ஆழக்கடலில் தேடிய முத்தையா

கவியரசு கண்ணதாசன். நாலு வரி நோட்டின் நாயகர்களில் முதன்மையானவர். இவரை ‘தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர்’ என்ற புள்ளி  விவரத்தில் அடைத்தால்  ஒரு முழுமையான பிம்பம் நிச்சயம் கிடைக்காது.

திரைப்படப் பாடலாசிரியர் என்ற ஒரு பரிமாணத்தைப் பார்க்கலாம். நல்ல பாட்டு என்றால் இவர் எழுதியதாகவே இருக்கும் என்று தீர்மானமாக நம்பிய ஒரு தலைமுறை கொண்டாடிய கவிஞன். இவர் எழுதாத விஷயமே இல்லை என்றும் , அனுபவங்களையே பாட்டில் வைத்தார் என்று அவர் கவிதைகளை நேசித்தனர்.  அவரவர் வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் நிகழ்வுகளுக்கும் இவர் எழுதிய பாடல்களே reference. காதல், இலக்கியம், வாழ்வியல், தத்துவம், நாத்திகம்,அரசியல், புராணம், மதம் என்று எதை தொட்டாலும் இனிக்கும் நயம்.

இதையெல்லாம் தாண்டி இன்னொரு காரணம் உண்டு. ஒரு மூன்று மணிநேர திரைப்படத்தின் கதையை, கருவை, காட்சியை ஒரு சில வரிகளில் கொண்டு வரும் திறமை.  பாடல் வரிகளுக்குள்  ஒரு விஷுவல் element. நெஞ்சில் ஓர் ஆலயம் படமும் பாடல்களும் இதற்கு சிறந்த உதாரணம் என்று நினைக்கிறேன்.

படத்தின் கதை இதுதான். கல்யாண் குமாரும் தேவிகாவும் காதலர்கள். விதிவசத்தால் பிரிந்து, தேவிகா தான் மணந்து கொண்ட முத்துராமனின் நோயைக் குணப்படுத்த மருத்துவரிடம் செல்கையில், அவர் முன்னாள் காதலர் கல்யாண் குமார். கணவனுக்கும் இது தெரிந்துவிட, தான் இறந்தால் அவள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பும் கணவன். இதைக்கேட்டு அதிர்ந்து போகும் மனைவி. படத்தில் வரும் நாலு பாடல்களில் வரும் சில வரிகளை கேளுங்கள்

 மருத்துவர்,  முன்னாள் காதலர்

 https://www.youtube.com/watch?v=_s8f6qlwY0k

வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்

 கணவனுக்கு இது தெரிந்து, மறுமணம் பற்றி யோசிப்பது

https://www.youtube.com/watch?v=20qUiIEdzkY

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவது தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும்
மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்

மறுமணம் என்று கேட்டவுடன் பதறும் மனைவி

https://www.youtube.com/watch?v=4WGVo1Zh3Yw

சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என் உயிரே
இன்னொரு கைகளிலே யார் யார் யார் நானா
எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே
சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே

கணவன் தான் இறக்குமுன் அவளை மணக்கோலத்தில் வரச்சொல்லும் காட்சி. சத்தியவான் சாவித்திரி கதை சொல்கிறார்

https://www.youtube.com/watch?v=9OlWrb-ntl8

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ?

ஏன் இந்த கோலத்தைக் கொடுத்தயோ?

மாயப் பறவை ஒன்று வானில் பறந்து வந்து

வாவென அழைத்ததைக் கேட்டாயோ

பறவை பறந்து செல்ல விடுவேனோ?

அந்தப் பரம்பொருள் வந்தாலும் தருவேனோ?

உன்னை அழைத்துச் செல்ல எண்ணும் தலைவனிடம்

என்னையே நான் தர மறுப்பேனா?

நாலு பாடல்களில் படத்தின் கதை சொல்லும் வித்தை. மீட்டருக்கு மேட்டர் என்ற தளத்தில் சாகசம். அதற்குள் தத்துவம், இலக்கியம் சொல்லும் திறமை. அதுதான் கண்ணதாசன்.

‘பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்’ என்ற கவிதையில்

http://tamilaavanam.blogspot.in/2012/11/Kannadasan-Kavithaigal.html

   அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்

   ஆண்டவனே நீ ஏன்? எனக் கேட்டேன்!

   ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி

   “அனுபவம் என்பதே நான்தான்” என்றான்!

என்று ஆண்டவனைப்பற்றி எழுதிய வரிகள் அவர் கவிதைகளுக்கும் பொருந்தும். அனுபவித்தால்தான் இனிமை.

கவியரசர் பற்றி நிறைய செய்திகள், கட்டுரைகள், பாடல் உருவான விதம், ஆராய்ச்சிகள் என்று பல தகவல்கள். அதில் தேடியபோது ஒரு புதிய தகவல் படித்தேன். கவிஞர் மாலையிட்ட மங்கை என்ற படத்தில் எழுதிய ‘மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்’ https://www.youtube.com/watch?v=87pHmrrnrcs என்ற பாட்டை  சாகித்ய அகாதெமி 14 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது. இந்த பாடல் வரிகளை கேளுங்கள். சில ஆச்சரியங்கள்

அவர் நிரந்தரமானவர். அவர் எழுதிய பாடல்களும்தான்

மோகனகிருஷ்ணன்

205/365