காதல் காற்று

காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன்,
”காதல்” என்றாய்!

வைரமுத்து அவர்களின் வைர வரிகள். காதலர்களுக்கு எல்லாமே காதல்தான். மெதுவாகக் கதவைத் திறந்து வரும் காற்றுக்கும் காதல் என்று பெயர் வைக்க காதலர்களால் மட்டுமே முடியும். அதே காற்றுக்கு மற்றவர்கள் குளிர் என்றோ வாடை என்றோ பெயரிட்டிருப்பார்கள்.

கடவுள் நம்பிக்கை உள்ளவனும் இல்லாதவனுமாக இருவர் பேசிக் கொண்டார்கள்.

“என்னுடைய செயல்கள் எல்லாம் என்னாலேயே செய்யப்படுகின்றன. அவைகளைக் கட்டுப்படுத்தவும் அதிகப்படுத்தவும் என்னால் முடியும்.” என்றான் கடவுளை நம்பாதவன்.

“அப்படிச் சொல்லாதே. உன்னுடைய மூச்சு கூட உன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. அதைப் புரிந்துகொள்.” என்றான் உண்மையான நம்பிக்கையாளன்.

“அதெப்படி? நானே மூச்சை இழுக்கிறேன். நானே வெளியே விடுகிறேன். இது என் கட்டுப்பாட்டில் உள்ளதுதானே”

“உன் தாத்தனும் இப்படித்தானே மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டுக் கொண்டிருந்தான். அவன் கடைசியாக இழுத்த மூச்சை ஏன் வெளியே விடவில்லை? இப்போதாவது நம்முடைய கட்டுப்பாட்டை மீறிய ஒன்று நம்மை இயக்குவதை புரிந்து கொள்” என்றான் இவன்.

காற்றுதான் உயிர். நாசி வழியாகச் சென்றாலும் உடல் முழுவதும் பரவி வாழ்விப்பதும் காற்றுதான்.

இப்படி உயிராக இருக்கும் காற்றுக்குக் காதல் என்று பெயர் வைப்பது பொருந்துமா?

இந்தக் கேள்விக்கு விடை தேட எனக்குச் சிரமம் இருக்கவில்லை. காற்றுதான் காதல் என்று மகாகவி பாரதி என்றைக்கோ காற்று என்ற தலைப்பில் வசன கவிதை எழுதிவைத்துவிட்டான். வீட்டின் உத்தரத்தில் ஆடுகின்ற இரண்டு துண்டு கயிறுகளை வைத்து காற்று காதலாவதை அழகாக நிரூபித்து விட்டான். அதை அப்படியே தருகிறேன். படித்துப் பாருங்கள். பிறகு காற்றுக்குப் பெயர் காதலா இல்லையா என்று சொல்லுங்கள்.

ஒரு கயிறா சொன்னேன்? இரண்டு கயிறு உண்டு.
ஒன்று ஒரு சாண். மற்றொன்று முக்கால் சாண்.
ஒன்று ஆண்; மற்றொன்று பெண்; கணவனும், மனைவியும்.
அவையிரண்டும் ஒன்றையொன்று காமப்பார்வைகள் பார்த்துக்கொண்டும், புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டும், வேடிக்கைபேச்சுப் பேசிக்கொண்டும் ரசப்போக்கிலேயிருந்தன.
அத்தருணத்திலே நான் போய்ச்சேர்ந்தேன்.
ஆண் கயிற்றுக்குக் ‘கந்தன்’ என்று பெயர்.
பெண் கயிற்றுக்குப் பெயர் ‘வள்ளியம்மை’.
(மனிதர்களைப் போலவே துண்டுக் கயிறுகளுக்கும் பெயர் வைக்கலாம்.)

கந்தன் வள்ளியம்மைமீது கையைப்போட வருகிறது. வள்ளியம்மை சிறிது பின்வாங்குகிறது. அந்த சந்தர்ப்பத்திலே நான் போய்ச்சேர்ந்தேன்.
“என்ன, கந்தா, சௌக்கியந்தானா? ஒரு வேளை, நான் சந்தர்ப்பந் தவறி வந்துவிட்டேனோ, என்னவோ? போய், மற்றொருமுறை வரலாமா?” என்று கேட்டேன்.
அதற்குக் கந்தன்: — “அட போடா, வைதிக மனுஷன்! உன் முன்னேகூட லஜ்ஜையா? என்னடி, வள்ளி, நமது சல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்குக் கோபமா?” என்றது.
“சரி, சரி, என்னிடத்தில் ஒன்றும் கேட்கவேண்டாம்” என்றது வள்ளியம்மை.
அதற்குக் கந்தன், கடகடவென்று சிரித்துக் கைதட்டிக் குதித்து, நான் பக்கத்திலிருக்கும்போதே வள்ளியம்மையைக் கட்டிக்கொண்டது.

