அன்னக்கிளியின் கடையிலே

அடுப்புச் சட்டியில் வெந்துகொண்டிருப்பது தோசையா ஆப்பமா என்பதை பழகிய நாசி எளிதாக கண்டுபிடித்து விடும். “ஆப்பம் வரும் பின்னே அதன் வாசம் வரும் முன்னே” என்றெல்லாம் பழமொழிகளை வகைவகையாக உருவாக்கியவர்களாயிற்றே நாம்.

ஆப்பம் என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது கீழே குறிப்பிட்ட பாடல்தான். மிகவும் பிடித்த பாடலும் கூட.

ஆப்பக்கட அன்னக்கிளி
ஆடிவரும் வண்ணக்கிளி
ஓரங்கட்டு ஓரங்கட்டு பொன்னாத்தா
உங்கூடையிலே இருக்குறது என்னாத்தா
பாடல் வரிகள் – வாலி
பாடியவர்கள் – பி.சுசீலா, மலேசியா வாசுதேவன்
இசை – இளையராஜா
படம் – பாயும் புலி
பாடலின் சுட்டி – http://youtu.be/2mdtO8PpfdI

பல வீடுகளில் குழந்தைகள் ஆப்பம் கேட்கும் போது அவசரத்துக்கு தோசை மாவையே ஊற்றி ஆப்பம் சுட்டுக் கொடுப்பதும் உண்டு. ஆனால் ஆப்பம் சுவையாக வேண்டுமென்றால் அதற்கென்றே மாவாட்ட வேண்டும்.

பச்சரிசியையும் புழுங்கலரிசியையும் சமபங்கு எடுத்து ஊற வைக்க வேண்டும். அரைப்பங்கு உழுந்தில் சிறிது வெந்தயம் கலந்து ஊற வைக்க வேண்டும். ஊற வைத்தவைகளை மைய அரைத்து எடுத்து சிறிது உப்பு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவில் ஆப்பம் சுட்டால்தான் நடுவில் மெத்தென்றும் சுற்றிலும் மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் வரும்.

எந்த விதமான கூட்டணியிலும் ஆப்பம் தாக்குப் பிடிக்கும். இனிப்பான தேங்காப்பாலுடன் சாதுவாக ருசிக்கும். அதே நேரத்தில் பாயா/குருமா போன்ற அசைவக் குழம்புகளோடு சேரும் போது சுவையில் ருத்ரதாண்டவமே ஆடிவிடும். அதே போல சொதி என்றொரு சைவப் பக்குவம் உண்டு. தேங்காய்ப்பாலை அரைத்து விட்டுச் செய்வது. இந்தச் சொதியில் ஊறிய ஆப்பத்தை மட்டும் முருகன் சாப்பிட்டிருந்தால் தேனும் தினைமாவும் வேண்டேன் என்று சொல்லியிருப்பான்.

இப்படி நாம் ருசிக்கும் ஆப்பத்தை பக்கத்து மாநிலமான கேரளத்தில் அப்பம் என்பார்கள். முன்பு தமிழிலும் அது அப்பம் என்றே வழங்கப்பட்டது. எத்தனையோ திரிபுகள். அதிலொன்று நீளல். அப்பம் ஆப்பமானது. வணிகம் வாணிகமானது. இன்னும் சில இடங்களில் நிழல் என்ற சொல் நீழல் என்று வரும்.

ஒரு வடக்கத்திக் கதை. சந்திரகுப்த மவுரியர் நாட்டைக் கைப்பற்றுவதற்காக மிகுந்த யோசனையோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது இலையில் வைக்கப்பட்ட அப்பத்தின் நடுப்பாகத்தைப் பிய்த்ததும் கை சுட்டு விட்டதாம். “சூடாக இருக்கும் அப்பத்தை ஓரத்தில் இருந்தே பிய்த்துச் சாப்பிட வேண்டும்.” என்று அப்போது சாணக்கியர் சொன்ன அறிவுரையை அரசியலிலும் பயன்படுத்தி வெற்றி பெற்றார் என்றும் சொல்வார்கள்.

தமிழ்நாட்டு அப்பம் பாடலிபுத்திரத்துக்கு எப்படி சென்றதென்று தெரியவில்லை. ஷியாம் பெனகல் இயக்கிய பாரத் ஏக்.கோஜ் என்ற தொலைக்காட்சித் தொடரில் சந்திரகுப்தரைப் பற்றிய கதையில் மேலே சொன்ன நிகழ்ச்சியும் வந்தது. ஆனால் அப்பத்துக்குப் பதிலாக சாணக்கியர் சுடுசோற்றை வைத்து அறிவுரை சொன்னார். இருந்தாலும் என்ன… சூடுசோற்றை விட அப்பமே இந்த அறிவுரைக்குப் பொருத்தமாக இருக்கிறது என் கருத்து.

அடுத்து ஒரு தமிழ்க்கதை. பட்டினத்தாரை நமக்கெல்லாம் தெரியும். செல்வச் செழிப்பிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்த அவர் அனைத்தையும் உதறிவிட்டு துறவியானார். வீடுவீடாகச் சென்று கையேந்தி இரந்து உண்டார்.

தன்னுடைய தம்பி இப்படியெல்லாம் செய்வதைத் தாங்க முடியாத அக்காள் ஒருமுறை அப்பத்தில் நஞ்சை ஊற்றிக் கொடுத்து விட்டாராம்.

பட்டினத்தார் தன்னுடைய கையில் விழுந்த அப்பத்தைப் பார்த்ததும் அதில் நஞ்சு கலந்திருப்பதைப் புரிந்து கொண்டார். அந்த அப்பத்தை அக்காளின் வீட்டு ஓட்டுக்கூரை மேல் வீசி விட்டார். “தன்வினை தன்னைச் சுடும். ஓட்டப்பம் வீட்டைச் சுடும்” என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்.

அடுத்த நொடியே அந்த ஓட்டுக்கூரையில் தீப்பிடித்து விட்டதாம். பிறகு மனம் திருந்தி அக்காள் மன்னிப்பு கேட்கவும் நெருப்பு அணைந்ததாம்.

ஆப்பத்தைப் போல ஆப்பம் வருகின்ற கதைகளும் சுவையாகத்தான் இருக்கின்றன. என்ன இருந்தாலும் பிட்டுக்குப் பிரம்படி வாங்கிய பரமசிவன் ஆப்பத்துக்கு ஐந்தாறு அடிகள் வாங்கியிருக்கலாம்.

அன்புடன்,
ஜிரா

206/365