மோடிபற்றிக் கொஞ்சம்

சில சொற்களை நாம் அடிக்கடி பயன்படுத்தியிருப்போம். ஆனால் அதற்கு என்ன பொருள் என்று அவ்வளவாக சிந்தித்திருக்க மாட்டோம். அப்படியொரு சொல்லைத்தான் நாம் இன்று பார்க்கப் போகிறோம்.

தொலைக்காட்சியில் “வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எந்தன் கதையே” என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் பாடலில் வந்த ஒரு வரிதான் என்னுடைய சிந்தனையைத் தூண்டி விட்டது.

அனுதினம் செய்வார் மோடி
அகமகிழ்வார் போராடி

இந்த வரியில் வந்த மோடி என்ற சொல்லைத்தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

பொதுவாகவே மோடி என்றால் அதுவொரு வித்தை என்ற அளவுக்கு நமக்குத் தெரியும். இந்தப் பாட்டிலும் அப்படித்தான் வருகிறது. அனுதினமும்(ஒவ்வொரு நாளும்) கணவன் மோடி வித்தை செய்து ஏமாற்றுகிறார் என்று பெண் குற்றம் சாட்டுவது போல பாட்டில் வருகிறது.

சிலர் மோடி வித்தையை கண்கட்டு வித்தை என்றும் சொல்வார்கள். எப்படியோ, மோடி என்றால் ஒரு வித்தை. அதை வைத்து மக்களை ஏமாற்றலாம் (அல்லது) மகிழ்விக்கலாம் என்று தெரிகிறது.

சரி ஐயா! மோடி என்ற சொல் எங்கிருந்து வந்தது?

அதைப் புரிந்து கொள்ள கொஞ்சம் காலத்தால் பின்னோக்கிப் போக வேண்டும்.

அந்தக் காலத்தில் மந்திர தந்திர வித்தைகளைக் கற்றுக் கொண்டவர்கள் மாகாளிக்கு நச்சு பொருட்களை இட்டு வேள்வி செய்து தீய மந்திரங்களை உச்சாடணம் செய்து பலி கொடுப்பார்களாம். அந்த பலியை ஏற்றுக் கொண்ட காளி குறிப்பிட்ட காலம் வரைக்கும் அவர்கள் இட்ட ஏவல்களை செய்வாளாம்.

இந்த சக்திகளை வைத்துக் கொண்டு ஏதேதோ வித்தைகளைக் காளியின் அருளால் செய்து மக்களையும் மன்னர்களையும் மருட்டி வெருட்டி சொகுசாக வாழ்வார்களாம் அந்த மந்திரவாதிகள்.

இப்படி காளியின் துணை கொண்டு செய்யப்படும் வித்தைக்கு காளியின் பெயரே அமைந்தது. ஆம். காளிக்கு மோடி என்றும் ஒரு பெயருண்டு.

இப்போது புரிந்திருக்குமே மோடி வித்தை என்ற பெயர் வரக் காரணம்.

காளியை மோடி என்று இலக்கியங்களிலேயே அழைத்திருக்கிறார்கள். அப்பரும் அருணகிரிநாதரும் கலிங்கத்துப்பரணி எழுதிய செயங்கொண்டாரும் மோடி என்ற பெயரில் காளியை அழைத்திருக்கிறார்கள்.

உவையுவை உளஎன் றெண்ணி
உரைப்ப தென்உரைக் கவந்த
அவை அவை மகிழ்ந்த மோடி
அவயவம் விளம்பல் செய்வாம்
நூல் – கலிங்கத்துப்பரணி
பாடியவர் – செயங்கொண்டார்

காளிக்குப் படையல் வைக்கப்பட்டிருக்கிறது. படையல்களைப் பார்க்கிறாள் அன்னை. இருக்கின்ற எல்லாவற்றையும் கண்டு மகிழ்ந்து ஏற்றுக் கொள்கின்றாளாம் காளி. ஆனால் இந்தப் பாடலில் காளி என்ற பெயருக்குப் பதிலாக மோடி என்ற பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார் செயங்கொண்டார்.

போகமார் மோடி கொங்கை
புணர்தரு புனிதர்போலும்
வேகமார் விடையர் போலும்
வெண்பொடியாடு மேனிப்
பாகமா லுடையர் போலும்
நூல் – தேவாரம்
பாடியவர் – அப்பர் (திருநாவுக்கரசர்)

மோடி(காளி)யின் கொங்கை தனைப் புணர்ந்து போகத்தையும் ரசிக்கும் சிவனார் என்று திருநாவுக்கரசர் பாடுகிறார்.

அருணகிரிநாதரை எதிர்த்த சம்பந்தாண்டானும் ஒரு மோடி வித்தைக்காரர்தான். காளி உபாசகராக இருந்து அருணகிரி மேல் காளியை ஏவி விட்டார். ஆனால் முருகன் அருளால் அருணகிரிநாதரும் பிழைத்தார். தமிழும் பிழைத்தது. அத்தோடு சம்பந்தாண்டானின் ஏவல் காலம் முடிவடைந்ததால் அதற்குப் பின்னர் காளி உதவவில்லை.

இதுதான் மோடி வித்தையின் கதை.

பதிவில் இடம் பெற்ற பாடல்
பாடல் – வாராயோ வெண்ணிலாவே
பாடியவர்கள் – ஏ.எம்.ராஜா, பி.லீலா
பாடல் வரிகள் – தஞ்சை ராமையாதாஸ்
இசை – எஸ்.ராஜேஸ்வரராவ்
படம் – மிஸ்ஸியம்மா
பாடலின் சுட்டி – http://youtu.be/1AbSd-UYoyo

அன்புடன்,
ஜிரா

209/365