வள்ளியம்மை கீச்சுக்கீச்சென்று கத்தலாயிற்று. ஆனால், மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு சந்தோஷம். நாம் சுகப்படுவதைப் பிறர் பார்ப்பதிலே நமக்கு சந்தோஷந் தானே? இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்திதான், உள்ளதைச் சொல்லிவிடுவதிலே என்ன குற்றம்? இளமையின் சல்லாபம் கண்ணுக்குப் பெரியதோர் இன்பமன்றோ?

வள்ளியம்மை அதிகக் கூச்சலிடவே, கந்தன் அதைவிட்டு விட்டது. சில க்ஷணங்களுக்குப்பின் மறுபடிபோய்த் தழுவிக்கொண்டது. மறுபடியும் கூச்சல், மறுபடியும் விடுதல்; மறுபடியும் தழுவல், மறுபடியும் கூச்சல்; இப்படியாக நடந்து கொண்டே வந்தது.

“என்ன, கந்தா, வந்தவனிடத்தில் ஒரு வார்தைகூடச் சொல்ல மாட்டேனென்கிறாயே? வேறொரு சமயம் வருகிறேன், போகட்டுமா?” என்றேன்.
“அட போடா! வைதிகம்! வேடிக்கைதானே பார்த்துக் கொண்டிருக்கிறாய். இன்னும் சிறிதுநேரம் நின்று கொண்டிரு. இவளிடம் சில வ்யவஹாரங்கள் தீர்க்க வேண்டியிருக்கிறது. தீர்ந்தவுடன் நீயும் நானும் சில விஷயங்கள் பேசலாம் என்றிருக்கிறேன். போய் விடாதே, இரு” என்றது. நின்று மேன்மேலும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

சிறிதுநேரம் கழிந்தவுடன், பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நிற்பதை மறந்து நாணத்தை விட்டுவிட்டது. உடனே பாட்டு. நேர்த்தியான துக்கடாக்கள். ஒரு வரிக்கு ஒரு வர்ணமெட்டு.
இரண்டே ‘சங்கதி’. பின்பு மற்றொரு பாட்டு.

கந்தன் பாடிமுடிந்தவுடன், வள்ளி. இது முடிந்தவுடன் அது. மாற்றி மாற்றிப் பாடி — கோலாஹலம்!சற்றுநேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகிநின்று பாடிக்கொண்டே யிருக்கும். அப்போது வள்ளியம்மை தானாகவேபோய்க் கந்தனைத் தீண்டும். அது தழுவிக்கொள்ளவரும். இது ஓடும். கோலாஹலம்!

இங்ஙனம் நெடும்பொழுது சென்றபின் வள்ளியம்மைக்குக் களியேறி விட்டது. நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்துவிட்டு வரப் போனேன். நான் போவதை அவ்விரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை.

நான் திரும்பிவந்து பார்க்கும்போது வள்ளியம்மை தூங்கிக் கொண்டிருந்தது. கந்தன் என் வரவை எதிர்நோக்கியிருந்தது.

என்னைக் கண்டவுடன், “எங்கடா போயிருந்தாய், வைதிகம்! சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டாயே” என்றது.

இதுதான் அந்த வசனகவிதையின் ஒரு பகுதி.

இரண்டு அறுந்த கயிறுகள் உத்தரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. வீசுகின்ற காற்றுக்கு ஏற்றவாறு கயிறுகள் ஆடுகின்றன. அந்த ஆட்டத்தை ஒரு காதல் கதையாக்கி, அந்தக் கதையை ஒரு வசன கவிதையாக்கி.. காற்றைக் காதல் தேவனாக்கிய பாரதியை எப்படித்தான் பாராட்டுவது!

பாடல் – காற்றே என் வாசல் வந்தாய்
பாடியவர் – கவிதா கிருஷ்ணமூர்த்தி, உன்னி கிருஷ்ணன்
வரிகள் – வைரமுத்து
இசை – ஏ.ஆர்.ரகுமான்
படம் – ரிதம்
பாடலின் சுட்டி – http://youtu.be/oD16SYpgL7A

அன்புடன்,
ஜிரா

203/365