக்கம் என்று எண்ணி முகம் சுளிக்காதீர்கள். நம்முடைய இலக்கியங்களில் இது நிறைய உண்டு. அதற்கென்று தனியாக இலக்கணமும் வகுக்கப்பட்டிருக்கிறது.

”தண்டியலங்காரம்” என்ற இலக்கண நூல், இந்த வகைப் பாடல்களைத் “தன் மேம்பாட்டு உரை அணி” என்று அழைக்கிறது. இதற்கான வரையறை: ”தான், தன் புகழ்வது தன் மேம்பாட்டு உரை” அதாவது, ஒருவர் தன்னைத் தானே புகழ்ந்துகொள்வது, தன்னுடைய மேம்பாட்டை / உயர்வைச் சொல்வது.

சினிமா ஹீரோக்கள்மட்டுமல்ல, நாம் எல்லாருமே இந்தத் “தன் மேம்பாட்டு உரை அணி”யில் ஓரிரு வரிகளாவது நிச்சயம் எழுதியிருப்போம், குறைந்தபட்சம் வேலைக்கு அப்ளிகேஷன் போடும்போதும், கல்யாணத்துக்கு மாப்பிள்ளை அல்லது பெண் தேடும்போதும்! 😉

***

என். சொக்கன் …

29 06 2013

210/365